சுலோகம் -173

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-11

அர்ஜூனா எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ நானும் அவர்களை அதற்கேற்பவே அணுகுகிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் ஏதெனும் ஒரு வகையில் என்னுடைய வழியை பின்பற்றுகிறார்கள். அப்படி பின்பற்றும் பக்தர்கள் இந்த உலகத்தில் உள்ள என்னுடைய பல ரூபங்களை தாயாக தந்தையாக குருவாக தெய்வமாக நண்பனாக காதலனாக குழந்தையாக என்று பல வகைகளிலும் பல்வேறு பாவனைகளிலும் என்னை வழிபடுகிறார்கள். அவர்களது சிரத்தைகளுக்கு ஏற்ப அவர்களது பாவனைகளுக்கு ஏற்ப அவர்களை அணுகி அவர்களுக்கு அருள்புரிகிறேன்.

சுலோகம் -172

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-10

விருப்பத்தையும் அச்சத்தையும் கோபத்தையும் அறவே அற்றவர்களையும் வேறெதிலும் நாட்டமில்லாமல் என்னிடமே பிரேமையுடன் ஒன்றியவர்களும் என்னையே புகலாகக் கொண்டவர்களுமான பலரும் மேற்கூறிய ஞானம் என்னும் தவத்தினால் தூயவர்களாகி என் இயல்பை அடைத்திருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலக வாழ்க்கையில் விருப்பம் பயம் கோபம் ஆகிய குணங்களை விட்டொழித்து இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எதிலும் விருப்பமில்லாமல் அன்புடன் என்னிடம் சரணாகதி அடைந்த பலரும் சுலோகம் 171 ல் சொல்லப்பட்டபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்ளும் ஞானத்தை தவத்தினால் அடைந்து தூயவர்களாகி எனது இயல்பை பெற்று இருக்கிறார்கள்.

சுலோகம் -171

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-9

அர்ஜூனா என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை. அப்பழுக்கற்றவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இவ்விதம் எவன் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ அவன் உடலைத் துறந்து மறுபடியும் பிறவி எடுப்பதில்லை. என்னை அடைந்து விடுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா பிறப்பு உள்ளது போன்று தோன்றும் எனது உருவத்திலும் நேர்மையாக இருப்பவர்களை காக்கும் எனது செயலிலும் இந்த உலகிற்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்து தனது பாவங்களை அதிகரித்து கொள்பவர்களை அழிக்கும் எனது செயலிலும் எவன் உள்ளது உள்ளபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்கிறானோ அவனுக்கு பிறப்பு என்பது இல்லை. அவன் என்னை வந்து அடைந்து விடுகிறான்.

சுலோகம் -170

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-8

சாதுக்களை கடைத் தெற்றுவதற்காகவும் பாவச் செயல்களை செய்கிறவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் யான் யுகம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை அனுபவித்துக் கொண்டு இறைவனை சென்று அடைய வேண்டும் என்று நேர்வழியில் செல்பவர்களுக்கு துன்பம் ஏதும் நேராதபடி சரியான வழியை காண்பித்து அவர்கள் இறைவனடி சேர்வதற்காகவும் பாவச் செயல்களை செய்கின்றவர்கள் மேலும் பாவம் சேர்த்துக் கொள்ளாதபடி அவர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அனைவரும் தர்மத்தை கடைபிடிக்க செய்வதற்காகவே யுகம் தோறும் நான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

சுலோகம் -169

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-7

பரதகுலத் தென்றலே எப்போதெல்லாம் தர்மத்திற்கு குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் தர்மம் எப்போது குறைந்து அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அப்போது தர்மத்தை காப்பதற்காக நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

சுலோகம் -168

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-6

நான் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தும் கூட எல்லா உயிரினங்களுக்கும் ஈஸ்வரனாக இருந்தும் கூட என்னுடைய பிரகிருதியை வசப்படுத்திக் கொண்டு என்னுடைய யோகமாயையினால் வெளிப்படுகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எனக்கு ஆசைகளோ கர்மங்களோ எதுவும் இல்லை. ஆகையால் எனக்கு பிறப்பு என்பதும் அழிவு என்பதும் எப்போதும் இல்லை. ஆனாலும் மனிதர்களுடைய கண்ணுக்கு பிறப்பது போலவும் இறப்பது போலவும் தோன்றுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருந்தும் கூட சாதாரண மனிதனைப் போலவே காட்சி அளிக்கிறேன். நான் இந்த உலகத்தில் பல வடிவங்களில் அவதாரம் செய்யும் போது மனிதர்கள் தான் பிறப்பதாகவும் அவதார நோக்கம் முடிவடைந்ததும் நான் இறப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகின் அவதாரம் செய்து உலக நன்மைக்காக நான் செய்யும் லீலைகளை மனிதர்கள் பார்த்து அதிசயம் செய்கிறேன் என்று தான் எண்ணுகிறார்களே தவிர உலக நன்மைக்காக இதனை செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் நான் யோகமாயை என்னும் திரையில் ஒளிந்து கொண்டு வெளிப்படுகிறேன்.

சுலோகம் -167

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-5

கிருஷ்ணர் பதில் சொல்கிறார். எதிரிகளை வாட்டும் அர்ஜூனா எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்து விட்டது. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா நீயும் நானும் இப்போது தான் பிறந்திருக்கிறோம் என்று எண்ணாதே. இதற்கு முன்பு பல முறை பிறந்திருக்கிறோம். அவை அனைத்தையும் நீ அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் அறிந்து வைத்திருக்கிறேன். நீ அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் உனது அறிந்து கொள்ளும் தன்மையானது இந்த உலகத்தில் உள்ள பந்தங்களுடனும் பற்றுக்களுடனும் தர்மம் மற்றும் அதர்மங்களால் சூழப்பட்டு மாயையில் நீ சிக்கி இருப்பதினால் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் எப்படி அறிந்து வைத்திருக்கிறேன் என்றால் எந்த விதமான பந்தங்கள் பற்றுக்கள் இல்லாமல் இந்த உலகத்தில் ஒட்டாமலும் மாயையில் சிக்காமலும் எனது ஞானம் தடைபடாமல் இருப்பதால் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

சுலோகம் -166

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-4

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது. சூரியனுடைய படைப்பு வெகுகாலத்திற்கு முன்பு கல்பத்தின் ஆதியிலேயே நிகழ்ந்தது. நீங்கள் கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு இந்த யோகத்தை கூறினீர்கள் என்ற இந்த விஷயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனனுக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யோகத்தை கிருஷ்ணர் சுலோகம் 163 இல் சூரியனுக்கு சொன்னேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அர்ஜூனன் நீங்கள் பிறந்து சில காலம் தான் ஆகிறது. ஆனால் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு உபதேசித்துள்ளதாக சொல்கிறீர்கள். இக்காலத்தில் பிறந்த தாங்கள் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு சொன்னீர்கள் என்பதை நான் எப்படி புரிந்து கொள்வது என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

சுலோகம் -165

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-3

நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். ஆகவே அதே பழமையான இந்த யோகம் இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த யோகம் மிகச் சிறந்தது ரகசியமானது. அதாவது மறைத்துக் காப்பற்றப் பட வேண்டியது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நீ என்னை சரணடைந்து எப்போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டே இருக்கின்ற பக்தனாகவும் சிறந்த நண்பனாகவும் இருக்கின்றாய். உலகம் படைக்கப்பட்ட போது என்னால் சொல்லப்பட்டதும் மிகவும் ரகசியமாக மறைத்து காப்பாற்றப் பட்டதுமாகிய இந்த யோகத்தை நீ பெறத் தகுதி பெற்றவனாகி விட்ட படியால் இன்று நான் உனக்கு சொல்கிறேன். இந்த யோகத்தை இறைவனை சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கும் இந்த யோகத்தை கடைபிடிக்க முற்படும் தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கோ அல்லது இந்த யோகத்தை ஏளனமோ அவமரியாதையோ செய்பவர்களுக்கு சொல்லக் கூடாது. ஆகவே இதனை மறைத்து ரகசியமாக காப்பாற்ற வேண்டும்.

சுலோகம் -164

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-2

பார்த்தா இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள். அந்த யோகம் வெகு காலமாக மறைந்தாற் போல் ஆகிவிட்டது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

ராஜ ரிஷிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்?

கர்ம யோகத்தின் படி பற்றில்லாமல் அரசர்களாக வாழ்ந்திருந்து பின்பு அனைத்தையும் துறந்து சாதகங்கள் செய்து வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ராஜ ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இஷ்வாகு மன்னனைத் தொடர்ந்து அவரது வாரிசுகளும் இந்த யோகத்தை ஒருவர் பின் ஒருவராக தங்களது வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். மன்னனைத் தொடர்ந்து மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தார்கள். இப்படி வழிவழியாக பல தலைமுறைகள் இந்த யோகத்தை கடைபிடித்து பற்றில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். காலம் செல்லச் செல்ல உலகத்தினருக்கு போகமும் பற்றும் வளர வளர கர்ம யோகத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து இறுதியில் இந்த யோகத்தை சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் அழிந்தே விட்டது.