ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -10

பிரம்மா தசக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். உங்கள் மூவரின் தவத்தால் மகிழ்ந்தேன் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். இதைக் கேட்ட தசக்ரீவன் மிகவும் மகிழ்ந்து பேச ஆரம்பித்தான். பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணத்தை கண்டால் மட்டுமே பயம். அதனால் எப்போதும் மரணம் இல்லாத வாழ்வு வேண்டும் எனக்கு மரணமே வரக் கூடாது என்று கேட்டான். இதைக் கேட்ட பிரம்மா மனிதனாக பிறக்கும் அனைவரும் ஒரு நாள் உடலை விட்டே தீர வேண்டும். வரங்களால் மரணத்தின் காலத்தை மட்டுமே தள்ளிப் போட முடியும். அதனால் வேறு ஏதாவது கேள் என்றார். இதைக் கேட்ட ராவணன் சிறு பிராணிகளின் மீது எனக்கு பயமும் இல்லை கவலையும் இல்லை. மனிதர்கள் எனக்கு அற்ப பதருக்கு சமமானவர்கள். அவர்களைப் போன்ற மற்ற பிராணிகளிடமும் எனக்கு பயம் இல்லை. அதனால் சுபர்ணர்கள் நாகர்கள் யட்சர்கள் தைத்யர்கள் தேவர்கள் தேவதைகள் எனது குலத்தை சார்ந்த ராட்சசர்களாளோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டான். பிரம்மாவும் அப்படியே நடக்கட்டும் என்று வரம் அளித்தார். இதைத் தவிர ராவணனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா தாமாகவே முன்வந்து இரண்டு வரங்கள் அளித்தார். நீ தவம் செய்யும் போது அக்னியில் நீ போட்ட உனது ஒன்பது தலைகளும் உனக்கு வந்து சேரும் என்றும் விரும்பியபடி உருவம் எடுத்துக் கொள்ளும் சக்தியையும் கொடுத்து மகிழ்ச்சியுடன் இரு என்று சொல்லி வாழ்த்தினார். இழந்த தனது ஒன்பது தலைகளையும் எளிதில் பெற முடியாத மற்ற வரங்களையும் பெற்றதால் ராவணன் மகிழ்ந்தான்.

பிரம்மா விபீஷணனிடம் பேச ஆரம்பித்தார். விபீஷணா நீ தர்மத்தின் வழி நிற்பவன். இத்தனை காலம் செய்த தவத்தினால் நீ உடல் வலிமை கூடியவனாக ஆகி விட்டாய். உனது தவத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வீபீஷணன் பிரம்மாவை வணங்கியபடி உங்களது தரிசனத்தால் நான் மிகவும் பாக்கியமடைந்தேன். எப்படிப்பட்ட கடுமையான ஆபத்து வந்தாலும் என் மனம் புத்தி தர்மத்தை விட்டு விலகக் கூடாது. நான் இதுவரை கற்றுக் கொள்ளாத பிரம்மாஸ்திரம் எனக்கு கிடைக்க வேண்டும். என் மனம் செல்லும் இடமெல்லாம் தர்மம் நிலவ வேண்டும். அந்த பகுதியில் உள்ளவர்கள் தர்மத்தில் ஈடுபாட்டு திகழ வேண்டும் என்று கேட்டான். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பிரம்மா ராட்சச குலத்தில் பிறந்தும் உன் புத்தி அதர்மத்தின் பக்கம் செல்லவில்லை. உனது நல்ல குணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது உன் விருப்பப்படியே ஆகட்டும். உனக்கு அமரத்துவம் தருகிறேன் என்று தாமாகவே முன்வந்து ஒரு வரம் அளித்தார்.

பிரம்மா கும்பகர்ணன் பக்கம் திரும்பினார். உடனே தேவர்கள் பிரம்மாவிடம் வந்து கும்பகர்ணனுக்கு வரம் எதுவும் தராதீர்கள். அவன் மிகவும் துஷ்டன் இவன் இப்பொழுதே மூவுலகையும் துன்புறுத்தி வருகிறான். ஒரே நேரத்தில் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருந்த பத்து ரிஷிகள் மற்றும் கணக்கில்லாத மனிதர்களை இவன் விழுங்கி விட்டான். யாகம் மற்றும் பூஜைகள் யார் செய்து கொண்டிருந்தாலும் அவர்களை துன்புறுத்தி தின்று விடுகிறான். எந்த விதமான வரமோ பலமோ உதவியோ இல்லாமலேயே இவன் இப்படி செய்து வருகிறான். வரமும் கிடைத்து விட்டால் மூவுலகையும் இவன் துன்புறுத்தி அழித்து விடுவான். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கமோ அவர்களை வணங்கும் வழக்கமோ இவனுக்கு கிடையாது. உலக நன்மைக்காக இவனை சற்று அடக்கி வையுங்கள். இவன் இத்தனை காலம் செய்த தவத்திற்கு வரம் தருவதாக இருந்தால் இவன் செயல்படாமல் இருப்பது போல் ஏதேனும் வரத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். பிரம்மா தனது அருகில் இருக்கும் சரஸ்வதியை பார்த்தார். பிரம்மாவின் சிந்தனையை புரிந்து கொண்ட சரஸ்வதி தேவி என்னால் செய்ய முடிந்ததை செய்கிறேன் என்றாள். பிரம்மா சரஸ்வதியிடம் நீ ராட்சசனான கும்பகர்ணனின் வாக்கில் சிறிது நேரம் இருந்து தேவர்களுக்கு உதவி செய் என்றார். சரஸ்வதி தேவியும் சம்மதம் தெரிவித்து தன் காரியத்தை தொடங்கினாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.