ராமரின் கட்டளையை கேட்டு திடுக்கட்ட மூன்று சகோதரர்களும் பேச முடியாமல் சிலை போல் நின்றார்கள். ராமர் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டார். மூவரும் கலந்து பேசி ராமரின் கட்டளையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இச்செயலை லட்சுமணன் செய்யுமாறு பரதனும் சத்ருக்கனனும் கேட்டுக் கொண்டார்கள். அந்த இரவு ராமருக்கும் சகோதரர்கள் மூவருக்கும் மன நிம்மதியின்றி கழிந்தது. விடிந்ததும் லட்சுமணன் சுமந்திரரை அழைத்து ரதத்தில் குதிரைகளைப் பூட்டி அதில் சீதை அமர வசதியாக ஆசனம் தயார் செய்யுங்கள். மகரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களைக் காண சீதையை அழைத்துச் செல்ல அரசரின் உத்தரவு என்று வாடிய முகத்துடன் உத்தரவிட்டான். அரண்மனைக்குள் சென்ற லட்சுமணன் சீதையிடம் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வால்மீகி முனிவர் வாழும் ஆசிரமத்திற்கு தங்களை அழைத்துச் செல்ல ராமர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி தங்களை அழைத்துச் செல்ல வந்தேன் என்றான்.
ராமர் இட்ட கட்டளை என்றதும் சீதை உடனே தயாராகி கிளம்பி விட்டாள். சுமந்திரனை அனுப்பி விட்டு லட்சுமணன் தானே ரதத்தை ஓட்டினான். சீதை லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தாள். நாம் கிளம்பியதில் இருந்து அபசகுனங்களை நிறைய காண்கிறேன். என் கண் துடிக்கிறது. இதயம் ஏனோ நடுங்குகிறது. நான் ஆசைப்பட்ட இடத்திற்கு செல்கிறேன் ஆனாலும் எனக்கு உற்சாகம் வரவில்லை. இனம் புரியாத கவலை தானாகவே தோன்றுகிறது. அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் நீயும் வேண்டிக் கொள் என்றாள். இதைக் கேட்ட லட்சுமணனின் மனம் துணுக்குற்றாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கங்கை கரைக்கு வந்தடைந்தார்கள். கங்கை நதிக் கரையில் பாதி நாள் கழிந்தது. திடிரென லட்சுமணன் தன் கட்டுப் பாட்டை இழந்து அழ ஆரம்பித்தான். சீதை எதுவும் புரியாமல் என்ன இது? ஏன் அழுகிறாய் என்று கேட்டாள். வெகு நாட்களாக நான் வசிக்க விரும்பிய இடம் இது. இங்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயத்தில் ஏன் அழுகிறாய்? நீ எப்பொழுதும் ராமன் அருகிலேயே இருப்பவன். இரண்டு நாள் பிரிந்து இருக்க வேண்டுமே என்று அழுகிறாயா? லட்சுமணா எனக்கும் ராமனிடத்தில் அன்பு உண்டு. ராமரை என் உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறேன். நானே சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். சிறு பிள்ளை போல அழுகிறாயே விவரம் அறியாதவனா நீ. அழுகையை நிறுத்தி விட்டு இந்த கங்கையைக் கடந்து அக்கரையில் இருக்கும் முனிவர்களை தரிசிக்க ஏற்பாடு செய். மகரிஷிகளை உரிய முறையில் வணங்கி ஆசீர்வாதம் பெற்று ஒரு இரவு அவர்களுடன் வசித்து விட்டு நகரம் திரும்புவோம் என்றாள். தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட லட்சுமணன் சீதையை படகில் ஏறச் செய்து கங்கைக் கரையே கடந்து முனிவர்கள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
ராமர் எனக்கு ஒரு கட்டளையை பிறப்பித்திருக்கிறார் என்று சீதையிடம் பேச ஆரம்பித்தான் லட்சுமணன். கண்களில் நீருடன் பணிவாக தன் தன் நிலையை சொல்ல ஆரம்பித்தான். மதிப்புக்குரிய ராமர் இந்த கட்டளையை எதற்காக பிறப்பித்தார் என்று எனக்கு தெரியவில்லை. நேற்று இரவு முதல் ஒரு பெரும் பாரத்தை என் மனதில் சுமந்து வருகிறேன். இந்த செய்தியை தங்களிடம் சொல்லும் முன் என் உயிர் பிரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இச்செயலை செய்ய என்னை பணித்ததற்கு பதிலாக எனக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம். உலகமே நிந்திக்கப் போகும் இந்த செயலைச் செய்ய ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ என்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். இதில் என் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியபடி லட்சுமணன் அவள் பாதங்களில் விழுந்து அழுதான். லட்சுமணனின் சொல்லையும் செயலையும் கண்ட சீதை கவலையால் துடித்துப் போனவளாக எனக்கு எதுவுமே புரியவில்லை விவரமாகச் சொல் லட்சுமணா என்று கேட்டு பதறினாள்.