ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 43

ராமரின் படை வீரர்கள் சிறுவர்களான லவ குசர்களிடம் எப்படி யுத்தம் செய்வது என்று ராமரின் பிரநிதியாக வந்த லட்சுமணனிடம் சென்று ராமரின் அசுவமேத யாக குதிரையை இரு சிறுவர்கள் பிடித்து வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பார்ப்பதற்கு முனிவரின் குழந்தைகள் போல் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள். இதைக் கேட்ட லட்சுமணன் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு வந்தான். குதிரை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் லட்சுமணன் சென்று பேச ஆரம்பித்தான். உலகத்தை ஆட்சி செய்யும் ராமரின் அசுவமேத யாகக் குதிரை இது. இந்தக் குதிரையுடன் ராமரின் பிரதிநிதியாக லட்சுமணனாகிய நான் வந்திருக்கின்றேன். நீங்கள் விளையாடுவதற்கு வேறு குதிரையைத் தருகிறேன் இந்தக் குதிரையை விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு லவ குசர்கள் சீதையை கோழைத்தனமாக காட்டிற்கு கொண்டு வந்து விட்டது நீங்கள் தானே எங்களோடு போரிடும் தைரியம் உங்களுக்கு இருந்தால் எங்களோடு போரிட்டு வென்று இந்தக் குதிரையை நீங்கள் அழைத்துச் செல்லலாம் என்றார்கள். லவ குசர்களின் பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த லட்சுமணன் மிகவும் மன உளைச்சல் அடைந்து அவர்களைத் தாக்க முற்பட்டான். லட்சுமணன் வில்லை வளைத்து நானை ஏற்றுவதற்குள் சிறுவர்கள் இருவரும் அம்பு எய்து அவன் தலையிலிருந்த கிரீடத்தை தள்ளி விட்டார்கள். இதனால் மேலும் கோபம் அடைந்த லட்சுமணன் சிறுவர்கள் மீது அம்பெய்தான். லட்சுமணன் எய்த அனைத்து அம்புகளுக்கும் சிறுவர்கள் பதிலடி கொடுத்து அம்பு மழை பொழிந்தார்கள். இதில் காயமடைந்த லட்சுமணன் மயங்கிக் கீழே விழுந்தான். இதைக் கண்ட படை வீரர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்றார்கள்.

ராமரிடம் வந்த படை வீரர்கள் யாகக் குதிரையை பிடித்து வைத்துக் கொண்ட இரண்டு சிறுவர்கள் லட்சுமணனையும் காயப்படுத்தி விட்டார்கள் என்று நடந்தவைகள் அனைத்தையும் ராமரிடம் தெரிவித்தார்கள். லட்சுமணனை இரு சிறுவர்கள் தோற்கடித்து விட்டார்களா என்று ராமர் ஆச்சரியமடைந்தார். பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்தார் ராமர். சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி இருக்கும் இடத்திற்கு சென்று குதிரையை மீட்டு வர நான் செல்கிறேன் ஆகையால் பரதன் நாட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் சத்ருக்கனன் அசுவமேத யாகத்தை பாதுகாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்போது பரதனும் சத்ருக்கணும் இதற்கு தாங்கள் ஏன் செல்ல வேண்டும் நாங்கள் போய் குதிரையை மீட்டு வருகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு ராமர் ராவணனின் மகனான இந்திரஜித்தையே போரில் வென்ற லட்சுமணனையே இரு சிறுவர்கள் காயப்படுத்தி இருக்கின்றார்கள். ஆகையால் நானே சென்று குதிரையை மீட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். ராமருடன் அனுமனும் சென்றார்.

ராமருடன் அனுமனும் வருவதைக் கண்ட சிறுவர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள். ராமர் நேராக லட்சுமணன் இருக்குமிடம் சென்றார். லட்சுமணனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றதும் சிறுவர்கள் இருக்குமிடம் வந்தார். ராமர் சிறுவர்களிடம் நீங்கள் அரண்மனையில் ராம கதையை பாடலாக பாடிய வால்மீகியின் சீடர்கள் தானே நீங்கள் எந்த குலத்தை சேர்ந்தவர்கள்? உங்களது தந்தை தாயின் பெயர் என்ன? இந்த குதிரையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் எங்களின் தாயின் பெயர் வனதேவி. எங்களின் தந்தையின் பெயரும் குலமும் தெரியாது. நாங்கள் எங்களின் ஞான குருவான வால்மீகி முனிவரின் பாதுகாப்பில் இந்த வனத்தில் வசிக்கிறோம். நீங்கள் வந்தது குதிரையை மீட்கத்தானே வந்தீர்கள். எங்களைப் பற்றி விசாரித்து வந்த வேலையை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு குதிரை வேண்டுமென்றால் எங்களுடன் யுத்தம் செய்யுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். சிறுவர்களின் தைரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்ட ராமர் லட்சுமணனையே காயப்படுத்திய நீங்கள் மிகவும் பலசாலிகள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிறுவர்களான உங்களிடம் எப்படி யுத்தம் செய்ய முடியும் என்று கேட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.