திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது. திரிசூலகிரி நவிரமலை சஞ்சீவிகிரி மல்லிகார்ஜுன மலை கந்தமலை தென் கயிலாயம் என்று வேறு பல பெயர்களும் உள்ளது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப் பற்றியும் அப்பகுதி மக்களைப் பற்றியும் குறிப்பிடும் ஒரு சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப் பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நூல் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப் பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகை கோவில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனை காப்பாற்ற இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த போது அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்ற காரணத்தினால் இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்ற பெயரும் உண்டானது. ஒருமுறை அம்பிகை சிவனிடம் பூவுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தலம் எது என்று கேட்டாள். சிவபெருமான் அம்பிகை கேட்ட கேள்விக்கு பர்வத மலையை அடையாளம் காட்டினார். உலக மக்களின் நலனுக்காகத் அம்பாள் தவமியற்றிய இந்த மலை அன்னை பார்வதியின் திருப்பெயரை கொண்டு பர்வத மலை என்று போற்றப்படுகிறது. அன்னை பார்வதி தவமியற்றியதன் காரணமாக மலைகள் அனைத்திலும் உயர்வான மலை என்ற பொருளும் பர்வத மலைக்கு உண்டு. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை மலைகளின் அரசன் என்று பொருள்.
மூலவர் மல்லிகார்ஜுனர் என்ற காரியாண்டிக் கடவுள் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். பக்தர்களே இறைவனை தொட்டு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் செய்யலாம். இறைவனை இப்போதும் பௌர்ணமி அன்று இந்திரன் வந்து விழிபட்டு செல்கிறான் என்கிறது கோவில் புராண வரலாறு. அம்பாள் பிரம்மராம்பிகை பர்வத ராணி என்ற பெயரில் மூலவருக்கு இடது புறம் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இரவு அம்பாள் கண்ணத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்பாள் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் கோவில் கட்டிட அமைப்புகள் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியரும் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றனர். வீரபத்திரர் துர்க்கையம்மன் ரேணுகாதேவி சப்தகன்னியர் உள்ளனர். தீர்த்தம் பாதாள சுனைத் தீர்த்தம். இத்திருக்கோவிலின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி அருள்புரிகிறாள். அருகில் சப்த முனிகள் உள்ளனர். மலையில் உள்ள தீர்த்த சுனையிலிருந்து நீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறது.
சிவபெருமான் கைலாயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போது அவர் தனது முதல் காலடியை பர்வதமலையில் வைத்தார். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்தார். பர்வத மலையில் அண்ணாமலையாரின் திருவடி உள்ளது. மலை உச்சியில் ராட்சச திருசூலம் உள்ளது. இக்கோவிலுக்கு கதவுகள் இல்லை. பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். பச்சை அம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம் நடந்து மலை அடிவாரத்திற்கு செல்லலாம். அங்கிருந்து சுமார் 1300 படிக்கட்டுகள் உள்ளது. அதனை தாண்டினால் அதன் பிறகு மலை ஏறுவது போல் ஒற்றை அடிப்பாதையில் கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறை அதில் ஒரு குழி உள்ளது. அதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர். உரல் பாறையைக் கடந்து சிறிது தூரம் மேல் நோக்கிச் சென்றால் பாழடைந்த மண்டபம் உள்ளது. இதற்கு பாதிமண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தை அடைந்தால் மலை உச்சியை அடைவதற்கு பாதி தூரம் வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். அதனால் பாதி மண்டபம் என்று பெயர் வந்தது. அந்த மண்டபம் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது. சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றையடிப் பாதை வழியில் வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம். இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத்தானது. இப்பகுதியை குமரி நெட்டு என்பர். மேலே சென்றால் சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம். வட்ட வடிவமாக அமைந்துள்ள இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில் வளைந்து ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். இதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும். இரண்டு மலைகளுக்கு இடையில் கனமான தண்டவாளங்கள் உள்ளது. இந்தப் பாதையைக் கடந்து சென்றால் ஒரு கல்மண்டபத்தினை அடையலாம். இதற்கு தீட்டுக்காரி மண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் பாதாளச்சுனை என்ற சிங்கக் கிணறு சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகம் உள்ளதென்றும் அதை மனிதர்கள் காண வழியில்லை என்றும் புராண வரலாறுகள் உள்ளது. சித்தர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாக வரலாறு உள்ளது. இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது. இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த பல குகைகள் உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த குகைக்குள் மக்கள் செல்லவே முடியாத படி பாதைகள் உள்ளது. அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித் தால் கடப்பாறை என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது. இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றைப் பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். மேலே ஓரளவு சம வெளிப் பிரதேசத்தை அடையலாம். மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டுகிறது.
பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்றும் பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் ஆராதனை செய்தால் கீழே தரை மட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறது தல புராணம். அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை என்று சொல்வது போல் பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்ற வாசகம் இருக்கிறது. இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் ஞானம் கைகூடும். திரிகால ஞானயோகம் கிட்டும் என்பது கோவில் புராண வரலாறு. திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம். காஞ்சி மகா பெரியவர் கடந்த 1944ம் ஆண்டு மார்கழி முதல் நாள் கிரிவலம் செய்தார். பர்வதமலை முழுவதுமே தனக்கு ஈசனாக தெரிந்தபடியால் அடியவர்களிடமும் பர்வதமலை சாட்சாத் அந்த பரமேஸ்வரனே என்று கூறி மலை மேல் ஏறினால் அவரை மிதிக்க வேண்டி வருமே என்று பர்வதமலையை கிரிவலம் செய்தார்.