கந்தபுராணம் பகுதி-27

தன் பிள்ளைகளையெல்லாம் பறிகொடுத்த பிறகு தம்பி சிங்கமுகனை போருக்கு அனுப்பினான் சூரபத்மன். சிங்கமுகன் கொடூரமானவன். கந்தபுராண யுத்த காண்டத்தில் சிங்கமுகன் முருகனுடன் மோதிய காட்சியைப் படிப்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிங்கமுகன் ஆயிரம் சிங்கத்தலைகளை உடையவன். அவனுடைய மார்பைத் தகர்க்கவே முடியாத அளவுக்கு பல மைல் நீளமுள்ளதாக இருக்குமாம். முருகப்பெருமான் நேரில் களத்துக்கு வந்து விட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. அவனது தலைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக முளைத்தது. சிவனிடம் வரம் வாங்கும் போது இவன் தன் தலைகளை வெட்டி யாகத்தில் போட்டவன். அதன் காரணமாக எத்தனை முறை வெட்டுப்பட்டாலும் மீண்டும் முளைக்கும் வரம் பெற்றவன். ஆனால் தன் சக்தியின் முன்னால் இந்த வரம் எடுபடாது என நிபந்தனை விதித்திருந்ததால் சிங்கமுகன் தன் தலைகளை இழக்க வேண்டியதாயிற்று. முருகப்பெருமான் புதிது புதிதாக முளைத்த தலைகளைப் பார்த்து இனி முளைக்காதே என அதட்டினார். அதற்குப் பயந்து அந்த தலைகள் மீண்டும் முளைக்கவில்லை. இப்படியாக 999 தலைகளை வெட்டிச் சாய்த்த பிறகு ஒரே ஒரு தலையுடன் போரிட்டான் சிங்கமுகன்.

தன் வேலாயுதத்தால் அந்த தலையைச் சீவி விட்டார் சிங்காரவேலன். சிங்கமுகனின் சரித்திரம் முடிந்தது. சிங்கமுகனின் மனைவியர்கள் எல்லாம் தீயில் மூழ்கி இறந்து விட்டனர். இறுதியாக சூரபத்மன் முருகனுடன் போருக்கு வந்தான். நான்கு நாட்கள் உலகமே நடுங்கும்படியான யுத்தம் நடந்தது. அப்போது கருணைக்கடவுளான கந்தன் விஸ்வரூபம் எடுத்தார். அவரது காலடியில் இந்த உலகம் கிடந்தது. எல்லாமே தனக்குள் அடக்கம் என்பதை அவர் அவனுக்கும் இந்த உலகத்துக்கும் காட்டினார். அந்தக் காட்சியால் சூரன் ஞானம் பெற்றான். அவனது துர்க்குணங்கள் மறைந்தன. கந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து வணங்கினான். பின்னர் கந்தன் தன் உருவைச் சுருக்குவே தான் பார்த்த காட்சி அவனுக்கு மறந்து துர்க்குணம் தலை தூக்கியது. மீண்டும் போரிட்டான். கந்தன் வேலை எறியவே அவன் மாமரமாக மாறி நின்றான். அந்த வேல் மரத்தை இரண்டாகக் கிழித்தது. அப்போது சூரன் ஒரு பகுதி மயிலாகவும் ஒரு பகுதி சேவலாகவும் மாறினான். மயிலை அடக்கி அதன் மீது ஏறி உலகமெல்லாம் வலம் வந்த முருகன். சேவலை தன் கொடியில் இடம் பெறச் செய்து விட்டார். தன் கணவரின் ஆயுள் முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்ட சூரபத்மனின் பட்டத்தரசி பத்மகோமளாவும் மற்ற மூவாயிரம் மனைவியரும் இறந்து போனார்கள். சூரபத்மன் முழு ஞானம் பெற்று முருகனுக்கே காலமெல்லாம் சேவகம் செய்தான். பகைவனுக்கும் அருளிய அந்த வண்ண வடிவேலனுக்கு வெற்றிப் பரிசாக இந்திரன் தன் வளர்ப்பு மகள் தெய்வானையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருப்பரங்குன்றத்தில் நடந்த அந்த இனிய நிகழ்ச்சியை தேவர்கள் கண்டு மகிழ்ந்தனர். கஷ்டங்கள் வரும் போது அழைத்தால் நம்மை தேடி வருவான் வடிவேலன்.

முருகனின் கந்த புராணம் நிறைவடைந்தது.

கந்தபுராணம் பகுதி -26

பானுகோபனும் வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு புரிந்து விட்டது. எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான் அதிபயங்கர யுத்தம் நடந்தது. எங்கும் நெருப்பு பிடித்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. வெப்பத்தின் உக்கிரத்தில் கடலே வற்றிவிடும் போல் தோன்றவே. சமுத்திரராஜன் கலங்கி நின்றான். இந்த உலகத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என தேவர்களெல்லாம் முருகனிடம் சென்று வேண்டினர். அவர் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். இதே நிலை தான் சூரபத்மனுக்கும். இந்த அதிபயங்கர நெருப்பு உலகத்தையே அழித்து விட்டால் அதில் சிக்கி எல்லோருமே இறந்து விடுவோம். என்னாகப் போகிறதோ என நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

இந்த நேரத்தில் அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால் எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன் வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை எய்தான். அது அதிவேகமாகப் பாய்ந்து வந்தது. அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். வீரபாகு மூர்ச்சையான விபரம் முருகனுக்கு தெரிய வரவே அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல் மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது.

கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும் வீரபாகுவும் முருகனை வணங்கினர். தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன் என வீரபாகு சபதம் செய்தான். பானுகோபன் வெற்றிக்களிப்பில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு தூதுவன் வேகமாக வந்து வீரபாகு மீண்டும் தப்பி விட்டதைச் சொன்னான். அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும் என எச்சரித்தான். பத்மாசுரனோ பெற்ற மகன் மீதே எரிச்சல்பட்டான். இப்படியெல்லாம் பேசினால் அவனை விழுங்கி விடுவதாகச் சொன்னான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்துச் சென்றான். ஆவேசமாகப் போரிட்டான். ஆனால் தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்கு அடியில் மீன் வடிவில் ஒளிந்து கொண்டான். அடுத்து சூரனின் இன்னொரு மகனும் பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான்.

கந்தபுராணம் பகுதி-25

சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில் அவனது மனைவி பத்மகோமளாவும் மகன் பானுகோபனும் வந்தனர். தந்தையின் மனநிலையை அறிந்த பானுகோபன் அப்பா நீங்கள் செய்தது கொஞ்சம் கூட முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை நான் அந்த முருகனிடம் ஆயுதங்களை இழந்து திரும்பினேன் என்பதற்காக என் வீரத்தை நீங்கள் குறைத்து எடை போட்டு விட்டீர்கள் போலும் நானும் சிறுவன் அந்த முருகனும் சிறுவன். நாங்கள் போட்டியிட்டு யார் தோற்றாலும் அவமானம் வரப்போவதில்லை. அங்கே வீரம் மட்டுமே பேசப்படும். நீங்கள் அப்படியா அண்டசராசரத்தை அடக்கியாளும் சக்கரவர்த்தியான நீங்கள் அந்த முருகனை வென்றால் ஒரு சிறுவனை வென்று விட்டதாக சூரன் கொக்கரிக்கிறான் என்றும் தோற்றுப்போனால் கேவலம் ஒரு சிறுவனிடம் போய் சூரன் தோற்றானே என்றும் தான் உலகம் பழிக்கும். எப்படிப்பார்த்தாலும் அது உங்களுக்கு அவமானத்தையே தேடித் தரும். கவலைப்படாதீர்கள் மீண்டும் நான் போகிறேன். அந்தச் சிறுவனை தூக்கி வந்து உங்கள் காலடியில் போடுகிறேன். அவனை ஒழித்து விடுங்கள். அந்த முருகன் இருக்கும் தைரியத்தில் திமிர்பிடித்து அலையும் பிரம்மாவையும் விஷ்ணுவையும் சிறையில் தள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஆவேசமாக சிரித்தான்.

பத்மாசுரன் அவனது வீரம் பொங்கிய பேச்சால் மகிழ்ந்தாலும் அன்புச் செல்வமே பானுகோபா நீ நினைப்பது போல் அந்த வடிவேலனை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவனை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். வேண்டுமானால் அவனுக்கு வலது கையாக இருக்கிறானே ஒரு தூதன் வீரபாகு அவனைப் பிடித்துக் கொண்டு வா என்றான் வீராப்புடன். பானுகோபன் தலையசைத்தான். ஒரு நொடியில் வருகிறேன் தந்தையே என்றவன் தாய் கோமளாவிடம் ஆசி பெற்று புறப்பட்டான். வீரபாகுவும் சாதாரணமானவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். அவனை வெற்றி கொள்ள சாதாரண அஸ்திரங்கள் போதாது. அவனை மயங்க வைத்து விட்டால் கட்டி வைத்து தந்தை முன் கொண்டு வந்து போடலாம் என்று எண்ணத்தில் தன் பாட்டி மாயையை நினைத்தான். இவள் காஷ்யப முனிவரின் மனைவியாக இருந்து அசுரகுலத்தை உருவாக்கியவள். சூரபத்மனின் தாய். பானுகோபன் நினைத்த மாத்திரத்தில் பாட்டி மாயை அவன் முன்னால் வந்தாள். பானுகோபா என் செல்லப் பேரனே வீரத்திருமகனே எதற்காக என்னை அழைத்தாய். என் அன்பு பேரனுக்காக எதையும் தருவேன் என்றாள்.

பானுகோபன் அவளிடம் எங்கள் குலத் தலைவியே என்னருமை மூதாட்டியே அசுரர் குலத்துக்கு முருகன் என்பவனால் ஆபத்து வந்துள்ளது. அவனது தூதனாக வந்த வீரபாகுவை கட்டியிழுத்து வரும்படி தந்தை கட்டளை இட்டிருக்கிறார். நீங்கள் தான் அசுர குலத்திற்கு வித்திட்டவர்கள். அந்த தேவர் படையை வெல்லும் ஆலோசனையும் ஆயுதமும் தந்தால் அவனைப் பிடித்து விடுவேன் என்றாள். பானுகோபா உங்களால் தேவர்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் உண்டு. பிரம்மாவையும் விஷ்ணுவையும் அதிகமாக கொடுமைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்படியாக நிலையில் அவர்களை வெல்வது என்பது சாத்தியமல்ல இருந்தாலும் முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிகளின் அடிப்படையில் உனக்கு ஒரு அபூர்வமான ஆயுதத்தை தருகிறேன். இந்த மோகனாஸ்திரத்தை எய்தால் யாராக இருந்தாலும் மயங்கி விடுவார்கள். அந்த நிலையில் அவர்களை கட்டி இழுத்துப் போக வசதியாய் இருக்கும். வெற்றி உனதே என்று வாழ்த்தி பேரனை உச்சிமுகர்ந்து அஸ்திரத்தை கொடுத்து விட்டு மறைந்து விட்டாள். பானுகோபன் மகிழ்ச்சியுடன் சென்றான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு உன்னைத் தேடி சூரனின் மகன் பானுகோபன் வருகிறான். அவனை வெற்றி கொள்வது உனது கடமை. அவனிடம் உன்னை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் இருக்கிறது. நீ அதற்கு கட்டுப்பட்டால் அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் என்னிடம் இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். போய் வா இம்முறை வெற்றிக்கனி உனக்குத்தான் என வாழ்த்தி வழியனுப்பினார். முருகனின் வாயாலேயே வெற்றி என சொன்ன பிறகு வீரபாகு அவரது தாழ்பணிந்து வணங்கி புறப்பட்டான். சேனைகள் அணிவகுத்துச் சென்றன.

கந்தபுராணம் பகுதி-24

வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான். அடேய் நீயா அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய் விடு என்றான். வீரபாகு எக்காளமாகச் சிரித்தான். அடேய் அசுரா நான் நினைத்தால் இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன் என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய அனுப்பியுள்ளார். எடு வில்லை முடிந்தால் தோற்கடித்துப் பார் என சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வீரபாகுவை மிகச் சாதாரண கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வீரபாகு பல அம்புகளை அவன் மீது எய்தான். அவை சூரனின் இரும்பு உடல் மீது பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான். பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வீரபாகு வியப்படைந்தான்.

சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால் சாதாரண காரியமா அது மட்டுமல்ல அவனை அழிக்கும் சக்தியாகவும் சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது வேறு யாரால் அவனைச் சாய்க்க முடியும். வீரபாகு மனம் தளரவில்லை. தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான். பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன. அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து விட்டான். வீரபாகு மீதுபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வீரபாகு களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக மோதினர். பூவுலகில் பிறந்தவன் மனிதனாயினும் சரி அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும் வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன் பத்மாசுரனின் முன் எமனாக வந்து நின்றான். பத்மாசுரா என் வீரர்களை வெற்றி கண்டுவிட்டதாக மமதை கொள்ளாதே. இதோ நான் இருக்கிறேன். உன் படையைச் சந்திக்க இதோ எனது பெரும் படை இருக்கிறது. வீணாக அழிந்து விடாதே. என்னிடம் சரணடைந்து விடு என முழக்கமிட்டார் முருகன். சூரன் சிரித்தான். இங்கே வந்து உன் படை தவிடு பொடியாகி விட்டது. கிரவுஞ்சன் என்ற சிறுவனையும் தாரகன் என்ற எனது தம்பியான கோழையையும் ஜெயித்து விட்ட ஆணவத்தில் என்னையும் சாதரணமாக கருதாதே. நான் உன்னை ஒரே பாணத்தில் கொன்று விடுவேன். சிறுவன் என்பதால் உயிர்ப்பிச்சை தருகிறேன் ஓடிப் போய் விடு என முருகனை எச்சரித்தான்.

முருகப்பெருமான் அவனுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். பல்வேறு ஆயுதங்கள் இருதரப்பிலும் பரிமாறப்பட்டன. உக்கிரமான போர் நடந்தது. முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி விட்டார். ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே என சூரன் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். இந்நிலையில் அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் முருகன். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. சூரனின் நிலை கண்டு அவனது படைகள் சற்றும் தளராமல் முருகனின் படையினருடன் போரிட்டனர். போர்க்களத்தில் நின்றபடி சூரன் யோசித்தான். இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல இவனை அழிப்பதென்றால் சற்று கடினமானது தான். மீண்டும் நம் ஊருக்குள் சென்று பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும் என்றபடியே அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன். சூரன் ஓடிப்போனதை அறிந்து தேவர்கள் முருகனைக் கொண்டாடினர்.

முருகா தாங்கள் நினைத்திருந்தால் வேலாயுதத்தை எறிந்து அந்த சூரனை நொடியில் அழித்திருக்க முடியும். ஆனாலும் தாங்கள் எங்கள் மீது கிருபை செய்யவில்லை. சூரனால் நாங்கள் இன்னும் வேதனைப்பட வேண்டும் என்பது விதிபோலும் சூரன் மாயத்தால் மறைந்திருந்தாலும் தாங்கள் இந்த வேலை அனுப்பினால் அவன் எங்கிருந்தாலும் தாக்கி அழித்து விடும். கருணைக் கடவுளான முருகன் அவர்களிடம் எதிரிகளாக இருந்தாலும் ஆயுதமற்றவனைக் கொன்றோம் என்ற அவச்சொல் நமக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல அவன் மீது கொண்ட கருணையால் தான் அவனை நான் அனுப்பி விட்டேன். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருந்தாமல் திரும்பி வந்தால் அவனை அழிப்பதில் தவறில்லை. சூரன் திருந்த மாட்டான் என்பது நானும் அறிந்ததே மீண்டும் அவன் வருவான். அப்போது அவனை நிச்சயம் நான் விடமாட்டேன். நீங்கள் அமைதியாய் இருங்கள் என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இந்த நேரத்தில் வடிவேல் முருகன் போர்க்களத்தில் மயங்கியும் இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள் படையினரை தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர். அரண்மனைக்குள் புகுந்த பத்மாசுரன் மீண்டும் முருகனை அழிப்பது பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்தான்.

கந்தபுராணம் பகுதி -23

தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன் இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் முருகனை ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம் செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள் லட்சக்கணக்கான படைகள் தயாராயின. சூரபத்மன் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். யுத்த தொடர்பான வாத்தியங்கள் எழுப்பிய சப்தம் விண்ணைப் பிளந்தது. ஆரவார ஓசைக் கிடையே சூரபத்மன் போர்களத்திற்கு சென்றான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. உலகையே காக்கும் பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது. பாறைகளையும் மரங்களையும் பிடுங்கி அசுரர்கள் மீது வீசி ஏராளமானோரை முருகனின் படையினர் கொன்றனர். சிங்கமுகனின் மகனான அதிசூரன் இதுகண்டு திகைத்தான். இருந்தாலும் மனம் தளராமல் முருகனின் படையை நோக்கி தேரில் விரைந்து சென்றான்.

பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவன் அவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். இப்படியாக இருவரும் கடுமையாக போரிட்டனர். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்துக்கொண்டான். தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து தங்கியது. அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான். தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரன் ஆச்சரியப்பட்டான். அவன் மட்டுமல்ல நாராயண அஸ்திரத்திற்கு மயங்காத உக்கிரனைப் பார்த்து தேவர்களும் ஆச்சரியமடைந்தனர். அங்கு நின்ற பிரம்மாவிடம் படைப்புக் கடவுளே நாராயண அஸ்திரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. அது யாரையும் அழிக்காமல் விட்டதில்லை. அப்படியிருந்தும் உக்கிரன் எப்படி தப்பித்தான் என கேட்டனர். அதற்கு பிரம்மா யார் ஒருவன் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மனதார வணங்குகிறானோ அவனை எத்தகைய சக்தி உள்ளவர்களாலும் வதைக்க முடியாது. அதன்படியே இவன் தப்பித்தான். இதைத்தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றார்.

இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும் அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன் பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன் அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர். தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டு வைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான். அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான் வீரபாகு.

அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான். இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர். வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால் ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீது அசுரர்கள் பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள் செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கின. அவர்கள் மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவீரர்களில் ஒருவரான வீரமார்த்தாண்டன் சூரபத்மன் மீது ஏராளமான பாணங்களை அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி தள்ளிவிட்டான். மற்றொரு நவவீரனான வீரராட்சஷன் பத்மாசுரன் மீது அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன் விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர் வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தான். வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வீரபாகு கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால் வந்து நின்றான்.

கந்தபுராணம் பகுதி -22

சிங்கமுகா அந்தச் சிறுவன் முருகனைக் கண்டா நடுங்குகிறாய் கேவலம். அசுர குலத்துக்கே கேவலம் உன்னைத் தம்பியாக அடைந்ததற்காக வேதனைப்படுகிறேன் என்றான் சூரபத்மன். நல்லதை எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளாத அண்ணனிடம் வயதில் குறைந்த தம்பி என்ன செய்ய இயலும் இவனுக்கேற்ப பேசிவிட்டு போவதே நல்லது என எண்ணி அப்படியே பேச்சைத் திருப்பினான். அண்ணா நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் பராக்கிரமம் பற்றி நான் அறிவேன். இருந்தாலும் ஒரு சிறுவனைக் கொன்ற பழி பாவம் உங்களை அடைந்து விடக்கூடாதே என்று தான் அப்படி சொன்னேன். நீங்கள் எங்கே அந்த சிறுவன் எங்கே உங்கள் தகுதிக்கு நீங்கள் அவனுடன் போரிட செல்ல வேண்டாம். நானே போகிறேன். அவனை இழுத்து வருகிறேன் என்று சொல்லவும் சூரபத்மனுக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது. சிங்கமுகா என் உள்ளத்தின் உறுதியை அறிய நீ அப்படி பேசியிருப்பாய் என அறிந்தேன் நீ சுத்த வீரன். உன்னைப் போன்றவர்கள் அவனுடன் போருக்கு போகக்கூடாது. நம் குழந்தை பானுகோபனை அனுப்புவோம். அந்த சிறுவனுக்கு இந்த சிறுவன் தான் சரியான ஆள். சூரியனை வென்றதால் தானே இவனுக்கு பானுகோபன் என்று பெயர் வைத்தோம். அப்படிப்பட்ட திறமைசாலியின் முன் அந்த முருகனால் நிற்க முடியுமா நீ சென்று ஓய்வெடு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கொக்கரித்தான். அசுரகுலத்தின் அழிவு உறுதி என எண்ணி வருந்தியபடியே சிங்கமுகன் அங்கிருந்து போய்விட்டான்.

இதனிடையே முருகப்பெருமான் படைகளுடன் வீரமகேந்திரபட்டணத்திற்கு கிளம்பினார். சூரபத்மனை அழித்தே தீருவது என்ற முடிவில் இருந்த அவர் கடல் கடந்து அவ்வூருக்குள் செல்ல வேண்டியிருப்பதை அறிந்தார். முருகன் தண்ணீரில் கால் வைத்ததும் கடலரசன் பணிந்தான். தண்ணீர் அங்கே வற்றிப் போய்விட்டது. அதன் வழியே படைகள் வீரமகேந்திரபட்டணத்தை ஒட்டிய இடத்துக்கு சென்று விட்டன. விஸ்வகர்மாவை அழைத்த முருகன் அங்கே நானும் படைகளும் தங்குவதற்கு ஒரு பட்டணத்தை அமைக்க உத்தரவிட்டார். கணநேரத்தில் விஸ்வகர்மா ஒரு பட்டணத்தை அமைத்து விட்டார். அவ்வூருக்கு கந்தமாதனர் என பெயர் சூட்டப்பட்டது. முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்ட அந்நகரம் ஜொலித்தது. படைகள் அங்கிருந்த வீடுகளில் சுகமாகத் தங்கினர். முருகப்பெருமான் கடல் கடந்து தன் பட்டணத்தருகே முகாமிட்டிருப்பதை தூதுவர்கள் மூலம் சூரபத்மன் அறிந்தான். கடலரசனான சமுத்திரராஜனை அழைத்தான். ஏய் சமுத்திரராஜா என்னைக் கேளாமல் எப்படி முருகனின் படைகளுக்கு வழிவிட்டாய். உன்னைத் தொலைத்து விடுகிறேன் என்றான். நடுநடுங்கிய சமுத்திரராஜன் மகாசூரரே நான் என்ன செய்வேன் முருகப்பெருமானும் அவரது பூதப்படைகளும் உள்ளே இறங்கியதுமே நான் சேறும் சகதியுமாகி விட்டேன். அவரது வேலாயுதம் சிந்திய ஒளியில் வற்றிப் போய் தூசியும் துகளுமாகி விட்டேன். மணல் மட்டுமே மிஞ்சியது. அதன் வழியே அவர்கள் நடந்து சென்று விட்டனர். நான் மீண்டும் குளிர்ந்த திரவநிலை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் மகாபிரபு என்று சொன்னான்.

சூரன் அவனை விரட்டிவிட்டு போருக்கான ஆயத்தத்தில் இறங்கினான். மகன் பானுகோபனை அழைத்து அந்த முருகனை கட்டி இழுத்து வா. அசுரகுல பெருமையைக் காப்பாற்று என உத்தரவிட்டான். பானுகோபன் ஆர்ப்பரித்து எழுந்தான். பலலட்சம் படை வீரர்களை திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்து அந்த பானுகோபனைக் கொல்வது உன் வேலை என உத்தரவிட்டார். வீரபாகுவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. முருகன் இட்ட கட்டளையில் வெற்றிபெற பல்வேறு வீயூகங்களை வகுத்து பானுகோபனுடன் போராடினான். இவருமே தீரர்கள் என்பதால் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும் அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும் பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். வீரபாகு போன்றவர்கள் எழ முடியாமல் மயங்கி விட்டனர்.

கருணைக்கடலான முருகப்பெருமான் இந்தக் காட்சியைக் கண்டார். தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்தன. இது முருகனின் கருணையால் நடந்தது என்பதையறிந்து அவரை போற்றிப் புகழ்ந்தனர். பின்னர் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்தான். பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பானுகோபன் கொண்டு வரவில்லை. அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. பாசுபதாஸ்திரம் தன் மீது ஏவப்பட்டால் உயிர் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது. போரில் இருந்து பின் வாங்கினான் தேரை திருப்பினான். அரண்மனையை நோக்கி சென்றான். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. மீண்டும் போர்க்களம் போவேன். அந்த வீரபாகுவை ஒரு நாழிகை நேரத்தில் கொல்வேன் இல்லாவிட்டால் அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன் என்று சபதம் செய்தான். அந்த சபதம் அசுரகுலத்தை உலுக்கியது.

கந்தபுராணம் பகுதி -21

வீரபாகு சூரனின் மிரட்டலை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சூரபத்மா மீண்டும் எச்சரிக்கிறேன் ஜெயந்தனை விடுதலை செய்கிறாயா அல்லது உன்னை நானே கொன்று போட்டு விடட்டுமா என்றான் ஆவேசமாக. சூரனை சுற்றி நின்ற அசுரர்களும் ஆவேசமானார்கள். வீரபாகுவை பிடிக்க அவர்கள் முயற்சித்தனர். பலமடங்கு கோபத்தில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த சூரபத்மன் ஆயிரம் தலைகள் இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்களை வீரபாகுவைப் பிடிக்க ஏவினான். வீரபாகு எழுந்தான். அவன் எழவும் ரத்தின சிம்மாசனம் தானாக மறைந்து விட்டது. வீரபாகு அரண்மனைக்கு வெளியே பாய்ந்து சென்று அதன் முகப்பில் இருந்த 20 ஆயிரம் கலசங்கள் பொருந்திய கோபுரத்தை பிடுங்கினான். அதை தூக்கி தன்னைத் தாக்க வந்த கொடிய அசுரர்கள் மீது வீசினான். அதன் அடியில் சிக்கி அவர்கள் மாண்டனர். பின்னர் அரண்மனைக்குள் வந்தான். சூரபத்மனின் ஆஸ்தான மண்டபத்தை தன் கையாலேயே இடித்து நொறுக்கி எக்காளமாய் சிரித்தான். சூரபத்மன் தன் மகன் வஜ்ரபாகுவை வரவழைத்தான். டேய் நீ அந்த பாதகனைக் கொல் என்றான். வஜ்ரபாகு பத்தாயிரம் குதிரை பூட்டிய தேரில் ஏறி வீரபாகு மீது எற்ற வந்தான். வீரபாகு தன் காலால் எட்டி உதைத்து தேரை நொறுக்கினான். வஜ்ரபாகு பல மாளிகைகள் பிடுங்கி வீரபாகு மீது வீசினான். வீரபாகுவின் சில பாணங்களின் தாக்குதல் தாங்காமல் அவ்வப்போது களைப்படையவும் செய்தான்.

வீரபாகு வஜ்ரபாகுவின் ஆயுதங்களை முழுமையாக அழித்து விட்டு அவனைப் பிடித்து இழுத்தான். நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அலறியபடியே உயிர்விட்டான் வஜ்ரபாகு. அதன் பிறகும் கோபம் தணியாத வீரபாகு வீரமகேந்திர பட்டணத்தை சின்னா பின்னப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று விட்டான். சூரபத்மனும் அவன் மனைவி பத்மகோமளையும் மகனின் பிரிவால் அழுதனர். அப்போது மந்திரி தாமகோபன் வந்தான். மகாராஜா துன்பங்கள் மிஞ்சும் நேரத்தில் அழுது கொண்டிருப்பது எந்த தீர்வையும் தராது. நம் இளவரசரின் ஆயுள் அவ்வளவு தான் அவருக்கு நிர்ணயிக்கப்பட்டதை மாற்ற யாராலும் இயலாது. துன்பத்தை விடுங்கள். நடக்கப் போவதை இனி கவனிப்போம். தங்களால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திருச்செந்தூரில் இருந்து திரும்பி விட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்படி நாம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அசுரகுலத்திற்கு கெட்ட நேரம் வந்திருக்கிறது. அதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்குரிய ஆலோசனைகளை உடனடியாகச் செய்தாக வேண்டும். மந்திராலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள் என்றான்.

திருச்செந்தூரில் இருந்து திரும்பிய ஒற்றர்களிடம் சூரபத்மன் அங்கு நடந்தது பற்றி விசாரித்தான். அவர்கள் சூரனிடம் மகாபிரபு இளவரசர் வஜ்ரபாகுவைக் கொன்ற வீரபாகு மின்னலென பாய்ந்து திருச்செந்தூர் வந்தான். அவனை முருகன் ஆலிங்கனம் செய்து கொண்டார். இங்கு நடந்த விபரங்களை விளக்கமாகச் சொன்னான். முக்கியமாக நம் இளவரசர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் தேவர்களெல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஜெயந்தனையும் மற்றவர்களையும் நீங்கள் விடுதலை செய்ய மறுத்து விட்டதால் தங்களுடன் போரிடவும் அந்த முருகன் தயாராகி விட்டார். உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார் என்றனர். உடனே சூரன் அந்த பிரம்மாவைக் கூப்பிடு. வீரபாகுவால் சிதைக்கப்பட்ட நம் நகரத்தை முதலில் சரி செய்வோம். பின்னர் போருக்கு ஆயத்தமாவோம். என்றான். ஒற்றர்கள் தலை குனிந்தனர். பிரபு பிரம்மா இனி இங்கு வரமாட்டார். அவர் முருகன் இருக்கும் திருச்செந்தூரில் முருகன் அருகிலேயே அமர்ந்து விட்டார். எனவே நாம் மாற்று ஏற்பாடு தான் செய்ய வேண்டும் என்றனர். உடனே சூரன் மற்றொரு அண்டத்தின் பிரம்மாவை வரச்செய்து அவரைக் கொண்டு நகரை மீண்டும் கட்டினான். இதன் பிறகு யாரை போருக்கு அனுப்புவதென்ற பேச்சுவார்த்தை நடந்தது.

வீரம்மிக்க பல அசுரர்கள் முன்வந்தனர். சூரபத்மனின் புதல்வர்களான இரண்யன், சிங்கமுகன் ஆகியோர் போருக்கு செல்ல முன்வந்தனர். காலஜித், கண்டன், அனவன், சிங்கன் ஆகிய படைத்தலைவர்கள் போருக்கு முன்வந்தனர். அடுத்து வீரத்திலகனான பானுகோபன் எழுந்தான். இவன் சூரபத்மனின் வீரத்திருமகன் தந்தையே என் சகோதரன் வஜ்ரபாகுவைக் கொன்ற கூட்டத்தை என் கையால் அழித்தால் தான் எனக்கு தூக்கமே வரும். அந்த முருகனைப் பந்தாடிவிட்டு வருகிறேன். உத்தரவு கொடுங்கள் என்றான் இப்படியாக முருகனுடன் போருக்குச் செல்ல பலர் ஆர்வமாக முன்வர சூரபத்மன் மகிழ்ச்சியடைந்திருந்த வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கருத்தைச் சொன்னான் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன். அண்ணா நீங்கள் எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. படைத்தலைவர்கள் அவசரப்படுகிறார்களே ஒழிய சிந்திக்கவில்லை. உங்களில் யார் போருக்குச் சென்றாலும் உயிரிழப்பது உறுதி. யாரோ ஒரு வீரபாகு அவன் முருகனுக்கு தூதுவன் ஒரு தூதுவனே நம் அருமை மைந்தன் வஜ்ரபாகுவைக் கொன்றிருக்கிறான் என்றால் அவனது தலைவனான முருகனின் ஆற்றலை நாம் சிந்திக்க வேண்டும் அண்ணா நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த முருகனிடம் நாம் சரணடைந்து விடுவோம். தேவர்களை விடுதலை செய்து விடுவோம். பின்னர் நம் நாடு நகரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம். பராக்கிரமம் மிக்க அவனிடம் போரிட்டு நம் இனத்தையே அழிப்பதை விட இது நல்ல யோசனை தானே என்றான். இப்படி ஒரு ஆலோசனை தம்பி சிங்கமுகனிடம் இருந்து வருமென சூரபத்மன் எதிர்பார்க்கவில்லை. அசுர சபையும் முகம் சுளித்தது. சூரபத்மன் ஆவேசத்துடன் முட்டாளே உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்று சீறினான்.

கந்தபுராணம் பகுதி -20

அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன் ஜெயந்தா நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். அவன் பராக்கிரமசாலி. சூரனை நிச்சயம் சந்தித்து அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான். அந்நேரத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். அங்கே பெரும் அதிர்வு ஏற்பட்டது. அவன் ஜெயந்தனிடம் இந்திரன் மகனே கவலைப்படாதே. நல்ல நேரம் பிறந்து விட்டது. மீண்டும் நீங்கள் அவரவருக்குரிய பதவியைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப் போகிறீர்கள். சூரனின் சாம்ராஜ்யம் அழியும் என்று ஆறுதல் கூறி விடை பெற்றான்.

வீரமகேந்திர பட்டணத்தின் தெருக்களில் மற்றவர் கண்ணுக்கு தெரியா வண்ணம் தன் உடலை மறைத்துக் கொண்டு நடந்தான். சூரபத்மனின் கம்பீரமான அரண்மனையை நோட்டமிட்டான். அரண்மனை வாசலில் கோரைப்பற்களும் பார்த்தாலே பயந்து நடுங்கும் விதத்திலும் கோரத் தோற்றமும் உடைய இரண்டு காவலர்கள் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலா வந்தனர். உக்ரன் மயூரன் என்ற அந்தக் காவலர்களின் கண்ணுக்கு வீரபாகு அங்கே நிற்பது தெரியவில்லை. வீரபாகு இதைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்து சபாமண்டபத்தில் வந்து நின்றான். சூரபத்மன் மிக கம்பீரமாக ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நெற்றியிலும் உடலிலும் மூன்று பட்டையாக திருநீறு ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து தலையில் கிரீடம் சூடி ஆடம்பரமாகவும் அமர்க்களமாகவும் வீற்றிருந்தான். வீரபாகு யோசித்தான். இவ்வளவு அமர்க்களம் செய்யும் இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு. முருகப்பெருமானை துதித்தான் உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் அந்து வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் தன் உருவத்தை திடீரென வெளிப்படுத்தினான். சிம்மாசனத்தை இழுத்துப் போட்டான். சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான். இதைக் கண்டு சூரபத்மனும் அவையில் இருந்த மற்ற அசுரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சூரன் அதட்டினான். யார் நீ என் இடத்துக்குள்ளேயே வந்து என் முன்னாலேயே கால் மேல் கால்போட்டு மரியாதையின்றி அமர்ந்திருக்கும் உன்னை எமலோகம் அனுப்பியிருப்பேன். இருப்பினும் இத்தனை கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்த நீ மாயாஜாலத்தில் சிறந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு நீ வந்த காரியம் பற்றி கேட்கிறேன் அதை விரைவாக என்னிடம் சொல் என்றான். வீரபாகு தன்னைப் பற்றியும் தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி முருகன் தோன்றியுள்ளதையும் ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான். சூரபத்மனுக்கு மீசை துடித்தது. வீரபாகு தொடர்ந்தான். உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவும் முருகப்பெருமான் தயாராக இருக்கிறார். நீ உடனடியாக தேவேந்திரனின் மகன் ஜெயந்தனையும் மற்ற தேவர்களையும் விடுதலை செய்தால் அது சாத்தியமாகும் உன் ராஜ்யத்தையும் நீ காப்பாற்றிக் கொள்ளலாம். மறுத்தால் உன் தலை போய் விடும் முருகனின் சார்பில் எச்சரிக்கிறேன் என்றான்.

சூரபத்மன் கோபம் கொப்பளிக்க இருக்கையில் இருந்து எழுந்தான். அடேய் பொடியனுக்கு தூதுவனாய் வந்த பொடியனே நான் இருக்கையில் எழுந்த பிறகும் என் முன்னால் அமர்ந்திருக்கிறாயே திமிர் பிடித்தவனே நான் அந்த பொடியனிடம் சரணடைய வேண்டுமா என் தம்பியைக் கொன்ற அன்றைய தினமே அவனைக் கொல்ல முடிவெடுத்தேன். ஆனால் ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டேன். இப்போது அவன் என் ராஜாங்க காரியத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டான். சிவனிடம் பெற்ற வரத்தால் இந்த உலகையே என் பிடியில் வைத்துள்ள நான் ஒரு சிறுவனிடம் சரணடைவதா நாளையே என் படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யார் அங்கே அவனைப் பிடியுங்கள் என்றான் சூரபத்மன். வீரபாகு ஆவேசமானான் இருந்த இடத்தை விட்டு எழாமலேயே ஏ சூரனே தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால் உன்னை உயிரோடு விடுகிறேன். இல்லாவிட்டால் உன் தலையை இந்நேரம் நொறுக்கியிருப்பேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் சூரபத்மன் கைகால்கள் நடுங்குமளவுக்கும் முகம் சிவக்குமளவுக்கும் ஆவேசமாகி பிடியுங்கள் அவனைக் கட்டி வைத்து உதையுங்கள் என்றான்.

கந்தபுராணம் பகுதி -19

சூரபத்மனின் தூதர்கள் பல்வேறு உருவங்களில் முருகனைப் பற்றிய ரகசியங்களை அறியப் புறப்பட்ட வேளையில் முருகப்பெருமானும் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். அவர் பல சிவத்தலங்களை தரிசித்த பிறகு திருச்செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு பெரிய கடல் இருந்தது. அங்கே தான் தங்குவதற்கு ஒரு இருப்பிடத்தை உருவாக்கினார். ஐந்து லிங்கங்களை அமைத்து தந்தையையும் வழிபட்டு வந்தார். சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும் சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வர ஒரு தூதனாக வீரபாகுவை அனுப்ப ஏற்பாடு செய்தார். வீரபாகு நீ உடனே சூரன் தங்கியிருக்கும் இடத்திற்கு செல். சூரனின் படை பலத்தை அறிந்து கொள். சூரனால் பிடித்துச் செல்லப்பட்ட ஜெயந்தன் மற்றும் தேவர்களை மீட்டுவிடு. பின்னர் சூரனிடம் எங்கள் தலைவர் முருகனிடம் சரணடைந்து விடு. இல்லாவிட்டால் தலையை இழப்பாய் என எச்சரித்து விட்டு வா என்றார்.

வீரபாகுவுக்கு ஏக சந்தோஷம். அவனைப் போல் வீரனை இனி புராண சரித்திரம் காணாது. வைணவத்தில் ஒரு அனுமானைப் போல் சைவத்தில் வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில் அவரை மனதார வணங்கி விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமான மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர். மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அந்த அசுரனின் படைத்தளபதி வீரசிங்கன் பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். நில் நீ யார் எங்கே போகிறாய் என்றான். வீரபாகு சற்றும் கலங்காமல் நான் வெற்றி வடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா உன்னை ஒழித்து விடுகிறேன் என் பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர்.

அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான். ஏய் நீ யார் தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன் ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன் ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான். அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான். பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு ஒரு கோபுரத்தின் மீது ஏறி மகேந்திரபுரியை நோட்டமிட்டான்.

மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும் ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்படிருந்ததைப் பார்த்தான். இவர்கள் சூரபத்மனால் தண்டிக்கப்பட்டவர்கள். தனக்கு பணியாத தேவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டினான் சூரபத்மன். அவை உடனே முளைத்து விட்டன. தேவர்கள் ஏற்கனவே அமிர்தம் பருகியவர்கள் என்பதால் இத்தகைய நிலை ஏற்பட்டது என்பதை புரிந்து கொண்ட சூரன் அங்கிருந்த சிறையில் அவர்களை அடைத்து விட்டான். அதுபோல் தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். ஜெயந்தனும் தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள் உங்கள் தலைவன் இந்திரனும், இந்திராணியும் எங்கிருக்கிறார்கள் சொல்லாவிட்டால் சித்ரவதை செய்வோம் என்று கூறி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல் லோக நாயகரான சிவபெருமானே எங்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா என் தாயும் தந்தையும் எங்கிருக்கிறார்களோ அவர்கள் என்னவெல்லாம் துன்பம் அனுபவிக்கிறார்களோ என்று புலம்பினான்.

கந்தபுராணம் பகுதி -18

அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும் முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ஏன் இங்கு வந்தான் என்றும் ஆச்சரியப்பட்டான். அவனது பரபரப்பு கண்டு நடக்ககூடாத ஏதோ நடந்து விட்டதை உணர்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுத அசுரேந்திரன் வார்த்தைகள் வெளியே வராமல் தத்தளித்தான். தரையில் விழுந்த மீன்போல் அவன் துடிப்பது கண்டு சூரபத்மன் கலங்கி மகனே எந்தச் சூழலிலும் நாம் பதட்டம் கொள்ளக்கூடாது. மேலும் நாம் அசுரர்கள் நமக்கு தேவர்களிடம் பயமில்லை. சிவனின் பேரருள் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. மேலும் எதையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த அண்டத்தில் இல்லை என பெருமை பொங்க கூறினான். பறித்து விட்டார்கள் பெரியப்பா என் தந்தை உங்கள் தம்பி இப்போது இந்த பூமியில் இல்லை. ஒரு சிறுவன் அவரைக் கொன்று விட்டான். என் தாய்மார்கள் தந்தையோடு உடன்கட்டை ஏறி விட்டார்கள். இப்போது நான் அனாதை. எனக்கு என் நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை. அந்தச் சிறுவனைக் கண்டால் உள்ளம் நடுங்குகிறேன். அவனுக்கு பயந்து ஓடி வந்து விட்டேன் என்று நடுக்கத்துடன் சொன்னான் அசுரேந்திரன்.

சூரபத்மன் இடிஇடியென நகைத்தான். குழந்தாய் நீ எதைப் பார்த்து பயந்தாய். யாரைப் பார்த்து பயந்தாய். தந்தை இறந்தான் என்கிறாய். தாய்மார்கள் உடன்கட்டை ஏறினார்கள் என்கிறாய். என்ன உளறல் இது ஏதேனும் கனவு கண்டு வந்தாயோ கனவுகள் கூட நம் அனுமதி பெற்று தான் நம் கண்களில் தெரிய முடியும். அந்தளவு செல்வாக்கு பெற்றது நம் குலப்பெருமை. மகனே அழாதே. உள்ளே உன் பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அங்கே செல். வேண்டியதை சாப்பிடு. அழகுக்கன்னியர் உனக்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு கூடி மகிழ். போதை பானங்கள் அருந்து. துன்பத்தை மறந்து. இன்ப லோகத்திற்கு செல் என்றான் பரிவோடு. பெரியப்பா என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள். உங்கள் தம்பி மாண்டது உண்மை. அவருக்கு கொள்ளி வைத்த கையோடு இங்கே வந்திருக்கிறேன். அவரைக் கொன்றவன் முருகன். நம் குல தெய்வமான சிவபெருமானின் மைந்தன். நமக்கு அழிவு சிவனால் மட்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புது எதிரி ஒருவன் அதிலும் சின்னஞ்சிறு பாலகன். அவன் திடீரென விஸ்வரூபம் எடுக்கிறான். அவனது சக்திவேல் தந்தையை அழித்து விட்டது என்றான் கண்ணீர் வழிய. சூரபத்மன் நிலைமையைப் புரிந்து கொண்டான். தம்பி போய் விட்டாயா இந்த சிறுவன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே நீ இல்லாமல் எனக்கேது வாழ்வு அசுரகுலத்தின் ஒளி விளக்கே நீயின்றி நான் இந்த உலகை எப்படி கண்காணிப்பேன் என்று கதறினான்.

அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தால் எனக்கென்ன அவனைக் கொன்று கூறு போடுகிறேன். படை கிளம்பட்டும். முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும். உடனே செல்லுங்கள். அந்த முருகனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுங்கள் என ஆர்ப்பரித்தான். கண்கள் ரத்தச் சிவப்பாயின. சபையிலே மன்னன் அழுது கொண்டிருக்கிறான் என்ற சேதியறிந்து. சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் சோகமும் ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். இடிதாக்கிய நாகம் போல் சோகத்தில் சுருண்டு போனான். பலமுறை மயக்கம் தெளிவித்தும் உணர்வற்று கிடந்தான். ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பிய அசுரர்கள் தேரேறி மன்னா படையெடுப்பை நிறுத்துங்கள். ஒரு சிறுவனின் கையால் நம் மாமன்னர் மடிந்திருக்கிறார் என்றால் சற்று சிந்திக்க வேண்டும். தாரகனாரைக் கொன்றவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது என்ற குரல் கேட்டு திரும்பினார்கள் சூரபத்மனும், சிங்கமுகனும்.

அங்கு நின்றவர் சூரபத்மனின் அமைச்சரான அமோகன் அவன் தொடர்ந்தான். அரசே அந்த முருகனை பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள். அவன் சிறந்த பராக்கிரமசாலி சிவமைந்தன். சிவனோடு நமக்கு எந்த பகையும் இல்லை. அவர் உலகை ஆள்பவர். அந்த சர்வேஸ்வரனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அது போல் அவருக்கு பிறந்த முருகனிடமும் நாம் பணிந்து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அறியாமை காரணமாக நம் தாரகனார் அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனது பலத்தைப் பார்க்க வேண்டும். அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் எந்த தைரியத்தில் அவன் அசுரர்களோடு மோதுகிறான் என்ன காரணத்துக்காக மோதுகிறான். ஒருவேளை நம் நீண்ட கால ஆட்சி போதுமென கருதி சிவபெருமானே அவனைத் தூண்டியுள்ளாரா அல்லது நம் குல எதிரிகளான தேவர்களின் உந்துதலால் இப்ப செய்கிறானா எங்கிருந்து அவன் உந்தப்படுகிறானோ அவனை ஒழித்து விட்டால் வடிவேலன் நம்மை துன்புறுத்த மாட்டான் என்றான். அமோகனின் வார்த்தைக்கு மதிப்பளிப்பவன் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்தான். நீங்கள் இதே உருவில் அலைந்து திரிந்து அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வாருங்கள் என கட்டளையிட்டான். அந்த பறவை அசுரர்கள் உயரப் பறந்தனர்.