ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 46

ராமர் தொடர்ந்து பேசினார். இவ்வாறு மக்கள் பேசுவது சீதைக்கு தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் அரசனுக்கான தர்மத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையக் கூடாது என்ற காரணத்திற்காவும் சீதையை காட்டிற்கு அனுப்பினேன். இப்போது உங்கள் சத்திய வாக்கே இவள் புனிதமானவள் என்று இந்த மக்களுக்கு நிரூபிக்கப் போதுமானது என்று நம்புகிறேன். முக்காலமும் அறிந்த தாங்கள் சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல் என்று கூறியதால் இனி தர்மத்திற்கு எந்த இடையூரும் வராது சீதையின் மீது எந்த பழிச்சொல்லும் வராது என்று நம்புகிறேன். ஆகையால் உங்கள் சொல்படி சீதையை அயோத்திக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார் ராமர். ராமர் வால்மீகி முனிவரிடம் பேசியதைக் கேட்ட சீதை என் மீது குற்றம் சொல்லி விட்டார்களா? என்று நடுங்கியபடி நின்றாள். சீதையிடம் வந்த வால்மீகி முனிவர் அயோத்திக்கு நீ ராமருடன் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் செல்வது உனது விருப்பம் எதுவாக இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே யோசித்து நல்ல முடிவாகச் சொல் என்று கேட்டுக் கொண்டார். சீதை ராமருடன் செல்வாரா அங்கே என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சீதை என்ன செய்யப் போகிறார் என்று அவளின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் இருந்தார்கள். நன்கு யோசனை செய்த சீதை லவ குசர்களை ராமரிடம் ஒப்படைத்தாள். இத்தனை காலம் என்னுடன் இருந்த நம்முடைய இரண்டு குழந்தைகளையும் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இனி நீங்கள் இவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ராமரை வணங்கிவிட்டு சிறிது தூரத்தில் சென்று நின்றாள். ராமர் சீதையின் வார்த்தைகளை எதிர்பார்த்த படி ஆவலுடன் இருந்தார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். என்னை ஏன் காட்டிற்கு அனுப்பினீர்கள் என்று தெரியாமல் இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். இக்காட்டில் என்னை தனியாக லட்சுமணன் விட்டுச் செல்லும் போதும் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். நீங்கள் என்ன செய்தாலும் அதில் தர்மம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதினால் உங்களின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டேன். இப்போது நான் ஏன் காட்டிற்கு வந்தேன் என்ற காரணத்தை தெரிந்து கொண்டேன். அயோத்தியில் உள்ள சில மக்களிடம் இருக்கும் தவறான எண்ணத்தை சரியான எண்ணமாக மாற்ற வேண்டிய கடமை ராமரின் மனைவியான எனக்கு இருக்கிறது. நான் தூய்மையானவள் என்பதை உலகிற்கு உணர்த்த என்னை அக்னியில் இறக்கினீர்கள். ஆனாலும் மக்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணி விட்டார்கள். அதற்கு காரணம் இலங்கையில் நடந்ததை இங்கிருக்கும் மக்கள் யாரும் பார்க்கவில்லை என்றீர்கள். இப்போது வால்மீகி முனிவர் தன்னுடைய ஆயிரக்கணக்கான வருட தவ பலன்களையே சாட்சியாக வைத்து நான் புனிதமானவள் என்று இங்கிருக்கும் மக்களிடம் சொல்லி விட்டார் அதனால் இனி மக்கள் என்னைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்கிறீர்கள். உங்களின் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் வால்மீகி முனிவர் நம்முடைய வரலாற்றை கதையாக எழுதி வைத்திருக்கிறார். பிற்காலத்தில் வரும் சந்ததியினர் இக் கதையை படித்து விட்டு என்னை புனிதமற்றவள் என்று கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது ஏனெனில் அவர்கள் இலங்கையில் நடந்தவற்றையும் பார்க்கவில்லை. வால்மீகி முனிவரின் சொல்லையும் கேட்கவில்லை. யாரேனும் அவ்வாறு சிந்தித்து விட்டால் கூட நீங்கள் கடைபிடித்த தர்மத்திற்கும் உங்களின் புகழுக்கும் சிறிதாவது கலங்கம் ஏற்பட்டு விடும். அதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகையால் எக்காலத்திற்கும் இருக்கும் அனைவருக்கும் தெரியும்படியாக நான் இப்போது ஒரு சத்தியம் செய்கிறேன். பூமித் தாயே நான் ராமரைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் இருந்தது உண்மையானால் என்னுடைய மனம் வாக்கு காயம் செயல் அனைத்தும் ராமனை எண்ணிய படியே நான் இருந்தது உண்மையானால் ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்தியமானால் பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு என்று பூமியைப் பார்த்தபடி நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.