ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -11

பிரம்மா கும்பகர்ணனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இந்திரனைப் போல் சுகவாசியாக வாழ ஆசைப்பட்ட கும்பகர்ணன் இந்திரனின் ஆசனம் வேண்டும் என்று கேட்பதற்காக இந்திராசனா வேண்டும் என்று கேட்க வாயைத் திறந்தான். சரஸ்வதி கும்பகர்ணனின் வாக்கில் இருந்து அவனது வாக்கு குழரும்படி செய்தாள். இதனால் இந்திராசனா (இந்திரனின் ஆசனம்) என்று கேட்பதற்கு பதில் நித்திராசனா (தூங்கிக் கொண்டே இருத்தல்) வேண்டும் என்று கேட்டான் கும்பகர்ணன். அப்படியே ஆகட்டும் என்றார் பிரம்மா. உடனே கும்பகர்ணன் சுய நினைவுக்கு வந்தவனாய் யோசித்தான். என் வாயிலிருந்து எதனால் இப்படி ஒரு சொல் வெளி வந்தது. பிரம்மா கொடுத்த வரத்தினால் ஆயுள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்போமே பின்பு எப்படி சுகமாக வாழ்வது என்று சிந்தனை செய்தவனாக பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தான். ஆயுள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தால் நான் எப்படி உணவு உண்பது வேறு காரியங்களை எப்படி செய்வது ஆகையால் வரத்தை மாற்றிக் கொடுங்கள் என்று முறையிட்டான்.

பிரம்மா இதனைக் கேட்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தார். நீ இத்தனை ஆண்டு காலம் செய்த கடுமையான தவத்தின் பலனாக வரத்தை நீயே கேட்டுப் பெற்றுவிட்டாய். உனது தவத்திற்கான பலனைக் கொடுத்தாகி விட்டது. உனக்கு கொடுத்த வரத்தை இனி மாற்ற முடியாது. நீ கேட்டுக் கொண்டதால் இனி உனது வாழ்நாள் முழுவதும் வருடத்தில் ஆறு மாதம் தூங்கிக் கொண்டே இருப்பாய். அதன் பின் ஆறு மாதம் விழித்திருந்து உனது காரியங்களை செய்து கொள்வாய் என்று சொல்லி அங்கிருந்து மறைந்தார். என் சகோதரர்கள் நல்ல வரங்கள் பெற்று சுகவாசிகளாக இருப்பார்கள். தேவர்கள் தான் ஏதோ சதி செய்து என்னை மோகத்தில் ஆழ்த்தி என்னை இப்படி வீழ்த்தி விட்டார்கள் என்று உணர்ந்தான். இனி மீண்டும் தவம் செய்து தான் வரங்களைப் பெற வேண்டும். ஆனால் இனி பெற்ற வரத்தினால் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் எப்படி தவம் செய்ய முடியும் என்று யோசித்த கும்பகர்ணன் வேறு வழியில்லாமல் ராவணனுடனும் விபீஷணனுடம் அங்கிருந்து கிளம்பினான். மூவரும் ஸ்லேஷ்மாதக வனம் என்ற இடத்திற்குச் சென்று சுகமாக வசித்தனர். கும்பகர்ணன் பெற்ற வரத்தின் படி ஆறு மாதம் தூங்கி ஆறு மாதம் விழித்திருந்தான்.

பிரம்மாவிடம் தசக்ரீவன் கும்பகர்ணன் விபீஷணன் மூவரும் வரங்கள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாகி விட்டார்கள் என்பதை அறிந்த சுமாலியின் பயம் விலகியது. அதனால் தன் பரிவாரங்கள் சூழ பாதாள லோகத்திலிருந்து வெளியே வந்தான். சுமாலி தன்னுடைய மந்திரிகளான மாரீசன் விரூபாக்ஷன் மகோதரனோடு தசக்ரீவன் கும்பகர்ணன் விபீஷணன் மூவரையும் வந்து சந்தித்து அவர்களை அணைத்து ஆசிர்வதித்துக் கொண்டாடினான். நமது ராட்சச குலத்திற்கு விஷ்ணுவின் மீதிருந்த பயம் உங்களால் விலகியது. இனி விஷ்ணுவைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. பயந்து ஒளிந்து கிடந்த ராட்சசர்களின் குலம் உங்களால் தூக்கி நிறுத்தப்பட்டு சிறப்புப் பெற்றது. நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் இலங்கை. அங்கிருந்த நாம் விஷ்ணுவைக் கண்டு பயந்து ஓடினோம். இப்போது உனது சகோதரனான குபேரனின் கட்டுப்பாட்டில் இலங்கை இருக்கினது. சாம தான பேத தண்டம் என்ற உபாயங்களே பயன்படுத்தி இலங்கையை நாம் திரும்பி பெற முயற்சிக்கலாம். தசக்ரீவா மகாபலசாலியான நீயே எங்கள் அனைருக்கும் தலைவனாக இருந்து இலங்கையை ஆட்சி செய்து இலங்கேஸ்வரன் என்று பெயர் பெறுவாய் என்றார். இதனைக் கேட்ட தசக்ரீவன் எனது மூத்த சகோதரானான குபேரனை நான் எப்படி எதிர்ப்பேன் நீங்கள் சொல்வது சரியில்லை என்று தனது கருத்தை சுமாலியிடம் தெரிவித்தான். இதற்கு சுமாலி பதில் பேசாமல் மௌனமாக இருந்தார். சில காலங்கள் சென்றது. ஒரு நாள் சுமாலியின் மந்திரியான பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் வந்து குபேரனை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான காரணங்களோடு விவரமாக பேச ஆரம்பித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.