சக்தி என்ற அளவிட முடியாத பெருமை வாய்ந்த ஆயுதத்தை மயன் தசக்ரீவனுக்கு கொடுத்தான். இலங்கைக்கு மனைவியுடன் வந்த தசக்ரீவன் விரோசனனுடைய பேத்தியான வஜ்ர ஜ்வாலா என்ற பெண்ணை தன் சகோதரன் கும்பகர்ணனுக்கு திருமணம் செய்து வைத்தான். சைலூஷன் என்ற கந்தர்வனின் மகள் சரமா என்பவளை விபீஷணனுக்கு திருமணம் செய்து வைத்தான். திருமணம் செய்து கொண்ட மனைவியர்களுடன் ராட்சசர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். மந்தோதரி மேகனாதன் என்ற மகனைப் பெற்றாள். பிறந்த உடனே மேகம் இடி இடிப்பது போல உரத்த குரலில் குழந்தை அழுதது. அந்த ஓசையில் இலங்கை நகரமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் தசக்ரீவன் தன் மகனுக்கு மேகநாதன் என்று பெயரிட்டான். மேகநாதன் தாய் தந்தையருக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருபவனாக வளர்ந்தான்.
பிரம்மாவின் வரம் காரணமாக கும்பகர்ணனுக்கு அளவில்லாத தூக்கம் வர ஆரம்பித்தது. அரசனான தனது சகோதரனிடம் உறக்கம் என்னை வாட்டுகிறது. எனக்கு தகுந்தாற் போல் வீட்டைக் கட்டித் தா என்று கேட்டுக் கொண்டான் கும்பகர்ணன். தசக்ரீவனும் விஸ்வகர்மாவுக்கு இணையான சிற்பிகளை வைத்து கும்பகர்ணனின் உடல் பருமனுக்கு ஏற்றார் போல் அழகிய ஒரு மாளிகையை கட்ட உத்தரவிட்டான். ஒரு யோஜனை தூரம் நீளமும் இரண்டு மடங்கு அகலமுமாக மாளிகை உருவாகியது. கும்பகர்ணன் உறக்கத்தில் ஆழ்ந்தான். ஆறு மாதங்கள் தூங்கியும் ஆறு மாதங்கள் உணவு சாப்பிட்டும் சாப்பிட்ட களைப்பில் ஓய்வு எடுப்பதுமாக கும்பகர்ணனின் வாழ்க்கையில் பல வருடங்கள் கழிந்தது. கும்பகர்ணன் இவ்வாறு காலத்தை கழித்த பொழுது தசக்ரீவன் தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்களை போரில் வென்றான். பூஜைகள் யாகங்கள் நடக்கும் இடங்கள் மற்றும் தேவலோகத்து நந்தவனம் போன்ற இடங்களை தசக்ரீவன் அழித்தான். தேவர்களின் இருப்பிடத்தை அழிப்பதையே காரியமாகக் கொண்ட தசக்ரீவனை திருத்த எண்ணிய குபேரன் ஒரு தூதுவனை அனுப்ப எண்ணினான். தசக்ரீவன் கேட்டதும் இலங்கையை திருப்பிக் கொடுத்ததை சுட்டிக் காட்டி அறிவுரை சொல்லி தூதுவன் ஒருவனை தசக்ரீவனிடம் அனுப்பினான் குபேரன். அந்த தூதன் முதலில் விபீஷணனிடம் சென்றான். அவனை நன்றாக உபசரித்த விபீஷணன் உறவினர்களின் நலம் விசாரித்த பின் தூதுவனை சபைக்கு அழைத்துச் சென்று தசக்ரீவனுக்கு அறிமுகப் படுத்தினான்.
குபேரனிடம் இருந்து வந்த தூதுவன் தான் கொண்டு வந்த செய்தியை கூறினான். உங்களுக்கும் உங்கள் சகோதரர் குபேரன் இருவருக்குமே சமமான குல மரியாதையும் செல்வங்களும் உள்ளது. உங்களுக்கு இலங்கையை கொடுத்து விட்ட குபேரன் கயிலையை தனது இருப்பிடமாகக் கொண்டு தவங்கள் பல செய்து வருகிறார். இதனால் சிவனின் அருளையும் பார்வதியின் அருளையும் பெற்றிருக்கிறார். உங்களால் பல முறை குபேரன் உதாசினப்படுத்தப் பட்டிருக்கிறார். ஆனாலும் தனது சகோதரனான நீங்கள் தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் குபேரன் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். அரசனான நீங்கள் தர்மத்தின் படி நடந்து கொள்வது நல்லது. தேவர்களின் நந்தன வனத்தை அழித்ததாகவும் ரிஷிகளையும் தேவர்களையும் வதைத்ததாகவும் கேள்விப்பட்டோம். பலரை அழித்து நாசமாக்கியதாகத் தெரிகிறது. உனது செயல்கள் நமது குலத்திற்கு தலை குனிவை ஏற்படுத்துகிறது. குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். நீங்கள் தேவகணங்களை அடித்தது போலவே அவர்களும் உங்களை வதம் செய்ய என்ன வழி என்று யோசித்து வருகிறார்கள். எனவே இனி மேல் இது போல் அதர்மமான செயல்களை செய்யாதே என்று தூதுவன் சொல்லி முடித்தான்.