கைலாசநாதர் திருகோயில் 9

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சௌவுந்தர்ய நாயகி. புன்னகை காட்டும் முகத்துடன் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்க விட்ட படியும் காட்சி தருகிறாள். தலமரம் வில்வ மரம். தீர்த்தம் தாமிர புஷ்கரணி. ஊர் சேர்ந்தபூமங்கலம். நவ கைலாயத்தில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும். பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்தபூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. தாமிரபரணியின் நீரில் ஒன்பது மலர்களை மிதக்க வைத்தார். ஒன்பதாவது மலர் சேர்ந்த இடமாகையால் சேர்ந்த பூ மங்கலம் என்று பெயர் பெற்றது. இதன் பொருள் மலர் பயணத்தை முடித்த இடம் என்பதாகும். ஒரு நதி கடலுடன் சங்கமிக்கும் இடம் மங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தஉடன் பலிபீடம் கொடிமரம் நந்தி ஆகியவை காட்சித் தருகின்றன. அவற்றை தரிசித்து உள்ளே நுழைந்தால் இடப்புறம் வடக்கு நோக்கிக் காட்சித் தரும் அதிகார நந்தியை தரிசிக்கலாம். பிரகாரத்தில் பரிவார முர்த்திகளாகச் சூரியன் சந்திரன் நால்வர் சுரதேவர் சப்த கன்னியர் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தட்சிணாமூர்த்தி விநாயகர் மீனாட்சி சொக்கநாதர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் துர்க்கை மகாலட்சுமி சரஸ்வதி நடராஜர் சிவகாமி பைரவர் நவலிங்கங்கள் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி உள்ளது. கருவறைக்கு மேலே உள்ள விமானத்தில் யானை மீது குபேரனின் சிலை அவரது இரு துணைவியார்களான சங்கநிதி மற்றும் பத்மநிதியுடன் செதுக்கப்பட்டுள்ளது. 

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் சுக்கிர பகவானுக்கு உரியது. சுக்கிர பகவான் தலம் என்றும் சுக்கிர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அகத்தியரின் வழிகாட்டுதலின் படி 9 இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்கு முகத்தில் நீராடி வழிபட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் முனிவரின் முன்பாக தோன்றி முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.