பூம்பாறை குழந்தை வேலாயுத சுவாமி

மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டது. நடந்த சம்பவத்தை தனது ஞான திருஷ்டியால் கண்ட அருணகிரிநாதர் குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் முருகரை குழந்தை வேலர் என்று அழைத்தார். இப்போதும் முருகர் குழந்தை வேலப்பராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

குழந்தை வேலாயுத சுவாமி சித்தர் போகரால் நவபாஷணத்தால் உருவாக்கப்பட்டவர். போகர் பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். பின்னர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து குருமூப்பு என்ற அருமருந்தால் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு முருகர் சிலையை உருவாக்கினார். அந்த சிலையே இப்போதுள்ள பூம்பாறை மலையுச்சியுள்ள கோவிலில் மூலவராக உள்ளார்.

குழந்தை வேலாயுத சுவாமி கோவிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உள்ளது. மிகவும் பழமையான சிறிய கோவில். இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் சான்றாக உள்ளது. சங்ககாலத்தில் இந்த மலையின் பெயர் கோடைமலை. இத்தல முருகர் விழாக்காலத்தில் தேரில் வீதி உலாவின் போது மலையில் இருந்து தேர் இறங்கும் போது பின் பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் மலைமீது ஏறும் போது முன் பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் இரண்டு பக்கமும் இயக்கப்படுகிறது. இந்த கோவில் பழனி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பூம்பறை முருகனுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.