ராமரின் உத்தரவிற்கேற்க முனிவர்களும் வேத விற்பன்னர்களும் அயோத்தி நகருக்கு வந்தார்கள். அவர்களை அரண்மணை வாயிலுக்கே சென்று ராமர் வரவேற்றார். அனைவருக்கும் அவரவர்களுக்கேற்ப மரியாதைகள் செய்து அவர்களுக்குறிய ஆசனத்தை அளித்த ராமர் அவர்களிடம் பேச ஆரம்பித்தார். மக்களின் நலனுக்காக அஸ்வமேத யாகம் செய்ய விரும்புகிறேன். எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் அனைவரும் அருகில் இருந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து யாகத்தை நிறைவு செய்து கொடுங்கள் என்று அனைவரையும் வணங்கிய படி பணிவுடன் கேட்டுக் கொண்டார். ராமரின் இச்செயலுக்கு மகிழ்ந்த முனிவர்கள் ராமரை ஆசிர்வதித்து யாகத்தை செய்து கொடுப்பதாக வாக்களித்தார்கள். உடனடியாக ருத்ரனை வணங்கி அஸ்வமேத யாகத்தை தொடங்க அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார்கள். யாகம் செய்வதற்கான இடம் நாள் நேரம் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தீவிர ஆலோசனைக்கு பின்பு முனிவர்கள் முடிவு செய்தார்கள். யாகத்தின் நியதிப்படி ராமர் தனது மனைவியுடன் அமர்ந்தால் மட்டுமே அதற்கான பலன் என்று கூறி சீதையைப் போலவே தங்கத்தில் ஒரு உருவம் செய்து ராமரின் அருகில் வைத்து யாகத்தை செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். யாக சம்பந்தமான விவரங்களை ராமர் அவர்களிடம் கேட்டு குறித்துக் கொண்டு அதற்கேற்றார் போல் தனது சகோதரர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். யாகத்தில் கலந்து கொள்ள சுக்ரீவன் விபீஷணன் உட்பட தனது நண்பர்களுக்கும் அரசர்களுக்கும் அழைப்புகளை அனுப்பினார்.
ராமர் அஸ்வமேத யாகம் செய்வதை முன்னிட்டு தானங்கள் பல செய்தார். அசுவமேத யாகம் என்பது பல வருடங்கள் செய்யும் ஒரு பெரிய வேள்வியாகும். யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை யார் என்ன தானம் கேட்டாலும் அதனை அந்நாட்டு அரசன் கொடுக்க வேண்டும். அரசன் தனது அரச குதிரையில் தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி உலகம் முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அரசரது பிரதிநிதி பெரும்படையுடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று நாட்டு அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றி கொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து அடுத்த நாட்டிற்கு செல்லும். அனைத்து அரசர்களும் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு குதிரை யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேரும். குதிரை வந்ததும் யாகம் செய்த அரசன் தன்னை சக்கரவர்த்தி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான். யாகத்தின் பலனாக அதில் கலந்து கொண்டவர்களும் அந்நாட்டு மக்களும் பல விதமான தோசங்களில் இருந்து விடுபடுவார்கள். அயோத்திக்கு முனிவர்களும் வேதம் சொல்லும் அந்தணர்களும் பண்டிதர்களும் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தார்கள். சுக்ரீவன் மற்றும் விபீஷணன் தங்களது உறவினர்களுடன் வந்து சேர்ந்தார்கள்.
ராமர் எல்லா முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்து யாகத்திற்கான குதிரையை விட்டார். ராமரது பிரதிநிதியாக லட்சுமணனும் படை வீரர்களும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றார்கள். நல்ல முறையில் யாக சாலை தயாராவதைக் கண்டு ராமர் திருப்தியடைந்தார். யாகம் ஆரம்பித்தது யாகத்திற்கு வந்தவர்கள் லட்சுமணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும் லட்சுமணனது வலிமையைப் பற்றியும் பேசிக் கொண்டர்கள். யாகம் செய்யும் அந்தணர்கள் என்ன பொருள் வேண்டும் என்று கேட்டு முடிப்பதற்குள்ளாக அவர்களிடம் அப்பொருட்களை வானரங்களும் ராட்சசர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். சிரஞ்ஜீவிகளான சில முனிவர்கள் இது போல யாகத்தைக் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள். யாருக்கு என்னத் தேவையோ அது கிடைத்தது. தங்கம் விரும்பியவனுக்கு தங்கம் ரத்தினம் விரும்பியவனுக்கு ரத்தினம் என்று கிடைக்கப் பெற்றார்கள். தங்கமும் வெள்ளியும் ரத்தினமும் வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருந்தது. உணவும் உடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருட காலத்தைத் தாண்டிச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது.