கந்தபுராணம்

கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவ ரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் குமரக் கோட்டத்து முருகக்கடவுள் கோவிலின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை இயற்றினார். இப்புராணத்திற்கு முருகப் பெருமானே முதல் அடி எடுத்துக் கொடுத்தார். அதே போல் கந்த புராணத்தை எழுதி முடித்ததும் முருகப் பெருமானே எழுத்துப்பிழை திருத்திக் கொடுத்தருளினார். நூலை அரங்கேற்றம் செய்த போது முருகப் பெருமானே அடியார் திருவடிவம் கொண்டு கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு உதவி புரிந்தார். குமரக் கோட்டத்திலேயே அரசர் பிரபுக்கள் கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் கந்தபுராணத்தை பாடிப் பொருள் கூறி விளக்கி அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். திகடச் சக்கரச் செம்முக மைந்துளான் என்று முதல் பாட்டு துவங்குகிறது. முதல் செய்யுளே இலக்கணப் பிழை உள்ளது என்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டினார். மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து கந்தபுராணத்தை அரங்கேற்றினார் கச்சியப்ப சிவாச்சாரியர். கந்த புராணம் முழுவதும் தினம் ஒரு பகுதியாகப் பாடி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார். இதில் 10346 செய்யுள்கள் உள்ளன. அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றி தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர். சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பவர் கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை சுருக்கித் தொகுத்து 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள் கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். கந்தபுராணத்தில் எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூல நூல் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும். அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81000 ஸ்லோகங்கள் உடைத்து. வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார். அதில் சூரனின் முற்பிறவி வரலாறும் ருத்திராட்ச மஹிமையும் விபூதி மஹிமையும் சிவ நாம மஹிமையும் உள்ளது. பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவபரமானவை அவைகளில் கந்தபுராணம் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு தத்துவங்களையும் எளிதில் தரவல்லது. இதனை படிக்க மங்கலத்தைச் கொடுத்து வலிமை மிக்க கலியின் துன்பத்தை நீக்கும்.

One thought on “கந்தபுராணம்

  1. sundararajan Reply

    திகடச்சக்ர சொல்லுக்
    கு வீர சோழியத்தை இருந்த ஆதாரத்தையும் வெளியிட்டால் கட்டுரை முழு பெரும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.