கந்தபுராணத்தில் ஐயனார் வழிபாடு

சூரபத்மனின் கொடுமை தாங்க முடியாத இந்திரன் தம் மனைவி இந்திராணியோடு சீர்காழி வந்து தங்கி மூங்கிலில் மறைந்து ஒளிந்திருந்து சிவபூஜை தவம் செய்தார். தமது துன்பத்தை நீக்க கயிலையில் வீற்றிருக்கும் சிவபரம்பொருள் அன்றி எவரும் துணை செய்ய முடியாது என்பதை உணர்ந்த இந்திரன் கயிலை செல்ல முடிவெடுத்தான். அப்பொழுது தனியாக இருக்க இயலாது என்று இந்திராணி அச்சம் கொண்டாள். இந்திராணிக்கு காவலாக இருக்க ஐய்யனாரை பிரார்த்தனை செய்து அழைத்தான் இந்திரன். ஐய்யனார் வீரமாகாளனாய் காவலுக்கு நிற்க இந்திரன் கயிலை சென்றான்.

ஒருநாள் அஜமுகி வந்து இந்திராணியை கைப்பற்ற முயற்சிக்க இந்திராணி ஐய்யனாரை பிரார்த்தனை செய்து அழைத்தாள். அப்பாடல்கள்

பைஅரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம்
செண்டர் கையேனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யார்
மெய்யனே ஓலம் தொல்சீர் வீரனே ஓலம் ஓலம்.

ஆரணச் சுருதி ஓர்சார் அடல்உருத்திரன் என்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத்து எந்தாய் ஓலம்
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலை கணவா ஓலம்
வாரணத்து இறைமேல் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள்.

இந்த இருபாடலும் ஐயனாரை உளம் உருக அழைக்கும் பாடலாகும். ஐயனாரை குலதெய்வமாகக் கொண்ட குடும்பம் இங்கு பலர் உள்ளனர். அச்சம் பயம் ஆபத்து ஏற்படும் காலங்களில் முக்கியமாக பெண்கள் இப்பாடலை பாடி பிரார்த்தனை செய்து ஐயனாரை அழைத்தால் ஐய்யனார் மன தெளிவையும் மன தைரியத்தையும் கொடுப்பார்.

மேலும் கந்தபுராணத்தில்

அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்கும் ஆகி இருந்து எவ் உலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பான் ஆல்

என்று ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் ஐய்யனாரை போற்றிப் பாடுகின்றார். ஐய்யனார் இவ்வுலகையும் உயிர்களையும் காக்கும் தெய்வமாக விளங்குகின்றார் என்பது கந்தபுராணம் வாக்கு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.