கந்தபுராணம் பகுதி -5

அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும். சூரபத்மனை வெல்ல இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்து பத்மாசுரனே நான் இன்று முதல் உங்கள் அடிமை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டியது என் கடமை. நான் தங்களைச் சரணடைகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த செல்வபுரியின் வனப்பைக் கண்ட அசுரப்படையினர் ஊருக்குள் புகுந்து அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்தனர். தன் நாடு அலங்கோலமானது கண்டு குபேரன் பெரிதும் வருந்தினான். சூரபத்மன் அவனது பேச்சை பொருட்படுத்தவே இல்லை. அனைத்துச் செல்வத்துடனும் படைகள் புறப்படட்டும் என ஆணையிட்டான். குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி ஈசானன். இவனை பார்த்த சூரன். அப்படியே ஒதுங்கிக் கொண்டான்.

அசுரர்களிடம், வேண்டாம் இவனை வெல்ல நம்மால் இயலுமா என எனக்குத் தெரியவில்லை. இவனை உற்று நோக்குங்கள். இவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. நமக்கு வரமளித்த சிவனும் முக்கண்ணன். ஒருவேளை அவர் தான் இவரோ என எண்ணத் தோன்றுகிறது. வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் எனப் படைகளை கட்டுப்படுத்தி விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். இக்காலத்தில் கூட வாஸ்து முறைப்படி பூஜை அறையை ஈசான முலையில் வைக்க காரணம் இதுதான். இந்த மூலையில் பூஜையறையை வைத்து மனமொன்றி இறைவனை வழிபட்டால் அசுர எண்ணங்கள் மனதை விட்டு அகலும். இறையருளால் தலைக்கு வரும் ஆபத்து கூட தலைப்பாகையோடு போகும் என்பது நம்பிக்கை.

கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. அசுரப்படை அகோரமாய் கத்திக் கொண்டு அங்கு புகுந்தது. எல்லாரையும் விட்டு விட்டு இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள் அசுரர்கள். ஒரு அறையில் பதுங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்கள் அசுரர்கள் கண்ணில் பட அவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி சுமந்து வரச்செய்தார்கள். இதையடுத்து அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன அசுரப்படை. அக்னி தைரியசாலியான அவன் அசுரர்களை நோக்கி தன் நெருப்பு ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான் ஆனால் சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம் அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான். அக்னியே நீ குபேரனைப் போலவோ இந்திரனைப் போலவோ பயந்து ஓடவில்லை. உன்னால் முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால் எங்களைப் பொறுத்தவறை நீ பணியாளன். நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும். என்று ஆறுதல் சொன்னான். ஆனாலும் இந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவதற்குள் அசுரப்படைகள் அக்னி பட்டணத்தை அழித்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.

இதையடுத்து தென்திசை நோக்கி திரும்பியது அசுரப்படை தெற்கே இருப்பது எமலோகம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வர வேண்டியவர்கள் இதோ இப்போது வந்து விட்டார்கள். எமன் தன் லோகத்தில் விளைந்த அரிசி பயிறு வகை உளுந்து சகிதமான படை ஊருக்குள் வருவதற்கு முன்பே நுழைவிடத்தில் போய் நின்று விட்டான். முதலில் வந்த தாரகனின் தாழ் பணிந்து ஐயனே நான் நீங்கள் சொல்லும் நபரை மட்டும் தான் பிடிப்பேன். யாருக்காவது விதி முடிந்தால் கூட நீங்கள் கட்டளையிட்டால் அவரை பிடிக்க மாட்டேன் என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள் என்றான். எமன் மீதும் இரக்கம் கொண்ட தாரகன் படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.

இதன் பின் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட லோகத்தை ஜெயிக்கும் எண்ணம் வந்தது. படைகளை வைகுண்டம் நோக்கித் திருப்பினான். தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் படையைப் பார்த்து ஸ்ரீதேவியும் மகாலட்சுமியும் பாருங்கள். அசுரப்படைகள் நம்மை நோக்கி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க முற்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு இந்த ஆதிசேஷன் மீது படுத்து விடடால் வீடு வாசல் பற்றி கவலையே கிடையாது. எழுந்திருங்கள் என்றனர் மகாவிஷ்ணு சிரித்தார். தேவியே என்ன கலக்கம். நான் கண்மூடி இருந்தாலும் உலகத்தில் நடப்பதைக் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வது சில சமயங்களில் நாம் பக்தர்களைச் சோதிக்கிறோம். சில சமயம் பக்தன் நம்மைச் சோதிக்கிறான். இந்த அசுரர்கள் பெரும் தவம் செய்து முக்கண்ணனான என் மைத்துனரிடமே வரம் பெற்றவர்கள். அவர்களை என்னால் ஏதும் செய்ய முடியாது. வேண்டுமானால் நானும் அவர்களுக்கு ஏதாவது பரிசு வேண்டுமானால் கொடுக்கலாம். அவர்கள் இங்கு வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்றவராய் கண்களை மீண்டும் மூடிவிட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.