ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -20

அரசனின் குருவான சம்வர்த்தன் என்ற மகரிஷி அவனை தடுத்து நிறுத்தி அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். இந்த சமயம் நீ கோபப்படுவதும் ராவணனுடன் யுத்தம் செய்வதும் சரியல்ல. மாகேஸ்வர யாகம் செய்ய நீ அக்னி ஏற்றிவிட்டாய். யுத்தம் செய்து வெற்றி பெற்று பின் யாகத்தை தொடர்ந்து நடத்துவேன் என்று நீ சொல்லலாம் ஆனால் இந்த ராட்சசன் பல வரங்களைப் பெற்றவன். எளிதில் வெற்றி பெற முடியாதவன். இந்த ராட்சசனுடன் நீ யுத்தம் செய்தால் நிச்சயமாக உனக்கு வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காமல் போனால் உன்னால் யாகத்தை தொடர்ந்து செய்ய முடியாது. யாகத்தை ஆரம்பித்து விட்டு அதை முடிக்காமல் விட்டால் அது உனது குலத்திற்கு கேட்டை விளைவிக்கும். எனவே சந்தேகத்துக் கிடமான இந்த செயலில் இறங்குவதற்கு முன் யோசித்துச் செயல் படு என்றார். குருவின் சொல்லைக் கேட்டதும் அரசன் தன் ஆயுதங்களை வைத்து விட்டு அமைதியுடன் யாகத்தில் அமர்ந்தான். உடனே ராவணன் வெற்றி பெற்று விட்டார். அரசன் சரணடைந்து விட்டான் என்று ராவணனைச் சேர்ந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தார்கள். அங்கு இருந்த பல மகரிஷிகளை தின்று தீர்த்து விட்டு ராவணனின் கூட்டம் திரும்பிச் சென்றது. ராவணன் சென்றதும் தேவர்கள் தங்கள் சுய ரூபத்துக்கு மாறினார்கள். அரசன் யாகத்தை நிறைவு செய்தான். ராவணன் மருத்தன் அரசனை வென்ற திருப்தியோடு எங்கு யுத்தம் செய்யலாம் என்று ஊர் ஊராகச் சென்று அரசர்களுடன் மோதினான் ராவணன்.

இந்திரன் வருணன் இவர்களுக்கு சமமாக தர்மத்தின்படி அமைதியாக ஆட்சி செய்து வந்த அரசர்களிடம் வம்பிற்கு சென்றான் ராவணன். யுத்தம் செய்ய வாருங்கள் யுத்தம் செய்ய வரவில்லை என்றால் என்னை உங்கள் அரசனாக ஏற்றுக் கொள்ளுங்கள். இரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் இல்லை என்றால் உங்கள் அனைவரையும் அழித்து விடுவேன். எனது படைகள் உங்களை தின்றே தீர்த்து விடுவார்கள் இது எனது கொள்கை என்று அனைத்து இடங்களுக்கும் தனது படைகளுடன் சென்றான் ராவணன். துஷ்யந்தன் காதி சுரதன் கயன் புரூரவன் போன்ற பல வலிமையான அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராவணனைப் பற்றி ஆலோசனை செய்தார்கள். இறுதியில் ராவணனை யுத்தம் செய்து வெல்ல முடியாது என்று தாங்கள் தோற்றதாக ஒப்புக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய ராவணன் அயோத்திக்கு வந்து சேர்ந்தான்.

இந்திரன் அமராவதி நகரை அழகாக வைத்திருப்பது போல் இருந்தது அயோத்தி. இஷ்வாகு குலத்தில் வந்த அனரண்யன் என்ற அரசன் அயோத்தியை அப்போது ஆண்டு வந்தான். இவர் தசரத சக்ரவர்த்தியின் முதாதையர் ஆவார். இவரையும் ராவணன் யுத்தத்திற்கு அழைத்தான். ராவணன் வருவான் என்பதை முன்னரை அறிந்து வைத்திருந்த அனரண்யன் யுத்தத்திற்கு தனது படைகளுடன் தயாராக இருந்தார். ராவணா நீ செய்யும் பாப காரியங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னுடன் யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று யுத்தத்திற்கு கிளம்பினார். பத்தாயிரம் யானைகள் அதைப் போல இரு மடங்கு குதிரைகளும் கணக்கில்லாத ரதங்கள் கால் நடை வீரர்கள் என்று அனரண்யனன் படைகள் பூமியை மறைத்தபடி போருக்கு வந்தனர். அரசனின் படைகளும் ராவணனின் படைகளும் யுத்தம் செய்ய தயாராக இருந்தனர். அனரண்யன் படை பலம் மிக அற்புதமாக பெரிதாக இருந்தது. கடுமையாக யுத்தம் நடந்தது. நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல ராவணனின் படைகளிடம் அரசனின் அந்த பெரும் படை சில மணி நேரத்தில் அழிந்தது. தன் வீரர்கள் மடிந்ததைக் கண்ட அனரண்யன் தானே ராவணனுடன் நேரடியாக மோதினான். மாரீசன் சுகன் சாரணன் பிரஹஸ்தன் ஆகிய ராவணனின் மந்திரிகள் தோற்று ஓடினர். பல விதமான அஸ்திர சஸ்திரங்களை பிரயோகித்தும் அனரண்யனால் ராவணனை எதுவும் செய்ய முடியவில்லை. ராவணன் அரசனை தன் கையால் ஓங்கி அடித்தான் அதை தாங்க முடியாமல் அரசன் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். அரசனை பார்த்த ராவணன் பலமாக சிரித்து என்னுடன் மோதி என் பலத்தை தெரிந்து கொண்டாயா? மூவுலகிலும் எனக்கு சமமாக யுத்தம் செய்ய யாராலும் முடியாது தெரிந்து கொள் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.