ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -13

குபேரனிடம் விஸ்ரவஸ் பேச ஆரம்பித்தார். தசக்ரீவனுக்கு நானும் நிறைய அறிவுரை சொல்லியும் பயமுறுத்தியும் பார்த்து விட்டேன் பயனில்லை. பலசாலியாக துர்புத்தியுடன் யார் சொல்லையும் கேட்க மறுக்கிறான். அவனுக்கு கிடைத்துள்ள வரங்களைப் பற்றி உனக்குத் தெரியும். பிரம்மாவிடமிருந்து கிடைத்த வரங்களால் கர்வம் தலைக்கேற துர்புத்தி படைத்தவனாகி விட்டான். யாரை மதிக்க வேண்டும் யாரை வணங்க வேண்டும் என்ற சாதாரண எண்ணம் கூட இல்லாதவனாக இருக்கிறான். என்னிடம் சாபம் பெற்று பயங்கரமான உருவை அடைந்தும் அவன் கர்வம் குறையவில்லை. தசக்ரீவனுடன் விரோதத்தை வளர்த்துக் கொண்டு அவனுடன் மோதாதே. அது உனக்கு வீண் சிரமத்தைத் தான் கொடுக்கும். இலங்கையை காலி செய்து கொண்டு உன் பரிவாரங்களுடன் கைலாச மலைக்கு நீ சென்று விடு. அங்கு அழகிய மந்தாகினி நதி இருக்கிறது. நதிகளுள் சிறந்த நதி. சூரிய ஒளிக்கு இணையான பொன் நிற தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிலைகளை உடையது. வாசனை மிகுந்த குமுத மலர்களும் உத்பல மலர்களும் நிறைந்தது. அங்கு தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள். மிகவும் சிறப்பான அந்த இடம் உனக்கு ஏற்றதாக இருக்கும் என்று குபேரனிடம் சொல்லி முடித்தார் விஸ்ரவஸ்.

குபேரன் தன் தந்தை விஸ்ரவஸ் சொன்னதைக் கேட்டதும் அவரின் வார்த்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு தனது பரிவாரங்களுடன் இலங்கையை காலி செய்து கொண்டு கைலாச மலைக்கு சென்றான். இந்திரனின் அமராவதியைப் போல் குபேரன் தன் நகரையும் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான். இலங்கை நகரம் இப்போது சூன்யமாக இருந்தது. இலங்கை நகரை குபேரன் காலி செய்து விட்டான் என்பதை அறிந்த பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் நடந்தவைகள் அனைத்தையும் விவரமாக சொன்னான். குபேரன் இலங்கை நகரை காலி செய்து விட்டான். நீ உன் மந்திரிகள் சகோதரர்களுடன் இலங்கையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்து வரலாம். எந்த வித தடையுமில்லை என்றான். தசக்ரீவனுக்கு இலங்கை நகரம் எந்த வித எதிர்ப்புமின்றி கிடைத்து விட்டது. தசக்ரீவனுக்கு அவனது சகோதரர்களும் சுமாலியின் மந்திரிகளும் சேர்ந்து இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். அரசனானதும் தசக்ரீவன் தன் சகோதரி சூர்ப்பனகைக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தான். காலக குலத்தில் வந்த வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு சூர்ப்பனகையை திருமணம் செய்து கொடுத்தான். இலங்கையில் ஒரு காட்டுப் பாதையில் தசக்ரீவன் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் ஒருவர் இருப்பதைப் பார்த்தான். அவரின் அருகில் சென்ற தசக்ரீவன் யார் என்று விசாரித்தான்.

கஸ்யபர் முனிவருக்கும் திதி என்பவளுக்கும் பிறந்த ராட்சசர்களில் நானும் ஒருவன். எனது பெயர் மயன். தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் போல் நானும் ஒரு சிற்பி. நான் ஹேமா என்ற தேவலோக பெண்ணை மணந்து பத்தாயிர வருடம் அவளுடன் இனிமையாக காலம் கழித்தேன். ஏதோ தேவ காரியம் என்று தேவலோகம் சென்றாள். பதினான்கு வருடம் சென்று விட்டது இன்னும் வரவில்லை. அவளுக்காக தங்க மயமாக ஊரை அலங்கரித்து வைத்திருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்களும் உண்டு. ஒருவன் மாயாவி மற்றோருவன் பெயர் துந்துபி. மனைவியின் பிரிவால் தனிமையில் தவித்த நான் மன ஆறுதலுக்காக மகளையும் அழைத்துக் கொண்டு இந்த வனம் வந்தேன். இவள் எனது மகள் இவளது பெயர் மந்தோதரி. என் கதையை சொல்லி விட்டேன். நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்று மயன் கேட்டார். அதற்கு தசக்ரீவன் நான் புலஸ்தியனுடைய பேரன் விஸ்வரஸின் மகன் எனது பெயர் தசக்ரீவன் என்றான். இதனைக் கேட்ட மயன் இவளுக்கு சரியான வரன் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். மகரிஷி புத்திரன் என்பதால் நீ இவளுக்கு சரியான கணவனாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். இவளை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டார். தசக்ரீவனும் சம்மதிக்க அந்த இடத்திலேயே மயன் அக்னியை மூட்டி மந்தோதரியை தசக்ரீவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.