திருமந்திரம் எழுதிய திருமூலா் வணங்கியதால் இத்தல ஈசனுக்கு திருமூலநாதா் எனும் திருநாமம் ஏற்பட்டதாக கோயில் தல புராணம் சொல்கிறது. திருவள்ளுர் புழல் பகுதியில் இக்கோயில் உள்ளது. நாகாபரணம் அணிந்தபடி திருமூலநாதா் கிழக்கு நோக்கிய கருவறையில் சதுர வடிவிலான ஆவுடையாா் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளாா். லிங்கம் பெரியது. கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்திற்கு இரண்டு முறை புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரியன் தன் ஒளிக் கற்றைகளை நீட்டி திருமூல நாதரை வழிபட்டு செல்கிறார். அம்பாள் ஶ்ரீஸ்வா்ணாம்பிகை. தென்திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். கருவறை மற்றும் அா்த்தமண்டபத்தின் பஞ்ச கோஷ்டங்களில் முறையே விநாயகா் தட்சணாமூா்த்தி விஷ்ணு பிரம்மா மற்றும் துா்க்கை ஆகிய சிலாரூபங்கள் காட்சியளிக்கின்றன. தீா்த்தம் ஸ்வா்ண புஷ்கரணி. தல விருட்சம் வில்வம். துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் நந்தி சன்னதியுடன் கிழக்கு நோக்கிய ஆலயம். அகத்திய மகரிஷி ஈசனின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் கண்டிருக்கிறார்.
மகேந்திரி வாராஹி, பிராமினி, மகேஸ்வரி மற்றும் நாராயணி ஆகியோருடன் தனி சன்னதியில் கருவறைச் சுவரைச் சுற்றி கோஷ்ட விக்கிரகங்களாக வீற்றிருக்கிறார்கள். வெளிப் பிரகாரத்தில் மகா கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், மகா பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வரர், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி, நாகர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் சக்தி கணபதி, சிவலிங்கம், கஜலட்சுமி, வீரபத்ரர், முருகன் சன்னதிகள், வள்ளி, தேவசேனா, அஷ்டோத்திர லிங்கம், மகா சரஸ்வதி, 63 நாயன்மார்கள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், சந்திரன், சூரியன் உள்ளார்கள். கோயிலுக்கு எதிரே கோயில் குளம் உள்ளது. பைரவர் சதுா் புஜங்களுடன், விரிந்த அனல் மகுடம், கண்டிகை, மணிவடம், தோள்வளை, அரைஞாண் போன்ற அணிகலன்க ளுடன் காணப்படுவதோடு இவரது வாகனமான நாய் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. பைரவரின் மேல் வலது திருக்கரம் உடுக்கையைப் பற்றியுள்ளது. இடது திருக்கரம் பாசக் கயிற்றைப் பிடித்துள்ளது. கீழ் வலது திருக்கரம் திரிசூலத்தையும் இடது திருக்கரம் கபாலத்தையும் ஏந்தி காட்சி தருகிறார். இச்சிலையின் காலம் 19 ஆம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.
இத்திருக்கோயில் பல்லவா் காலம் முதலே சிறப்புடன் இருந்தது என்பதற்கு ஆதாரமாக கிபி 8 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்த பல்லவா் கால சுப்ரமண்யரின் சிற்பம் ஒன்று இன்றும் இத்தலத்தில் காணப்படுகின்றது. சதுா்புஜங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் முன்கரங்களில் ஒன்றினை அபய ஹஸ்தமாகக் கொண்டு அமா்ந்த திருக்கோலத்தில் சுப்ரமண்யர் காட்சி கொடுக்கிறார். பல்லவா் காலத்தைத் தொடா்ந்து சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்திலும் இக்கோயில் சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாக சோழ மன்னா்களால் வணங்கப்பட்ட ஜேஷ்டாதேவியின் புராதன சிற்பமும் இத்தலத்தில் உள்ளது. (தற்போது இந்த சிலை கோயிலுக்கு அருகே தனியாக கோயில் எழுப்பப்பட்டு அங்கே உள்ளது) இக்கோயில் முகமண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரத் தூண்கள் பன்னிரெண்டிலும் எழில் வாய்ந்த சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் கிபி 17−18 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்தவையாகும். இத்திருக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை இந்தத் தலத்திலிருந்து திருமுல்லைவாயில் கொடியுடையம்மன் மற்றும் திருவொற்றியூா் வடியுடையம்மன் மீஞ்சுர் திருவுடையம்மன் தலத்திற்கும் செல்வதாகக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக திருவுடையம்மன் கோயிலில் சுரங்கப்பாதை இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் காணலாம்.
தெற்கு கோஷ்டத்தில் கல்லால விருட்சத்தின் கீழ் தட்சணாமூா்த்தி வீராசனத் திருக்கோலத்தில் அருளுகின்றாா். இவரது மேல் இரு திருக்கரங்கள் நாகப்பாம்பினையும் அக்னி தண்டினையும் பற்றியிருக்கிறது. கீழ் வலது திருக்கரம் சின் முத்திரை தாங்கியும் இடது திருக்கரம் புத்தக முத்திரையில் ஏடு ஏந்திய திருக்கரமாகவும் காணப்படுகின்றது. சிரசினை ஜடாபாரம் அலங்கரிக்கிறது. வலது செவியில் அணிகள் ஏதும் இன்றி நீள் செவியாகவும் இடது செவியில் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றது. திருக்கழுத்தில் உருத்திராட்ச மணி, தோள்களில் தோள்வளை, முன்கைகளில் கைவளை, இடையில் தொடை வரை இடைக்கச்சை ஆகிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இச்சிற்ப வடிவம் 15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது என தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.
பாரதம் பாடிய பெருந்தேவனாா் என்ற புலவா் புழல் திருத்தலத்தில் வாழ்ந்தவா். இவா் சங்க காலப் புலவா்கள் வரிசையில் இல்லை என்றாலும் சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தை சேர்ந்தவர். இவரால் எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை மற்றும் புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. இவரது காலம் கிபி 700 க்கு முன்பு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
புழல் கோட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்து இறைவனது பெயர் கல்வெட்டுகளில் புழல் நாயனாா் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சம்புவராய மன்னரான ராஜநாராயண சம்புவராயா், விஜயநகர மன்னர்களான முதலாம் தேவராயன், அச்சுதராயன் போன்ற அரசா்களின் கல்வெட்டுகளாகும். புழல் கோட்டத்திற்கு விக்கிரம சோழவளநாடு என்ற பெயா் இருந்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. விஜயநகர மன்னா்கள் காலத்தில் இவ்வூா் மக்கள் இக்கோயிலுக்கு அளித்த நிலதானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும், இக்கோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. புழல் கோட்டத்தின் தலைமை இடமான புழல் சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் ராஜசுந்தரி நல்லூா் என்று வழங்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் வீரராஜேந்திரன் மகனான கிழக்கு கங்கத்தை அரசாண்ட ராஜேந்திரனின் மனைவி ராஜசுந்தரி என்பவரது பெயரால் இவ்வூா் ராஜசுந்தரி நல்லூா் என்று அழைக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலம் முதலே இத்திருக்கோயில் விளங்கினாலும் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சோழா் காலத்தின் புனரமைக்கப்பட்ட இக்கோயில் மீண்டும் அழிவினைச் சந்தித்ததால் விஜயநகர மன்னா்களின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோயில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சாா்ந்தது என்பதையும் வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். சுந்தரா் இத்தல இறைவனை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளார்.