ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -18

குசத்வஜன் என்பவர் ஒரு பிரம்ம ரிஷி எனது தந்தை அவர். அளவில்லாத மகிமையும் பெருமையும் கொண்டவர். பிரம்மாவுக்கு சமமாக இருந்தவர். அவர் நித்ய வேத பாராயணம் செய்து கொண்டிருக்கும் போது அவரது வாக்கிலிருந்து உதித்தவள் நான். என் பெயர் வேதவதி. என்னை தேவர்கள் கந்தர்வர்கள் யட்சர்கள் என்று பலர் திருமணம் செய்து கொள்ள எனது தந்தையிடம் கேட்டார்கள். ஆனால் என் தந்தை நாராயணனுக்கு மட்டுமே என்னை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து வைத்திருந்தார். அதனால் அவர்களில் யாருக்குமே என்னைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தம்பு என்ற தைத்ய அரசன் எனது தந்தை தூங்கும் பொழுது அவரைக் கொன்று விட்டான். திடுக்கிட்டுப் போன என் தாய் எனது தந்தையுடனேயே நெருப்பில் விழுந்து விட்டாள். எனது தந்தையின் விருப்பப்படி நான் மனதில் வைத்திருக்கும் நாராயணன் தான் என் கணவன் என்று சங்கல்பம் செய்து கொண்டு அவரின் நினைவாகவே இக்காட்டில் தவ வாழ்வை வாழ்ந்து வருகிறேன். வேறு யாரும் என்னை அடைய முடியாது. ராவணன் என்று பெயர் பெற்ற நீ யார் என்பது எனக்குத் தெரியும். மூவுலகிலும் நடப்பதை என் தவ வலிமையால் அறிந்து கொண்டு விடுகிறேன். இங்கிருந்து உனக்கு விடை தருகிறேன். நலமாக போய் வா என்றாள்.

வேதவதி பேசியதைக் கேட்ட ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி அவளிடம் பேச ஆரம்பித்தான். அழகிய பெண்ணே நாராயணன் உனக்கு கிடைக்க மாட்டான். அவன் வருவான் என்று நம்பி நீ மேலும் தவம் செய்து கொண்டிருந்தால் இறுதியில் ஏமாந்து போவாய். இது போன்ற தவ வாழ்க்கையே வயதான முதியவர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்வார்கள். எல்லா விதமான நல்ல குணங்களும் அழகும் கொண்ட நீ இப்படி பேசுவது பொருத்தமாக இல்லை. இது நாள் வரை உன்னைப் போல் ஒரு அழகியை நான் சந்தித்தது இல்லை. உனது அழகினால் நீ சிறிது கர்வம் கொண்டவளாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். மூவுலகும் போற்றத் தகுந்த அழகியே உன் இளமையை வீணாக்காதே. நான் இலங்கையின் அதிபதி யாராலும் வெல்ல முடியாதவன் என்று பெயர் பெற்றவன். நீ கூறிய நாராயணன் என்பவன் வீர்யத்திலும் தவத்திலும் பலத்தாலும் எனக்கு சமமாக நிற்க முடியாது அவனைப் போய் நீ விரும்புவதாகச் சொல்கிறாய். என்னை திருமணம் செய்து கொண்டால் அரசி என்ற பட்டத்துடன் எல்லா சுகங்களையும் நன்றாக அனுபவிக்கலாம் இந்த தவ வாழ்க்கையை விட்டு விட்டு என்னோடு வந்து விடு என்றான்.

வேதவதி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள். நீ பேசுவது சரியல்ல. நாராயணன் மூன்று உலக மக்களாலும் வணங்கப்படுபவர். மூன்று உலகத்திற்கும் நாயகனான நாராயணனை நீ அவமதிக்கிறாய். அறிவுடையவர்கள் யாரும் அவரை இழிவாக பேச மாட்டார்கள். ராட்சசனான உன்னைத் தவிர வேறு யாரும் இதுவரை நாராயணனை அவதூறாக பேசியதில்லை என்றாள். இதனைக் கேட்ட ராவணன் மூன்று உலகத்திற்கும் நானே நாயகன் அந்த நாராயணன் அல்ல. இதனை முதலில் நீ தெரிந்து கொள். மூன்று உலகங்களையும் வெற்றி பெற்ற என்னை அவமதித்து விட்டு என்னை வேண்டாம் என்றும் சொல்கிறாயா உன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறேன் என்னை யார் தடுப்பார்கள் பார்க்கிறேன் என்று வேதவதியின் தலைக் கேசத்தை பிடித்து ராவணன் இழுத்தான். நெருப்பை போல் இருந்த வேதவதி தன் தலை கேசத்தை தனது கைகளால் தட்டினாள். அவளது கைகளே கத்தி போல் ராவணன் பற்றியிருந்த கேசத்தை அறுத்து அவளை ராவணனிடமிருந்து விடுவித்தது. எல்லையில்லாத கோபத்துடன் ராவணனை எரிப்பது போல் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.