ராமாயணம் இறுதிப் பகுதி

ராமாயண காவியத்தின் இறுதியில் ராமாயணத்தை கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று வால்மீகி முனிவர் அருளியிருக்கிறார்.

ராமாயண கதையை தேவர்களும் சித்தர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் நித்தியம் கேட்கின்றனர். ராமாயணம் எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் அதனை கேட்டபடி இருப்பார். சூரிய உதயத்தின் போது அல்லது சூரியன் மறையும் போது கட்டுப்பாட்டுடன் நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அவ்வாறு தினந்தோறும் படிப்பவர்கள் புதல்வர்கள் மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வார்கள். ஆரோக்கியமான ஆயுளையும் நல்ல சௌபாக்யத்தையும் அடைவார்கள். புத்திரன் இல்லாதவர்கள் நல் புத்திரனைப் பெறுவார்கள். தனம் இல்லாதவர்கள் நல்தனத்தை பெறுவார்கள். சிரார்த்த காலத்தில் அறிஞர்களைக் கொண்டு ராமாயணத்தை சொல்ல வைக்க வேண்டும். இதனால் இதனை கேட்பவர்களுக்கு தங்களின் பற்றுக்களும் ஆசைகள் நீங்கி சொர்க்கம் செல்வார்கள். தினந்தோறும் ஒரு ஸ்லோகமாவது படித்தால் அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். ஒரு அத்தியாயத்தை தினந்தோறும் பக்தியுடன் ராம சிந்தனையோடு படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் (தலைமை குருவாக பதவி ஏற்றுக் கொள்ளும் போது செய்யப்படும் யாகம்) செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். பிரயாகம் தீர்த்தங்கள் புண்ணிய கங்கை நதி நைமிசம் போன்ற அடர்ந்த காடுகள் ஆகிய அனைத்திற்குத் சென்று கிடைக்கும் பலனை ராமாயணத்தைக் கேட்பதாலேயே பெறுவார்கள். கிரகண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ராமாயணத்தை பக்தியுடன் கேட்பவர்களும் படிப்பவர்களும் பெற்று எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகம் செல்வார்கள். எந்த வித கெட்ட எண்ணமும் இல்லாமல் பக்தியுடன் ராமாயணத்தை நினைப்பவர்கள் தீர்காயுள் பெற்று ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வார்கள்.

ராமாயணத்தை கதாகலட்சேபமாக சொல்பவர்களுக்கு அல்லது கதைகளாக சொல்பவர்களுக்கு உடை உணவு இருப்பிடம் பசு போன்றவற்றை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருந்தால் சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். இதனால் தானம் கொடுப்பவர்களுக்கு நீண்ட ஆயுளோடு சொர்க்கத்தையும் அடைவார்கள். ராமாயணத்தை ஒரு காண்டத்தின் முழு பகுதியையோ அரை பகுதியை கேட்பவன் கூட பிரம்மலோத்திற்கு சென்று அங்கு பிரம்மாவினால் மரியாதையுடன் வரவேற்கப்படுவான். எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். ராமாயணத்தை படித்து ராம நாமத்தை சொல்லி இறைவனின் திருவடியை அடைவோம். ராம ராம ராம ராம ராம.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 52

ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். உன் விருப்பப்படியே இந்த உலகத்தில் ராம கதை இருக்கும் வரை என் நாமம் உலகில் உள்ளவரை நீயும் இருப்பாய் மகிழ்ச்சியுடன் இரு என்று ஆசிர்வதித்தார். அதற்கு அனுமன் உங்கள் கட்டளைப்படியே உங்கள் நாமத்தை செபித்தபடி உலகில் இருப்பேன் என்றார். ராமர் அயோத்தியில் இருந்து கிளம்பி சரயூ நதியை நோக்கிக் கிளம்பினார். வேதியர்கள் மந்திரங்கள் சொல்ல அவர்களைப் பின் தொடர்ந்து ராமர் முன்னே சென்றார். அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் சென்றார்கள். பல பறவைகள் அவர்களுக்கு மேலே பறந்து பின் தொடர்ந்து வந்தது. பல வகையான விலங்குகளும் இந்த கூட்டத்தின் பின்னே வந்தது. சரயூ நதிக்கு ராமர் வந்து சேர்ந்தார். சரயூ நதியில் தண்ணீர் சுழல் சுழலாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பிரம்மா உட்பட பல தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். ராமர் மேலுலகம் செல்லத் தயாராக வந்து நின்ற இடத்தில் தேவர்கள் வந்த திவ்ய விமானங்கள் கோடிக் கணக்கில் இருந்தன. ஆகாயமே திவ்ய ஜோதி பரவி பிரகாசமாக இருந்தது. தேவர்கள் வானத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர். ராமர் சரயூ நதியில் கால் வைத்தவுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும் தேவ கணங்களும் வாத்யங்களை முழங்கினர். பிரம்மா ராமரிடம் பேச ஆரம்பித்தார். விஷ்ணுவான ராம உனக்கு மங்களம். உனது காலம் இன்றுடன் முடிகிறது. தாங்கள் தான் உலகுக்கு கதி. இதனை உணர்ந்தவர்கள் பூலோகத்தில் இல்லை. நினைத்து பார்க்க முடியாத உங்களின் அவதாரங்களை யாரலும் அறிந்து கொள்ள முடியாது. நீ இந்த உடலை விட்டு உனது இருப்பிடமான வைகுண்டத்திற்கு வந்து உனது இயல்பான சாரீரத்தை எடுத்துக்கொள் என்றார்.

ராமர் சராயூ நதிக்குள் இறங்கி நின்றார். அவரைத் தொடர்ந்து பரதனும் சத்ருக்கனனும் மக்கள் வானரங்கள் கரடிகள் என மொத்தம் முப்பதாயிரம் பேர் நதிக்குள் இறங்கினார்கள். அப்போது தேவர்கள் ஆதித்யர்கள் மருத்கணங்கள் ரிஷிகள் தேவகணங்கள் கந்தர்வர்கள் நாகர்கள் யட்சர்கள் தைத்யர்கள் தானவர்கள் ராட்சசர்கள் அனைவரும் நினைத்ததை சாதித்த பூர்ணமானவரே என்று போற்றி புகழ்ந்து வணங்கி நின்றார்கள். அப்போது ராமர் பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தார். இங்கு இருக்கும் மக்களில் எனக்காக ஆசைகளை துறந்து நான் எனும் எண்ணத்தை விட்டு ராம நாமத்திலேயே எண்ணத்தை வைத்து என்னுடனே இருக்க வேண்டும் என்று என்னை நம்பி வந்திருக்கும் அனைவருக்கும் தேவலோகத்தில் இடம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பிரம்மா உன்னை நம்பி பின் தொடர்ந்து வருபவர்கள் உன் விருப்பப்படி அவரவர்களுக்கு உண்டான மேல் உலகை அடையட்டும் என்று ஆசிர்வதித்தார். உன்னை நினைத்து உன்னுடன் வந்த பறவைகள் உட்பட அனைத்து ஜீவன்களும் மற்றொரு பிரம்மலோகம் போன்ற மேல் உலகில் வசிக்கட்டும் என்று ஆசிர்வதித்தார். உனது அவதாரத்திற்காக இந்த பூமியில் பிறந்த வானரங்களும் கரடிகளும் எந்த தேவனின் அம்சமாக பூமியில் தோன்றினார்களோ அந்த தேவதைகளுடனே அவர்கள் சேருவார்கள் என்று ஆசிர்வதித்தார். உடனே சராயூ நதி பொங்கி ராமருடன் சராயூ நதியில் இறங்கியவர்கள் அனைவரையும் தனக்குள் கொண்டு சென்றது. ராமர் தனது வைகுண்டத்திற்கு சென்றார். ராமரின் இரண்டு பகுதிகளான பரதனும் சத்ருக்கனனும் வைகுண்டம் சென்று லட்சுமணனுடன் சேர்ந்து ராமருடன் சேர்ந்தார்கள். சுக்ரீவன் சூரிய மண்டலத்திற்கு சென்றான். மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு உரிய பித்ரு லோகத்திற்கு சென்றார்கள். வானரங்களும் கரடிகளும் தேவலோகத்தின் பிரகாசமான தேவ சரீரத்துடன் ஒளி மயமாகி நின்றார்கள்.

ராமாயணம் சரித்திரம் உத்தர காண்டம் இந்த பகுதியோடு இந்த மகா காவியம் நிறைவு பெறுகிறது.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 51

ராமர் தனது அரசவையை கூட்டி வசிஷ்டரையும் தன் மந்திரிகள் மற்றும் நீதி முறைகளை அறிந்த அறிஞர்களையும் பரதனையும் வரவழைத்தார். நான் இந்த உலகத்தை விட்டு செல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது. அதனால் அயோத்தி நகருக்கு அரசனாக பரதனை முடிசூட்டி ராஜ்யத்தில் அமர வைக்க முடிவு செய்திருக்கிறேன். இனி அயோத்திக்கு அரசனாக பரதன் இருப்பான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். ராமரின் உத்தரவைக் கேட்டு திகைத்து நின்ற அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ராஜ்யம் என்ற சொல்லையே கேட்கப் பிடிக்காதவனாக பரதன் பேச ஆரம்பித்தான். சொர்க்கமே ஆனாலும் நீங்கள் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். நீங்கள் இல்லாத ராஜ்யத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன். ராஜ்யத்தின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. இப்போது ராஜ்யத்தை ஆள்வதற்கு குச லவர்கள் இருக்கிறார்கள். அதற்கான தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. அயோத்தியை இரண்டாகப் பிரித்து கோசல தேசத்திற்கு குசனையும் உத்தர தேசத்திற்கு லவனையும் அரசனாக்கி முடி சூட்டி வைத்து விடலாம். தாங்கள் செல்லும் இடத்திற்கு நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என்றான் பரதன். பரதனின் கோரிக்கையை ராமர் ஏற்றுக் கொண்டார்.

ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். மக்களைப் பார். இவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்திருந்து கொள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யாதே என்றார். உடனே ராமன் சபையில் இருந்த மக்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டான். அனைவரும் ஏகோபித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுடன் நாங்களும் வருகிறோம். உங்களின் இறுதிக்காலத்தையும் தாண்டி உங்களுடன் இருக்க விரும்புகிறோம். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களை பின் தொடர்ந்து நாங்களும் வருகிறோம் எங்களை தடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். மக்களின் விருப்பத்தை ராமர் ஏற்றுக் கொண்டார். பரதனின் யோசனைப்படி கோசல தேசத்துக்கு குசனையும் உத்திர தேசத்துக்கு லவனையும் அரசனாக்கி அனைத்து பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.

ராமர் தனது தூதர்களை அழைத்து சத்ருக்னன் இருக்கும் மதுராம் என்ற நகருக்கு சென்று அயோத்தியில் நடந்த நடக்கப் போகும் செய்திகளை அவனிடம் சொல்லி சத்ருக்கனனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். தூதர்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து மதுராம் நகரை அடைந்தார்கள். சத்ருக்னனிடம் லட்சுமணன் அயோத்தியை விட்டு சென்றதையும் ராமர் இவ்வுலகத்தை விட்டு செல்ல இருப்பதையும் தங்களை ராமர் சந்திக்க விரும்புகிறார் ஆகையால் தாங்கள் அயோத்திக்கு உடனடியாக வர வேண்டும் என்று ராமர் செய்தி அனுப்பினார் என்று தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட சத்ருக்கனன் தானும் ராமருடன் தானும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். தான் ஆட்சி செய்து வந்த மதுராம் நகரை இரண்டாக பிரித்து தனது மகன்களான சுதாகு சுருதசேனன் இருவரையும் அரசனாக்கினான். சேனைகள் செல்வங்கள் அனைத்தையும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்து விட்டு ராமரைப் பார்க்க வேண்டும் என்று விரைவாக அயோத்தி வந்த சேர்ந்தான் சத்ருக்கனன். தனது வணக்கத்தை ராமருக்கு தெரிவித்த சத்ருக்கனன் என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்னை தடுக்காதீர்கள் என்றான். ராமரும் சத்ருக்கனனுக்கு அனுமதி கொடுத்தார். ராமர் உலகை விட்டு செல்லப் போகிறார் என்ற செய்தி கேட்டு சுக்ரீவன் தனது பரிவாரங்களுடனும் வீபீஷணன் தனது பரிவாரங்களுடனும் வந்து சேர்ந்தார்கள். சுக்ரீவன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். அங்கதனை எனது ராஜ்யத்திற்கு அரசனாக்கி விட்டுத்தான் வந்திருக்கிறேன். நானும் உங்களுடனேயே வருகிறேன் என்றான். ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றார். விபீஷணனிடம் ராமர் பேச ஆரம்பித்தார். மக்கள் உள்ள வரை நீ இலங்கையில் பேசப்படுவாய். மக்களுக்காக நீ தொடர்ந்து உனது ராஜ்யத்தை ஆட்சி செய் என்று கேட்டுக் கொண்டார். விபீஷணனும் ராமரிடம் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 50

ராமனிடம் துர்வாச முனிவர் வந்திருப்பதாக உடனடியாகச் சென்று சொல். இல்லை என்றால் ராமருடன் சேர்த்து இந்த நாட்டையும் மக்களையும் உன்னையும் உங்களைச் சார்ந்த உறவினர்களையும் உங்களுடைய சந்ததிகளையும் சேர்த்து அனைத்தையும் என் தவ பலத்தால் பொசுக்கி விடுவேன் என்றார். அதி பயங்கரமாக துர்வாச முனிவரிடமிருந்த வந்த வார்த்தைகளை கேட்டதும் லட்சுமணன் திடுக்கிட்டு நின்றான். லட்சுமணன் சிறிது நேரம் யோசித்தான். ராமரின் கட்டளைப்படி என் ஒருவனுக்கு மரணம் வந்தால் பரவாயில்லை. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட லட்சுமணன் ராமரின் அறைக்குள் சென்று செய்தியைத் தெரிவித்தான். லட்மணன் சொன்னதைக் கேட்டதும் ராமர் யமதர்மர் வேடத்தில் இருந்த முனிவரை அனுப்பி விட்டு துர்வாசரை வணங்கி வரவேற்று என்ன காரியம் சொல்லுங்கள் என்று கேட்டார். இன்றுடன் நான் ஆயிரம் வருடங்கள் உணவு அருந்தாமல் தவம் செய்து முடித்திருக்கிறேன். அதனால் இப்போது எனக்கு நல்ல உணவு வேண்டும். உன்னால் முடிந்தவரை எனக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய் என்றார். இதைக் கேட்ட ராமர் அவசரமாக முனிவரின் உணவிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அமிர்தத்திற்கு இணையான அந்த உணவை உண்ட துர்வாச முனிவர் திருப்தி அடைந்தார். ராமரை வாழ்த்தி விட்டு தன் ஆசிரமத்திற்கு சென்றார். துர்வாச முனிவர் சென்றபின் யமதர்மரின் எச்சரிக்கை ராமருக்கு ஞாபகம் வந்தது. அதனை நினைத்து மிகவும் வேதனைக்குள்ளானார். தலை குனிந்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். யமதர்மரின் எச்சரிக்கை சொல் திரும்பத் திரும்ப ராமரின் மனதில் வந்து அலைக்கழித்தது.

ராமரின் மனநிலையை அறிந்து கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். கொடுத்த வாக்கை நிறை வேற்றாத அரசர்கள் நரகம் செல்வார்கள் என்பது நியதி. எனக்குத் தண்டனை கொடுங்கள். முனிவருக்கு கொடுத்த வாங்கின் படி மரண தண்டனையே எனக்கு கொடுத்து தர்மத்தை காப்பாற்றுங்கள். என்னைப் பற்றி வருந்தாதீர்கள். என்னுடைய மரணம் பிரம்மாவால் நான் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை யமதர்மர் நிறைவேற்ற காத்திருக்கிறார். நான் இறந்த பிறகு சில நாட்கள் மனம் மிகவும் வருத்தமாகத் தான் இருக்கும். அதன் பிறகு அனைத்தும் சரியாகி விடும் என்றான். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளான ராமர் குல குரு வசிஷ்டரை வரவழைத்து நடந்தவைகள் அனைத்தையும் கூறி ஆலோசனை கேட்டார். ராமரிடம் வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். அரசன் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆகவேண்டும். கொடுத்த வாக்கை மீறுவது தர்மத்திற்கு புறம்பானது. அரசன் ஒருவன் தர்மத்தை மீறினால் அந்த நாடும் நாட்டு மக்களுக்கும் பெரிய கேடுகள் வந்து சேரும். அதனால் லட்சுமணனை தியாகம் செய்து உன்னுடைய தர்மத்தை நிலைநிறுத்து என்றார்.

ராமர் தீவிரமாக யோசனை செய்து ஒரு முடிவு செய்து லட்சுமணனை வரவழைத்தார். முனிவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் இப்போது உன்னை எனது தம்பி என்ற நிலையில் இருந்து தியாகம் செய்கிறேன். உன்னை கொல்வதை விடவும் என்னை விட்டு நீ பிரிந்திருப்பது மரண தண்டனையை விடக் கொடுமையானது என்று எண்ணுகிறேன். அதனால் அதனை அனுபவிக்க நீ உடனே நாட்டை விட்டு வெளியேறு இனி என்னை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றார். ராமர் சொன்னதைக் கேட்ட லட்சுமணன் மனம் வேதனை அடைந்து கண்களில் நீர் தழும்ப அங்கிருந்து வெளியேறினான். தன் வீட்டுப் பக்கம் செல்லாமல் நேராக சரயூ நதிக்கரை சென்று நீரில் மூழ்கி தன் சுவாசத்தை வெளி விடாமல் அடக்கிக் கொண்டான் லட்சுமணன். மூச்சை அடக்கி நீரினுள் கிடந்தவனைப் பார்த்து இந்திரனுடன் வந்த தேவ கணங்களும ரிஷிகளும் பூமாரி பொழிந்தனர். இந்திரன் லட்சுமணனைத் தூக்கி தேவலோகத்தில் சேர்ப்பித்தான். விஷ்ணுவின் நான்கில் ஒரு பாகம் வந்து சேர்ந்து விட்டது என்று தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 49

ராமனிடம் சென்ற லட்சுமணன் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். யார் என்று தெரியவில்லை. தங்களைக் காண அனுமதி கேட்கிறார் என்று தெரிவித்தான். இதைக் கேட்ட ராமர் முனிவரைக் காண அரண்மனை வாயிலுக்கு வந்தார். மிகுந்த தேஜசுடன் இருந்த முனிவரை கண்ட ராமர் அவருக்கு தக்க மரியாதை செய்து வரவேற்றார். ராமரின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அவரை வாழ்த்தினார் முனிவர். ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். மகா முனிவரே தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லுங்கள். என்னால் தங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் தயங்காமல் கேளுங்கள் என்னால் இயன்றதை செய்கிறேன் என்றார் ராமர். அதற்கு முனிவர் நான் உனக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அதனை உன்னிடம் சொல்ல வேண்டுமானால் சொல்வதற்கு முன்பாக நீ எனக்கு ஒரு உத்திரவாதம் கொடுக்க வேண்டும் அதற்கு சம்மதித்தால் சொல்கிறேன் என்றார். ராமரும் சம்மதிக்க நாம் பேச ஆரம்பித்ததும் இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ நாம் பேசுவதைக் கேட்டாலோ நீ அவர்களை கொன்று விட வேண்டும் என்றார். உடனே ராமர் லட்சுமணனிடம் சென்று வாசலில் நீ காவலுக்கு நில். மற்ற காவல்காரர்களை அனுப்பி விடு. நாங்கள் உள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையில் வந்தாலும் அவர்களை கொல்வதற்கு கட்டளையிட வேண்டியிருக்கும் ஆகையால் எச்சரிக்கையுடன் காவலுக்கு இரு என்று சொல்லி விட்டு முனிவருடன் தனது தனி அறைக்கு வந்தார். இனி நீங்கள் கொண்டு வந்த தகவலை என்னிடம் சொல்லலாம் நமக்கு இடையில் யாரும் வர மாட்டார்கள். நீங்கள் கொண்டு வந்த தகவலை கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்லுங்கள் என்றார்.

ராமரிடம் பேச ஆரம்பித்தார் முனிவர் வேடத்தில் இருந்த யமதர்மர். பிரம்மா என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார். சகலத்தையும் சம்ஹாரம் செய்யும் காலன் நான். உயிராகப் பிறந்தவர்களின் இறுதி காலத்தில் அவர்களை அழைத்துச் சென்று விடுவது எனது தொழில். ராவணனால் உலகில் மக்கள் பயந்து நடுங்கும் போது அவர்களை காக்க விஷ்ணுவாகிய தாங்கள் மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டீர்கள். நூறாயிரம் வருடங்கள் மேலும் பல நூறு ஆண்டுகள் நீங்கள் இங்கு வாழ்ந்து விட்டீர்கள். இந்த யுகத்திற்கான மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள் இது. இப்போது நீங்கள் உங்களின் இருப்பிடமான வைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் காலம் நெருங்கி வந்து விட்டது. நீங்கள் உடனடியாக வைகுண்டம் திரும்பலாம் இல்லையென்றால் தங்களின் விருப்பம் போல சில காலம் இங்கு நீங்கள் தங்கியிருக்கலாம் முடிவு உங்களுடையது. இந்த செய்தியை பிரம்மா என்னிடம் சொல்லி அனுப்பினார் என்று சொல்லி முடித்தார் முனிவர் வடிவில் வந்த யமதர்மர்.

ராமர் முனிவரிடம் பேச ஆரம்பித்தார். பிரம்மாவிடமிருந்து அற்புதமான செய்தியை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். பிரம்மாவின் கூற்றுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன். அரசனுக்காக இந்த பதவியை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விரைவாக இங்கிருந்து கிளம்புகிறேன் என்றார் ராமர். ராமரும் முனிவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது தவ வலிமை மிக்க துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவருக்கு தகுந்த மரியாதைகள் செய்து வரவேற்றான் லட்சுமணன். ராமரிடம் முக்கியமான தகவலை சொல்ல வேண்டும் எனவே நான் விரைவில் அவரை பார்க்க வேண்டும் என்று ராமரின் அறைக்குள் செல்ல முயற்சித்தார் துர்வாச முனிவர். இதனைக் கண்ட லட்சுமணன் துர்வாச முனிவரிடம் பணிவாக பேச ஆரம்பித்தான். ராமர் மிகவும் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இடையில் யாருடைய குறுக்கிடும் இருக்கக்கூடாது என்று எனக்கு கட்டளை யிட்டிருக்கிறார். எனவே தங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். என்னால் இயன்ற வரை தங்களுக்கு செய்து கொடுக்கின்றேன். என்னிடம் சொல்ல இயலாது என்றால் ராமரின் அனுமதிக்காக சிறிது நேரம் காத்திருக்கள் என்று மரியாதையுடன் கூறினான். இதைக் கேட்ட முனிவர் கோபம் கொண்டார். ஆத்திரம் கண்களை மறைக்க கண்களாலேயே லட்சுமணனை எரித்து விடுபவர் போல பார்த்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 48

ராமர் பிரம்மாவின் வார்த்தைகளில் அமைதியடைந்தார். லவ குசர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார். அயோத்திக்கு லவ குசர்கள் வந்ததை மக்கள் திருவிழாவைப் போல் கொண்டாடினார்கள். அரண்மனைக்கு திரும்பிய ராமர் தனது குழந்தைகள் தன்னுடன் வந்திருப்பதை நினைந்து மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த உலகத்தை விட்டு சீதை சென்றது இந்த உலகமே சூன்யமாக இருப்பதைப் போல் உணர்ந்தார். வால்மீகி முனிவர் எழுதிய ராம கானத்தை பிரம்மா சொன்னபடி தினந்தோறும் கேட்க ராமர் ஏற்பாடுகளை செய்தார். அஸ்வமேத யாக குதிரை உலகம் முழுவதும் சுற்றி யாக சாலைக்குள் வந்தது. யாகத்தை நிறைவு செய்த ராமர் யாகம் செய்த அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் யாகத்திற்கு உதவி செய்தவர்களுக்கும் தட்சணைகள் தானங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். யாகம் இனிதாக நிறைவு பெற்றது. ராமர் அனைத்து அரசர்களுக்கு எல்லாம் அரசனான சக்ரவர்த்தி என்று தன்னை அறிவித்துக் கொண்டார். ஆனாலும் ராமருக்கு மன அமைதி அருகில் கூட வர மறுத்தது மிகவும் வேதனையை அனுபவித்தார். லவ குசர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். இரவு பகல் பார்க்காமல் யாகம் செய்யும் அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் கணக்கில்லாத பசுக்களையும் பெரும் செல்வத்தையும் தானம் கொடுத்து திருப்தி செய்தார். ராமரது ஆட்சியில் நாட்டில் காலத்திற்கு சரியாக மழை பொழிந்தது. மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்ந்தார்கள். எந்த பிராணியும் வியாதியால் கூட வாடவில்லை. யாரும் அகால மரணம் அடையவில்லை. இந்த விதமான துர்சம்பவங்களும் நடைபெறவில்லை. அனைவருக்கும் நன்மை மட்டுமே கிடைத்தது, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

ராமரின் ஆட்சிக் காலம் தர்மத்தின் ஆட்சி என்று போற்றப்பட்டது. ராமர் இவ்வாறு பல ஆண்டு காலம் சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார். லட்சுமணனுக்கும் பரதனுக்கும் சத்ருக்கனனுக்கும் திருமணம் நடந்தி வைத்தார் ராமர். மூவருக்கும் தலா இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். லட்சுமணனின் மகன்கள் இருவருக்கும் அங்கதன் சந்திரகேது என்று பெயரிட்டார்கள். பரதனின் மகன்களுக்கு தட்சன் புஷ்கரன் என்று பெயரிட்டார்கள். சத்ருக்கனனின் மகன்களுக்கு சுதாகு சுருதசேனன் என்று பெயரிட்டார்கள். பல ஆண்டு காலம் சென்ற பின் பல விதமான தானங்களும் தர்மங்களும் செய்து வாழ்ந்தவளான ராமரின் தாய் கௌசலை சொர்க்கம் சென்றடைந்தாள். அவளைத் தொடர்ந்து சுமித்ரையும் கைகேயியும் சென்றனர். இவர்களுக்கான பித்ரு தானங்களை ராமர் செய்து முடித்தார். ஒரு நாள் ராமர் தனது சகோதரர்கள் மூவரையும் அழைத்தார். உங்களது மூவரின் மகன்களும் கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள். தர்மம் நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும் சந்திர கேதுவும் தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்திற்கு முடி சூட்டி அரசர்களாக அமர்த்த வேண்டும். எதிரிகளின் தொந்தரவு இல்லாத நலமாக இருக்கும் இடமாகப் பார்த்து இவர்களுக்கு தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்று லட்சுமணனை கேட்டுக் கொண்டார் ராமர்.

ராமர் இவ்வாறு சொன்னதும் அதற்கு பரதன் பதில் கூறினான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது அங்கு அங்கதனை நியமிக்கலாம். அதே போல் சந்திர காந்தம் என்ற பெயரில் ஒரு தேசம் இருக்கிறது அங்கு சந்திரகேதுவை நியமிக்கலாம் என்றான். பரதன் சொன்னபடியே அங்கதனையும் சந்திரகேதுவையும் அரசனாக்கி முடி சூட்டினார் ராமர். அங்கதனுக்கு லட்சுமணனும் சந்திரகேதுவுக்கு பரதனும் சென்று நிர்வாகம் செய்வதைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள் சில காலம் சென்றது. பரதனும் சத்ருக்கனனும் ராமருக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர். மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர். ஒரு நாள் எமதர்மர் முனிவரின் வேடத்தை தரித்து அரண்மனை வாசலில் வந்து நின்றார். வாசலில் நின்ற முனிவரை லட்சுமணன் வரவேற்றான். லட்சுமணனிடம் முனிவர் ராமரை பார்க்க வேண்டும் அனுமதி பெற்று வா என்று கேட்டுக் கொண்டார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 47

ராமர் என்ன நடக்கப் போகிறது என்பதை யுகித்துக் கொண்டவராக சீதையை பிடிக்க அவளருகில் ஓடினார். அந்த கண நேரத்தில் பூமி இரண்டாகப் பிளந்தது. பூமிக்குள்ளிருந்து உத்தமமான சிம்மாசனத்தில் பூமித்தாயான தரணி தேவி திவ்யமான அலங்காரத்துடன் வெளி வந்தாள். சீதையின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு தன்னுடைய சிம்மாதனத்தில் அருகில் அமர்த்திக் கொண்டாள். தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். பூமித்தாய் தன்னுடைய பூமியிலிருந்து சீதையை ஜனகருக்கு எப்படிக் கொடுத்தாலோ அது போலவே தற்போது சீதையுடன் பூமிக்குள் சென்று விட்டாள். முனிவர்களும் ரிஷிகளும் தேவர்களும் சீதையை வாழ்த்திய சத்தம் விண்ணை முட்டியது. அங்கு ராமருடன் வந்த படைகள் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் ராமரைப் பார்த்தவாறு திகைத்து நின்றனர். ராமர் ஒன்றும் செய்ய இயலாதவராக துக்கத்துடன் லவ குசர்களை பார்த்தவாறு நின்றார். லவ குசர்கள் வால்மீகி முனிவரை பார்த்தவாறு நின்றனர். ஒருவருக்கொருவர் பார்த்தபடி யாரும் எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடம் மிகவும் நிசப்தமானது. அனைத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் அமைதியுடன் நின்றிருந்தார்.

ராமர் மனம் கலங்கியபடி பேச ஆரம்பித்தார். இது போல் சீதைக்கு எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகத் தான் சீதையின் காதுகளில் இந்த செய்தி விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். இப்போது வால்மீகி முனிவரிடன் சொல்ல வேண்டிய சூழ்நிலையால் நானே சொல்லி விட்டேன். என்னுடைய சீதையை நான் இனி மேல் பார்க்க மாட்டேன். இது வரை நான் அனுபவிக்காத வேதனை என் மனதை வாட்டுகிறது. கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல் இந்த வேதனை என்னை தாக்குகிறது. என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நின்று விட்டேன் என்று புலம்பிய ராமர் திடீரென்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார். முன்பு இலங்கையிலிருந்து சீதையை மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து சீதையை எனக்கு மீட்டு வரத் தெரியும் என்ற ராமர் பூமித்தாயே நீ தான் சீதையை ஐனகருக்கு கொடுத்தாய். உன்னுடைய மகளான சீதை புனிதவதி என்று உலகத்திற்கு எடுத்துக் கட்ட உன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டாய். உலகமும் சீதையைப் பற்றி தெரிந்து கொண்டு விட்டது. அதனால் என்னுடைய சீதையை இப்போது எனக்கு திருப்பிக் கொடுத்துவிடு. நீ திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் என்னையும் உன்னுடனேயே அழைத்துச் சென்று விடு பூமிக்கு அடியில் சீதை இருக்கும் இடத்தில் நானும் இருந்து கொள்கிறேன். இரண்டினில் எதாவது ஒன்றை செய்து விடு. என்னுடைய பேச்சை நீ அலட்சியம் செய்தால் இந்த வனம் மலைகள் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் நாசம் செய்து விடுவேன். பூமியே இல்லாதபடி எங்கும் தண்ணீரால் நிரப்பி விடுவேன் அதற்கு எற்ற தவ பலனும் வலிமையும் என்னிடம் இருக்கிறது விரைவாக சீதையை என்னிடம் கொடுத்து விடு என்றார்.

ராமரின் வருத்தத்தையும் கோபத்தையும் பார்த்த பிரம்மா அவரை சமாதானம் செய்ய தேவர்கள் சூழ அங்கு வந்து ராமரிடம் பேச ஆரம்பித்தார். ராம இப்படி வருத்தப்படாதே சூழ்நிலையை சமாளித்துக் கொள். உன்னுடைய இயல்பான தன்மைக்கு வா உன்னுடைய அவதாரத்தை சிறிது நினைவு படுத்திப்பார். சீதை உன்னையே தெய்வமாக துதித்து வாழ்ந்தவள். இந்த உலகத்தில் பெண்ணானவள் எந்த சோதனைகள் வந்தாலும் இப்படியும் வாழ முடியும் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டி விட்டுச் சென்று விட்டாள். தற்சமயம் தன் தவ வலிமையால் பூமாதேவியுடன் பாதாள லோகம் சென்று விட்டாள். உன்னுடைய வைகுண்டத்திற்கு நீ செல்லும் போது நிச்சயம் உன்னுடன் வந்து சேருவாள் கவலைப்படாதே. ஒரு நிகழ்ச்சியையும் விடாமல் விவரித்து உனது வரலாற்றை வால்மீகி முனிவர் திவ்யமாக சத்ய வாக்கியமாக தெளிவாக அற்புதமாக ராம காவியமாக படைத்திருக்கிறார். நீ உன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு முழுவதுமாக இதனைக் கேள். இனி நடக்க இருப்பதையும் தெரிந்து கொள். உனக்காகத் தான் வால்மீகி முனிவர் இதனை இதனை இயற்றினார். இதனை படித்து கேட்டு விமர்சிக்க உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது. உன்னை நம்பி இப்போது லவ குசர்கள் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டிய கடமை இப்போது உனக்கு இருக்கிறது. எனவே அமைதி கொள். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதில் உன்னுடைய கருத்தை செலுத்து என்று ராமரை அமைதிப்படுத்திய பிரம்மா அங்கிருந்து சென்றார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 46

ராமர் தொடர்ந்து பேசினார். இவ்வாறு மக்கள் பேசுவது சீதைக்கு தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் அரசனுக்கான தர்மத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையக் கூடாது என்ற காரணத்திற்காவும் சீதையை காட்டிற்கு அனுப்பினேன். இப்போது உங்கள் சத்திய வாக்கே இவள் புனிதமானவள் என்று இந்த மக்களுக்கு நிரூபிக்கப் போதுமானது என்று நம்புகிறேன். முக்காலமும் அறிந்த தாங்கள் சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல் என்று கூறியதால் இனி தர்மத்திற்கு எந்த இடையூரும் வராது சீதையின் மீது எந்த பழிச்சொல்லும் வராது என்று நம்புகிறேன். ஆகையால் உங்கள் சொல்படி சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார் ராமர். ராமர் வால்மீகி முனிவரிடம் பேசியதைக் கேட்ட சீதை என் மீது குற்றம் சொல்லி விட்டார்களா? என்று நடுங்கியபடி நின்றாள். சீதையிடம் வந்த வால்மீகி முனிவர் அயோத்திக்கு நீ ராமருடன் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் செல்வது உனது விருப்பம் எதுவாக இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே யோசித்து நல்ல முடிவாகச் சொல் என்று கேட்டுக் கொண்டார். சீதை ராமருடன் செல்வாரா அங்கே என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சீதை என்ன செய்யப் போகிறார் என்று அவளின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் இருந்தார்கள். நன்கு யோசனை செய்த சீதை லவ குசர்களை ராமரிடம் ஒப்படைத்தாள். இத்தனை காலம் என்னுடன் இருந்த நம்முடைய இரண்டு குழந்தைகளையும் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இனி நீங்கள் இவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ராமரை வணங்கிவிட்டு சிறிது தூரத்தில் சென்று நின்றாள். ராமர் சீதையின் வார்த்தைகளை எதிர்பார்த்த படி ஆவலுடன் இருந்தார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். என்னை ஏன் காட்டிற்கு அனுப்பினீர்கள் என்று தெரியாமல் இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். இக்காட்டில் என்னை தனியாக லட்சுமணன் விட்டுச் செல்லும் போதும் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். நீங்கள் என்ன செய்தாலும் அதில் தர்மம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதினால் உங்களின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டேன். இப்போது நான் ஏன் காட்டிற்கு வந்தேன் என்ற காரணத்தை தெரிந்து கொண்டேன். அயோத்தியில் உள்ள சில மக்களிடம் இருக்கும் தவறான எண்ணத்தை சரியான எண்ணமாக மாற்ற வேண்டிய கடமை ராமரின் மனைவியான எனக்கு இருக்கிறது. நான் தூய்மையானவள் என்பதை உலகிற்கு உணர்த்த என்னை அக்னியில் இறக்கினீர்கள். ஆனாலும் மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணி விட்டார்கள். அதற்கு காரணம் இலங்கையில் நடந்ததை இங்கிருக்கும் மக்கள் யாரும் பார்க்கவில்லை என்றீர்கள். இப்போது வால்மீகி முனிவர் தன்னுடைய ஆயிரக்கணக்கான வருட தவ பலன்களையே சாட்சியாக வைத்து நான் புனிதமானவள் என்று இங்கிருக்கும் மக்களிடம் சொல்லி விட்டார் அதனால் இனி மக்கள் என்னைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்கிறீர்கள். உங்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் வால்மீகி முனிவர் நம்முடைய வரலாற்றை கதையாக எழுதி வைத்திருக்கிறார். பிற்காலத்தில் வரும் சந்ததியினர் இக் கதையை படித்து விட்டு என்னை புனிதமற்றவள் என்று கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது ஏனெனில் அவர்கள் இலங்கையில் நடந்தவற்றையும் பார்க்கவில்லை. வால்மீகி முனிவரின் சொல்லையும் கேட்கவில்லை. யாரேனும் அவ்வாறு சிந்தித்து விட்டால் கூட நீங்கள் கடைபிடித்த தர்மத்திற்கும் உங்களின் புகழுக்கும் சிறிதாவது கலங்கம் ஏற்பட்டு விடும். அதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகையால் எக்காலத்திற்கும் இருக்கும் அனைவருக்கும் தெரியும்படியாக நான் இப்போது ஒரு சத்தியம் செய்கிறேன். பூமித் தாயே நான் ராமரைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருந்தது உண்மையானால் என்னுடைய மனம் வாக்கு காயம் செயல் அனைத்தும் ராமனை எண்ணிய படியே நான் இருந்தது உண்மையானால் ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்தியமானால் பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு என்று பூமியைப் பார்த்தபடி நின்றாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 45

ராமரும் சிறுவர்களும் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த வால்மீகி முனிவர் யுத்தத்தை நிறுத்துங்கள் என்றார். வால்மீகி முனிவரின் குரலைக் கேட்டதும் சிறுவர்கள் இருவரும் அவரது அருகில் வந்து அவரின் பாதங்களில் வீழ்ந்து தங்களின் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள். ராமரும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு அவருக்கு மரியாதைகள் செய்தார். ராமரை கண்ட மகிழ்ச்சியில் செய்வதறியாமல் சிலை போல் நின்றாள் சீதை. வால்மீகி முனிவர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். சீதை பாபமற்றவள் மாசற்றவள் எண்ணத்திலும் செயலிலும் பரிசுத்தமானவள் என்பதால் என் ஆசிரமத்தில் அடைக்கலம் கொடுத்து இத்தனை நாட்களாக பாதுகாத்து வந்திருக்கிறேன். கணவனே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். உன்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்காதவள். உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக நீ சீதையை தியாகம் செய்தாய். சீதை இக்காட்டிற்கு வரும் போது கருவுற்றிருந்தாள். இந்த வனத்தில் அவளுக்குப் பிறந்தவர்கள் தான் இந்த இரட்டையர்களான லவ குசர்கள். இருவரும் உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். பல ஆயிர வருட காலம் நான் தவம் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வது தவறாக இருந்தால் என் தவப் பலன்கள் அனைத்தும் வீணாகப் போகட்டும். நான் சொல்வது சத்தியமே. இனியாவது சீதையை அயோத்திக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி முடித்தார்.

ராமர் தங்களது தந்தை என்று வால்மீகி முனிவரின் பேச்சில் தெரிந்து கொண்ட சிறுவர்கள் திகைத்து நின்றார்கள். லவ குசர்களிடன் வால்மீகி முனிவர் பேச ஆரம்பித்தார். ராமர் தான் உங்களது தந்தை. வன தேவியான உங்களது தாயின் பெயர் தான் சீதை. இவர்களது கதையை தான் நீங்கள் ராம கதையில் இசைத்துப் பாடினீர்கள். சீதையை ராமர் வனத்திற்கு அனுப்பி விட்டார் என்று அவரின் மீது இருந்த கோபத்தில் ராம கதையை இனி பாட மாட்டோம் என்றதில் இருந்து உங்களுக்கு அவரின் மீது எவ்வளவு கோபம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் அயோத்திக்கு அரசனானதும் ராமர் ஏன் சீதையை காட்டிற்கு அனுப்பினார் என்ற காரணத்தையும் அதிலுள்ள தர்மத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இப்போது ராமரின் மீதிருந்த கோபத்தை விட்டுத் தள்ளுங்கள் என்றார். வால்மீகி முனிவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சிறுவர்கள் இருவரும் ராமரின் பாதங்களில் வீழ்ந்து தங்களது வணக்கத்தையும் மரியாதையும் தெரிவித்துக் கொண்டு குதிரையை பிடித்து வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

ராமர் லவ குசர்களை கட்டி அணைத்து மகிழ்ந்தார். ராமருடன் வந்த படை வரிவாரங்கள் அனைவரும் ராம சீதை லவ குசர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். அயோத்திக்கு ராமர் நம்மை அழைத்துச் சென்று விடுவார் இனி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சீதை மனதிற்குள் எண்ணிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தபடி ராமரின் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ராமர் சீதையைப் பார்த்தபடியே வால்மீகி முனிவரிடம் பேச ஆரம்பித்தார். நான் சீதையின் எண்ணங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். அவள் பரிசுத்தமானவள் என்று எனக்கு தெரியும். ஆனாலும் ராவண யுத்தம் முடிந்ததும் தேவர்கள் முன்னிலையில் ஒரு சோதனை வைத்து இவள் பரிசுத்தமானவள் என்று உலகத்திற்கு நிருபித்த பின்பே இவளை அயோத்திக்கு அழைத்து வந்தேன். இலங்கையில் ராட்சசர்களுக்கு மத்தியில் சீதை அக்னிக்குள் இறங்கியதை இங்கிருக்கும் மக்கள் பார்க்கவில்லை. அந்த நிகழ்வு செவிவழிச் செய்தியாகவே மக்களுக்கு கிடைத்தது. அதனால் இவர்கள் அயோத்தில் சீதையைப் பற்றிய அவதூறான வார்த்தைகளை பேசத் தொடங்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 44

ராமர் கேட்ட கேள்விக்கு சிறுவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். நீங்கள் சிறுவனாக இருந்த போது தானே வசிஷ்டர் தன்னுடைய யாகத்தை பாதுகாக்க உங்களை அழைத்துச் சென்றார். சிறுவனாக இருந்த போது தானே நீங்கள் அரக்கர்களுடன் யுத்தம் செய்து வெற்றி பெற்று அவர்களை அழித்தீர்கள். அது போல் சிறுவர்களாக இருக்கும் நாங்கள் உங்களை வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம். குதிரையின் மீது தாங்கள் எழுதி வைத்திருக்கும் வாசகத்திற்கு உட்பட்டுதான் நாங்கள் இந்த குதிரையை பிடித்து வைத்திருக்கிறோம். உங்களுக்கு குதிரை வேண்டுமென்றால் எங்களுடன் யுத்தம் செய்யுங்கள். வேண்டாம் என்றால் இங்கிருந்து நீங்கள் செல்லலாம் என்றார்கள். ராமர் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தார். அப்போது அனுமன் ராமரிடம் பேச ஆரம்பித்தார். விளையாட்டுச் சிறுவர்களாக இருக்கிறார்கள். யாராலும் வெல்ல முடியாத ராவணனை வென்ற தாங்கள் இந்த சிறுவர்களிடம் சரிக்கு சமமாக யுத்தம் செய்ய வேண்டாம். சிறுவர்களை சமாளித்து நான் குதிரையை கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சிறுவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்த ராமர் அனுமனுக்கு அனுமதி கொடுத்தார். அனுமன் யுத்தத்திற்கு வருகிறார் என்று தெரிந்ததும் சிறுவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ராம கதையில் அனுமனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று வால்மீகி கூறியிருந்ததை நினைவு படுத்திக் கொண்டார்கள். எனவே ராம நாமத்தால் அனுமனை கட்டி வைக்க திட்டம் தீட்டினார்கள். அதன் படி ராம நாமத்தை சொல்லி அனுமன் மீது அஸ்திரத்தை எய்தார்கள் சிறுவர்கள். அஸ்திரம் அனுமனை கட்டி ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தது. ராம நாமத்தில் திளைத்த அனுமன் அனைத்தையும் மறந்த நிலையில் ராம ராம என்று சொல்லிய படியே வனத்திற்குள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். சிறுவர்களின் சாதுர்யமான செயலைக் கண்டு திகைத்த ராமர் சிறுவர்களை பாராட்டினார். சிறுவர்களுக்கும் ராமருக்கும் யுத்தம் ஆரம்பமானது. சிறுவர்கள் அம்புகளை விட ஆரம்பித்தார்கள். ராமர் சிறுவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாத வகையில் தற்காப்பு அம்புகளை எதிர் அம்புகளாக செலுத்தினார். சிறுவர்களின் துணிச்சல் சாதுர்யமான செயல் அம்பு விடும் வேகம் என அனைத்தையும் கவனித்த ராமர் அவர்களின் திறமைகளைக் கண்டு பாராட்டி மெய்சிலிர்த்தார்.

ராம நாமத்தை கேட்டுக் கொண்டே வனத்திற்குள் சென்ற அனுமன் சீதை குடியிருக்கும் பகுதி வழியாக சென்றார். அனுமனை கண்ட சீதை மகிழ்ச்சி அடைந்தாள். ராமரின் நலனைப் பற்றி விசாரிக்கலாம் என்று எண்ணிய சீதை அனுமன் என்று அழைத்தாள். சீதையின் குரலைக் கேட்ட அனுமன் சுய நினைவுக்கு வந்து தனது வலிமையால் தன்னை கட்டி இருந்த அஸ்திரத்தை அறுத்தார். சீதையின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். இக்காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று சீதை அனுமனிடம் கேட்டாள். அதற்கு அனுமன் ராமர் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து காட்டில் இரண்டு சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி வைத்தது வரை சொல்லி தற்போது ராமர் சிறுவர்களுடன் யுத்தம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றார். இதனைக் கேட்ட சீதை குதிரையை கட்டி வைத்தது லவ குசர்களே என்ற முடிவுக்கு வந்தாள். தந்தையுடன் மகன்களே யுத்தம் செய்கிறார்களா என்று பதைபதைத்த சீதை வால்மீகியின் குடிலுக்கு ஓடினாள். அனுமன் பின் தொடர வால்மீகியின் குடிலுக்கு சென்ற சீதை அவரிடன் நடந்தவற்றைச் சொல்லி உடனே இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டாள். முக்காலத்தையும் அறிந்த வால்மீகி முனிவர் நடப்பவைகள் நல்லவைகளாகவே நடக்கும் லவ குசர்களுக்கு எந்த பதிப்பும் வராது கவலைப்படாதே என்று சீதைக்கு ஆறுதல் கூறினார். சீதை மற்றும் அனுமனுடன் யுத்தம் நடக்கும் இடத்திற்கு வால்மீகி முனிவர் வந்தார்.