108 திவ்யதேசத்தில் 78 வது திருக்குறுங்குடி

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 78 வது இக்கோவிலாகும். வராக அவதாரத்தில் திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி தனது மிகப் பெரிய வராக வடிவத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்று பெயர் பெற்றது. மூலவர் நின்றநம்பி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவன் நின்றநம்பிக்கு குறுங்குடி நம்பி மலைமேல் நம்பி என்ற வேறு பெயர்களும் உண்டு. குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு. 1.நின்ற 2.அமர்ந்த 3.நடந்த 4.கிடந்த 5.இருந்த என்று ஐந்து நிலைகளிலும் இக்கோவிலில் பெருமாள் காட்சி தருகிறார். தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். தீர்த்தம் திருப்பாற்கடல் பஞ்சதுறை சிந்துநதி. விமானம் பஞ்சகேதக விமானம். இந்த கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தாலும் அர்ச்சனை கிடையாது. கோவிலில் இறைவனுக்கு நேராக இருக்கும் கொடிமரம் சிறிது விலகி உள்ளது. நின்ற நம்பி கிடந்த நம்பி என்ற இரு சன்னதிக்கு இடையில் சிவன் மற்றும் பைரவர் சன்னதி உள்ளது. கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்து விட்டதா? என்பதை அறிய சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பர்க்கு குறையேதும் உண்டா? என்று பட்டர் கேட்பார். அதற்கு குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள். இது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பெரிய சிவாலயங்களில் விஷ்ணுவுக்கு தனி சன்னதி உள்ளதைப் போல இத்திருக்கோவிலில் சிவனுக்கும் பைரவருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு மகேந்திரகிரி நாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் பெயர். திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக பைரவர் இங்கு இருக்கிறார். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார். இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.

இந்த பைரவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் பைரவரின் மூச்சுக்காற்றில் அசையும் தீபத்தின் வீடியோவையும் பார்க்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்தி இவருக்கு தொல்லை கொடுத்தார்கள். ராமானுஜர் இத்தல இறைவனை வேண்டியதால் கருடராழ்வார் நம்பூதிரிகளிடமிருந்து அவரை மீட்டு இத்தலத்திற்கு தூக்கி வந்தார். ராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தல இறைவன் நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சமஸ்காரம் செய்து உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. உபதேசம் பெற்றதும் அவருக்கு ராமானுஜர் வைத்த பெயர் வைஷ்ண நம்பி என்பதாகும். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்க பெருமாளிடம் மோட்சம் கேட்டபோது திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான். ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு வராக மூர்த்தி இசையால் இறைவனை அடையலாம் என்றார். அதனை நிருபிக்கும் விதமாக இறைவன் நம்பாடுவான் என்ற பக்தரின் வரலாறு உள்ளது.

நம்பாடுவான் என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தல இறைவனை தரிசிக்க வருகிறார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறினான். நம்பாடுவான் தற்போது இறைவனுக்கு விரதம் இருப்பதாகவும் நம்பியை தரிசித்து விரதத்தை முடித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட பிரம்ப ராட்சசன் நம்பாடுவன் அங்கிருந்து செல்ல அனுமதித்தான். அவரிடமிருந்து விடை பெற்று வந்த நம்பாடுவன் கோயிலின் வாயிலில் நின்று நம்பியை தரிசிக்க முயற்சிக்கும் போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டினார். நம்பியும் நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுக்க எண்ணி கொடிமரத்தை நகரச் சொல்லினார். அதன்படியே கொடிமரம் நகன்று நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வழி கொடுத்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான் மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும் அந்த வழியாக செல்பவர்களை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதன்படி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தான் அந்தக் காட்டுக்குள் செல்வேன் என்று சொல்லிவிட்டு காட்டிற்குள் சென்றார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டது என நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் வழிபட்ட பின் கோவிலில் பெற்ற பிரசாதத்தின் பாதி பழத்தை சாப்பிடுமாறு பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார் அதை சாப்பிட்ட பிரம்ம ராட்சசன் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்ட பலனால் சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றான். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவில் வைத்திருக்க இப்போதும் இங்கு கொடிமரம் விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கேட்டான். அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தது. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாற்று செய்தி உள்ளது. இந்த கோவிலில் தினசரி 1.விஸ்வரூபம் 2.காலசந்தி 3.உச்சி காலபூஜை 4.சாயரட்சை 5.அத்தாழம் 6.அர்த்தசாமம் ஆகிய ஆறு கால பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞ்சனமும் இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும். திருவாலித் திருநகரில் பிறந்த திருமங்கை என்ற மன்னன் தலங்கள் பல சென்று திருமாலைப் பாடி வழிபட்டவன் இங்கு வந்து முக்தியடைந்துள்ளார். ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த அழகிய நம்பி தான் நம்மாழ்வாராக அவதரித்தார். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சிவபெருமான் கஜேந்திரன். நம்மாழ்வார் 13 பாசுரம் பெரியாழ்வார் 1 பாசுரம் திருமழிசையாழ்வார் 1 பாசுரம் திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும் பாடியுள்ளனர்.

108 திவ்யதேசத்தில் 106 வது திருமலை திருப்பதி

திருப்பதியில் மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெங்கடாஜலபதி பாலாஜி என்று பல்வேறு பெயர்கள் உண்டு. நின்ற திருக்கோலத்தில் வெங்கடாஜலபதி அருள் புரிகிறார். உத்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர். தீர்த்தம் சேசாசலசுவாமி புஷ்கரிணி பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகாசகங்கை கோனேரி தீர்த்தம். இதைத் தவிர வைகுண்ட சக்ர ஜாபாவி வருண ஆகாசகங்கை பாபவிநாசம் பாண்டவ குமாரதாரை இராமகிருஷ்ண தும்புரு சேச சனகசந்தன யுத்தகள சீதம்ம தீர்த்தங்களும் உண்டு. விமானம் ஆனந்த நிலய விமானம். இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்திற்கு பெயர். சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. தொண்டைமான் ஆறுமுகன் ஆகியோருக்கு கோயில் ஆதிவராஹ சந்நிதி புஷ்கரணியின் வடமேற்கு மூலையில் உள்ளது. இங்கு தான் முதல் தளிகை. பிறகு தான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நடக்கும். ஏழு மலைகள் தாண்டி கோயில் கொண்டிருப்பதால் ஏழுமலைவாசர் என்றும் பெயர். ஏழு மலைகளுக்கும் பெயர்கள் உண்டு. வெங்கடாத்ரி சேசாசலம் வேதாசலம் கருடாசலம் விருஷபாத்ரி அஞ்சனாத்ரி ஆனந்தாத்ரி என்பது அந்த ஏழு மலைகளின் பெயர்களாகும். இந்த மலையையொட்டி சந்தர கிரிப்பக்கம் ஸ்ரீநிவாச மங்காபுரம் என்ற சிற்றூரிலும் ஸ்ரீநிவாசப் பெருமாள் குடி கொண்டிருக்கிறார். மலை மீதேறி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அங்கேயே தரிசனம் கொடுக்க பகவானே விரும்பி செய்த ஏற்பாடு இது. பகவானுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் முக்கிய சமையலறைக்கு பொட்டு என்று பெயர். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். இவளுக்கு பொட்டு அம்மா என்று பெயர். இந்த பெயருக்கு சமையலறை பெண்மணி என்பது பொருள். இவளை மடப்பள்ளி நாச்சியார் என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம் பணியாரம் லட்டு வடை அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறைக்கு படிப்பொட்டு என்று பெயர்.

திருப்பதியில் தெப்போற்சவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர் சீதா லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர். அடுத்த நாள் துவாதசியன்று கிருஷ்ணர் ருக்மணியுடன் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்ப உலா வருவர். சித்திரை மாதம் திரயோதசி சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும். மூன்றாவது நாள் சுவாமியுடன் ராமர் சீதை லட்சுமணர் ஆஞ்சநேயர் கிருஷ்ணர் ருக்மணி சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள். வைகாசி மாதம் நவமி தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை குதிரை கருட வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சிலைகள் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக சிறப்பு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை அடுத்து வரும் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்வார்கள். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அபிஷேகம் முடிந்தவுடன் வைரம் பதித்த வஜ்ர கவசம் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிகள் ரதவீதிகளில் உலா வருவர். இரண்டாம் நாள் முத்தங்கி சேவை மூன்றாம் நாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி பவனி வருவார். புரட்டாசி பிரமோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது.

திருப்பதி கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்திற்கு சம்பங்கி பிரதட்சிணம் என்று பெயர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம் ரங்க மண்டபம் திருமலை ராய மண்டபம் சாளுவ நரசிம்மர் மண்டபம் ஐனா மகால் த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன. சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்கநாத யாகவராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதற்கு ஸ்நாபன மண்டபம் என்று பெயர். இதை அடுத்துள்ள செவ்வக அறைக்கு ராமர் மேடை என்று பெயர். இதில் ராமர் சீதா லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும் விஷ்வக்சேனர் கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அர்த்த மண்டபம் என்று பெயர். இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு குலசேகர படி என்று பெயர். குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அர்த்த மண்டபம் என்று பெயர்.

திருப்பதி கோயிலின் உள்கோபுரம் நடிமி படி காவிலி என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளை விட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும். வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாமணி மண்டபத்தைக் கடந்து பங்காரு வகிலி எனப்படும் தங்க நுழைவு வாயில் வழியாக சென்று பெருமாளைத் தரிசிக்கலாம். இதன் வாசலில் ஜெயன் விஜயன் எனப்படும் துவார பாலகர்கள் உள்ளார்கள். இந்த வாசலில் உள்ள மரக்கதவு தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. அந்த தகடுகளில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும் போது சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும். வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி உள்ளது. அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு சக்கரம் வைத்திருப்பார். வைகானச ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் எப்போதும் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும். பெருமாளை தரிசித்து வெளியே வரும் வழியில் உண்டியல் உள்ளது. தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள் யார் யார் பாவம் செய்தார்களோ அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன் என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி அவர் பக்தர்களிடம் இருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். காவாளம் எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும் அதுவே உண்டியல். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி பெரும் தொகை நகைகளுடன் உள்ளே சென்று விட்டால் அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும். உண்டியல் மண்டபத்திற்கு பரகாமணி மண்டபம் என்று பெயர்.

திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு கிரிஜா நரசிம்மசுவாமி என்று பெயர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற்களாக இருக்கின்றன. வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார் இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்சவ கொடியேற்றும் போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்கபட்டிருக்கும். வெங்கடாசலபதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்து செல்வார்கள். அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார். சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை பாஷ்யக்காரர் சன்னதி என அழைக்கிறார்கள்.

திருப்பதிக்கு ராமானுஜர் வந்தபோது பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம் புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண்டில் இவரது சன்னதி அமைக்கப்பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராமானுஜர் சன்னதியின் மேற்குப் பகுதியில் தலப்பாகமரா எனப்படும் சங்கீர்த்தன பண்டார என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். தலக் கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார் அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார் பேரன் சின்ன திருமலாச்சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு சங்கீர்த்தன பாதுகாப்பு அறை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும் அவரது மகன் மற்றும் பேரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். திருப்பதியிலுள்ள வெங்கடேஸ்வரா நூலகம் 1993 இல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம் இந்தி மொழிகளில் இந்நூல்கள் இருக்கும்.

நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர் இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர். பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று எந்தக்கடவுள் பொறுமை மிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு சிவலோகம் சென்றார். சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர் பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார். அடுத்து வைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும் வேண்டுமென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள். லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயண வனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தை வரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும் போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால் அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர். பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட பத்மாவதி மறுத்து விட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும் பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர் குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள் 2 ஊழியர்கள் தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர் வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு வணக்கம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் கவுசல்யா சுப்ரஜா ராம என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாசமூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும் மற்றொன்றை மாலை பூஜைக்கும் இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும். ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணியில் (ஸ்பூன் போன்றது) தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால் சந்தனம் தேன் மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணற்றில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டு வர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர் திருப்பாவை பாட இருவர் புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில் தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் தோமாலா சேவா என மாறிவிட்டது. தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

தோமாலை சேவைக்கு அடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து எள்ளுப்பொடி வெல்லம் வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள் நட்சத்திரம் திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது தங்கம் வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவார் மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும் வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர் கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2 வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டை ஒரு காலத்தில் மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப்படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சாலிம்பு என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும். திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருகிறது. சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

திருப்பதி கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதற்கு டோலாத்ஸவம் என்று பெயர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். திருப்பதியில் நள்ளிரவு 1.30 மணி வரை நடை திறக்கப்பட்டு சர்வதரிசனம் நடக்கும். 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்து விடுவார்கள். காய்ச்சிய பால் முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு தங்க வாசல் சாத்தப்படும்.

திருப்பதி பெருமாளை ஹாதிராம் பாவாஜி என்னும் வடநாட்டு பக்தர் தினமும் வணங்குபவர். அவரின் பக்தியை ஏற்ற வெங்கடேசப் பெருமான் பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். சுவாமி என்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று பாவாஜி கேட்டுக் கொண்டார். வெங்கடேசனுடன் அதையேற்று விளையாடினார். ஒருநாள் பெருமாள் தான் அணிந்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை விட்டுச் சென்று விட்டார். ஹாதிராம் பாவாஜி காலையில் கோயிலில் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் பூஜைக்கு சென்ற அர்ச்சகர்கள் மாலை இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மாலையை வைத்திருந்த பாவாஜியை திருடன் என்று முடிவெடுத்து தண்டித்தனர். பாவாஜி இறைவனே நேரில் வந்து சொக்கட்டான் விளையாடிய உண்மையை சொல்லியும் யாரும் நம்புவதாக இல்லை. பாவாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அத்தனையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லா விட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். பாவாஜி பக்தியுடன் பாலாஜியைத் தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் கரும்புக் கட்டுகளை தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார். திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாவாஜியின் அதிஷ்டானம் அமைந்து உள்ளது.

திருமலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் மலைப்பாதையில் சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப் படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். இரண்டாயிரத்து 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி உயரம் 10அடி இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு சக்கரம் அபயஹஸ்தம் கருடாழ்வார் ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளன.
இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது மோக்காலு மிட்டா என்னும் இடம் வருகிறது. இப்புனித மலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு முழங்கால் முறிச்சான் என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை மோகாலு மிட்டா என்று அழைக்கிறார். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு அன்னமய்யா என்ற சிறுவன் மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள் வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இதுவே ஆதி வராக சேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி. அது போல அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும். அத்ரி சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம்0 பிரளய வராகம் யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி ஆதி வராகர் எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது. திருப்பதி சன்னதி வீதியில் ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. ஒரு பெருமாள் கோயிலின் எதிரே கருடன் அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அவ்வகையில் வெங்கடாசலபதி கோயிலின் எதிரே இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்படும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் விசேஷ பூஜை உண்டு. பேடி என்றால் விலங்கு என பொருள். அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக புராண கதைகள் உண்டு. வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள். ஆனால் விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன் பின்னும் அவர் எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க வேண்டும் என கட்டளையிட்டாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர் என்பதால் இவருக்கு பேடி ஆஞ்சநேயர் என்று பெயர். இதுதவிர வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தம் கபிலதீர்த்தம். இதற்கு ஆழ்வார் தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. மாதவன் என்னும் அந்தணன் பெண்பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி இங்கு வந்தான். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான். நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தான். கபில முனிவர் இங்கு வந்து சிவனருள் பெற்றதால் இப்பெயர் பெற்றது. தீர்த்தக்கரையில் காமாட்சி சமேத கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. கேசவபட்டர் என்பவர் ஒருநாள் தன் தந்தையின் சிரார்த்த நாளில் வீட்டிற்கு வந்த அந்தணருக்கு உணவளித்து தட்சணையும் தந்து வழியனுப்பினார். இதன்பிறகு அவர் அவலட்சண வடிவை அடைந்தார். இதற்கு காரணம் தெரியாமல் தவித்தபோது அகத்தியர் அங்கு வந்தார். அவரிடம் நடந்த விபரத்தை சொல்லி வருந்தினார். அந்தணருக்கான நியதிகளை கடைபிடிக்காத அந்தணரைக் கொண்டு பிதுர்தர்ப்பணம் செய்ததால் குரூர வடிவம் பெறுவார்கள் என்று சொன்ன அகத்தியர் இதற்குப் பரிகாரமாக திருமலையிலுள்ள ஆகாச கங்கையில் நீராடினால் மீண்டும் பழையவடிவம் பெறலாம் என்றார். கேசவபட்டரும் அவ்வாறே செய்து பலன் பெற்றார். திருப்பதி பத்மாவதி தாயாரின் தந்தை ஆகாசராஜனின் பெயர் இந்த தீர்த்தத்துக்கு வைக்கப்பட்டதாகவும் சொல்வர். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரிய மலையையே பெயர்த்து வந்த கருடனைக் கௌரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.

ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் 1730 ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது முதலே திருமலை பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர். இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி மிகச் சிறுவயதிலேயே வேங்கடாசலபதி என்பவரை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் செய்து வைத்த போதும் இல்லற சுகத்தை மறுத்தார். பெருமாளே கதி என பக்தியில் கரைந்து கவிதைகளை பொழிந்தார். சில நாட்களில் அவரது கணவர் இறந்த பின் கணவர் வருவதற்கு முன்பிருந்தே தான் வைத்துக் கொண்டிருக்கும் பூ பொட்டு என்ற மங்கல சின்னங்களை கணவர் இறந்ததற்காக நான் எதற்கு எடுகக வேண்டும் என்று சொல்லி பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதில் உறுதியாக இருந்தார். இவரது உறுதியையும் ஆன்மீக பற்றையும் பார்த்துவிட்டு கிராமத்தினர் நாளடைவில் அவரை தேவுடம்மா எனச் சொல்லி வழிபட்டனர். வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும் பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்றார். திருவேங்கடவன் மீது கொண்ட காதலால் திருமலைக்கே குடியேறி வாழ ஆரம்பித்தார். இங்கு வந்த பிறகு பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் எழுதி மக்களுக்கு படைத்தார். திருமலையையும் திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றினார்.

வேங்கடவனே கதி என வாழ்ந்த வெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்த சேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார். ஒரு நாள் திருவேங்கடவன் நகை காணாமல் போக அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவரை கோயிலுக்கு எளிதில் வரமுடியாத துாரத்தில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாரும் அறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடை மூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு வேங்கமாம்பா ஆரத்தி என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

1730 ம் ஆண்டு பிறந்த வெங்கம்மாம்பா தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார். இவர் நினைவாக இவரது பெயரில் தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. மாத்ரு தரிகொண்ட ஸ்ரீ வெங்காமாம்பா நித்யா அன்னதானக்கூடம் என்று பெயரிடப்பட்ட இம்மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் வளாகத்தை உள்ளடக்கி உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா என்று இவரின் பெயரை வைத்திருக்கிறார்கள். தரிகொண்ட வேங்கமாம்பாவின் பெயரும் உருவமும் பொறித்த அஞ்சல் தலை அரசால் வெளியிடப்பட்டது.

இவர் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றிய நூல்கள்

தரிகொண்ட நரசிம்ம சதகம்
நரசிம்ம விலாச கதா
சிவ நாடகம்
பாலக்கிருஷ்ண நாடகம்
யக்‌ஷ கானம்
ராஜயோகம்ருத சாரம்
த்விபத காவியம்

தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தவுடன் இயற்றிய நூல்கள்

விஷ்ணு பாரிஜாதம்
செஞ்சு நாடகம்
ருக்மிணி நாடகம்
ஜலக்கீரட விலாசம்
முக்திகாந்தி விலாசம்
கோபி நாடகம்
ராம பரிநயம்
ஸ்ரீ பாகவதம்
ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி
தத்வ கீர்த்தனலு
வசிஷ்ட ராமாயணம்
ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம்
அஷ்டாங்க் யோகசாரம்

பெரியாழ்வார் 7 பாசுரம் ஆண்டாள் 16 பாசுரம் குலசேகராழ்வார் 11 பாசுரம் திருமழிசையாழ்வார் 15 பாசுரம் திருப்பாணாழ்வார் 2 பாசுரம் திருமங்கையாழ்வார் 61 பாசுரம் பொய்கையாழ்வார் 10 பாசுரம் பூதத்தாழ்வார் 9 பாசுரம் பேயாழ்வார் 19 பாசுரம் நம்மாழ்வார் 52 பாசுரம் திருப்பதி பெருமாள் மீது பாடியுள்ளார்கள்.

108 திவ்யதேசத்தில் 76 வது திருவட்டாறு

ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது. பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கடல்வாய்த் தீர்த்தம் வாட்டாறு ராமதீர்த்தம் விமானங்கள் அஷ்டாங்க விமானம் அஷ்டாஷர விமானம். பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.

கோவிலின் 5 கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் 6 நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்ப்பக்கிரகத்தின் உள்ளே மூலவரின் மீது படும். கோவிலில் ஊர்த்துவ தாண்டவம் வேணுகோபாலர் மன்மதர் மற்றும் ரதி தம்பதியர் லட்சுமணன் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் உள்ளது. இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக் கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது.

கோவிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருளுகிறார். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனி உள்ளது. பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ கிடையாது. இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. கருவறையில் கருடன் சூரியன் பஞ்சாயுத புருஷர்கள் மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். இத்தலம் சேரநாட்டு முறையில் மரத்தால் ஆன தூண்கள் கதவுகள் மற்றும் கூரைகளுடன் கட்டப்பட்டு உள்ளது. கருவறைக்கு முன் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரத்துடன் ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமன் கொண்ட பாறையாகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டுவதற்கு வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தை யாரும் தொடக் கூடாது என்பது தொன்மரபு. கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறு என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பரசுராமனுக்கும் சந்திரனுக்கும் பகவான் தரிசனம் கொடுத்த கோயில். நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் அரசர்களைப் பற்றிய குறிப்பும் அவர்களின் ஆட்சிக்காலமும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி செய்தவர்கள்

குலசேகரப்பெருமாள் – கி.பி. 644-659
வீரமார்த்தாண்டவர்மா – கி.பி. 510-519
வீரகேரளவர்மா – கி.பி. 519-550
செம்பலாதித்த வர்மா – கி.பி. 612-645
உன்னி கேரள வர்மா – கி.பி. 734-753

108 திவ்யதேசத்தில் 64 வது சோளிங்கர்

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 64 வது இக்கோவிலாகும். சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

108 திவ்யதேசத்தில் 2 வது திருக்கோழி

திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளே உள்ளது. இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயார் திருமணக் கோலத்துடன் கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி எனும் திருநாமங்களுடன் அருள் பாலிக்கிறார். தீர்த்தம் கமலபுஷ்பகரணி. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. உறையூரானது பண்டைக்காலத்தில் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இதன் பெருமை பல இடங்களில் கூறப்படுகிறது. புராண பெயர்கள் மேலும் குக்கிடபுரி கோழியூர் வாரணபுரி திருமுக்கீசுரம். கமலவல்லி நாச்சியார் அவதரித்த தலம் என்பதால் இங்கு அவளே பிரதானம். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் எம்பெருமானுடன் கலக்கும் பேறு பெற்றவராகவும் விளங்கிய திருப்பாணாழ்வார் அவதரித்தத் திருத்தலம் இது. நாயன்மார்களில் புகழ்ச்சோழர் மற்றும் கோச்செங்கன் சோழர் பிறந்ததும் இங்குதான். இத்திருக்கோயிலில் திருப்பாணாழ்வாருக்குத் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நம்மாழ்வார் ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன.

கோயில் கோபுரம் 5 நிலை உடையது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும் கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.

முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் பெரும்பேறாகக் கருதி வந்தான். ஆன்னலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பெரும் கவலையோடிருந்தான். வைகுந்தத்தில் குடிகொண்டுள்ள எம்பெருமான் அவன் அன்பைக் கருதி அவனுக்கு திருவருள் செய்ய எண்ணம் கொண்டார். தம் பிராட்டியையே அவனுக்கு மகளாகப் பிறக்க அருளினார். பிராட்டியும் மனம் மகிழ்ந்து உறையூரில் தாமரை ஓடையில் தாமரை மலரில் சிறு குழந்தையாக அவதரித்தார். வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அக்குழந்தையைக் கண்டெடுத்தான். அதற்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தையும் நன்கு வளர்ந்து மணப்பருவம் எய்தியது. ஒருநாள் கமலவல்லி தம் தோழிகளுடன் வனத்திற்கு உலாவச் சென்றாள். அப்போது அரங்கநாதன் அங்கு தம் குதிரை மீது ஏறி வேட்டைக்கு வந்தார். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும் கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள். தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான். மனம் வருந்தினான். எம்பெருமானிடம் முறையிட்டான். அவன் கனவில் தோன்றிய பெருமாள் யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். நீ உன் மகளை எம் சன்னதிக்கு அழைத்து வா யாம் அவளை ஏற்றுக் கொள்கிறோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார். மன்னன் மனம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார். மன்னனும் அவனுடன் வந்திருந்த மற்றவரும் காணக் கிடைக்காத அக்காட்சியைக் காணும் பேறு பெற்றனர். அதன் பிறகு நந்தசோழன் திருவரங்கக் கோவிலுக்குக் கணக்கற்றத் திருப்பணிகள் பல செய்தான். பின்னர் உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக ஒரு பெரிய கோவில் அமைத்தான். திருவரங்கத்தின் அரங்கநாதனே அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு அழகிய மணவாளன் எனும் திருநாமம் கொண்டார். இந்நிகழ்ச்சி துவார யுகத்தின் இறுதியில் நடந்தது என்று புராண வரலாறு சொல்கிறது.

துவார யுகம் முடிந்ததும் கலியுகம் தோன்றிய காலத்தில் உறையூரில் மண் மழை பெய்தது. அதனால் இந்த உறையூரே மூழ்கிப் போனது. அதன் பிறகு ஒரு சோழமன்னன் இத்திருக்கோயிலைக் கட்டி இங்கு திருமணக் கோலத்தில் அழகிய மணவாளனையையும் கமலவல்லியையும் அமைத்தான் என்று கூறப்படுகிறது. அம்மன்னன் பெயர் அறிய முடியவில்லை. ஒரு முறை உறையூரை ஆண்ட ஆதித்தசோழன் பட்டத்து யானை மீது உலா வந்தான். அப்போது அவனுக்கு இவ்வூரின் பெருமையை உணர்த்த இறைவன் எண்ணினார். அவர் வில்வ மரத்தின் நிழலின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை ஏவினார். அது மிக வேகத்துடன் பறந்து சென்று அந்தப் பட்டத்து யானையை எதிர்த்துப் போர் புரிந்துத் தன் அலகினாலும் கால்களினாலும் யானையின் கண்களைக் குத்திக் குருடாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதை எம்பெருமானின் அருள் என்று உணர்ந்த ஆதித்தசோழன் அக்கோழியின் பெயரால் இவ்வூருக்குத் திருக்கோழி எனப்பெயரிட்டான்.

வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து வைணவத் தலங்களிலும் சொர்க்கவாசலைக் கடந்து பெருமாள் வரும் வைபவம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் மட்டும் இதிலிருந்து மாறுபட்டு தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அனைத்து பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின் போது சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம் காவிரி குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்கு சென்று சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்.

திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவரும் கோழி என்று இவ்வூரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே இவர் உறையூரையும் தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் இவரை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லையே இவர் பல்லாண்டு வாழ்க கடல் வண்னம் கொண்டவராகவே இவர் தோன்றுகிறார். ஒரு திருக்கையில் சக்கரத்தையும் மற்றொரு கையில் சங்கினையையும் தரித்துக் கொண்டிருக்கிறாரே இவரது அழகை நான் என்னென்று சொல்வேன்? என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார். கரிகால் சோழன் நலங்கிள்ளி குலோத்துங்க சோழன் கிள்ளிவளவன் முதலானோர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். குலசேகரப்பெருமாள் சேர சோழ பாண்டிய நாடுகளை ஆண்ட போது இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார் எனபது அவர் பாசுரத்தால் அறிய முடிகிறது.

108 திவ்யதேசத்தில் 1 வது ஸ்ரீரங்கம்

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. ராமாவதாரம் முடிந்த பின்பு தோன்றிய பழமையான கோயில். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். கோயில் தல விருட்சம் புன்னை மரம். மூலவர் ஸ்ரீரங்கநாதர். பாற்கடலில் பள்ளி கொண்ட சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால் சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை பிரம்மா பூஜிக்கிறார். உற்சவர் நம்பெருமாள். தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். தீர்த்தம் சந்திர புஷ்கரணி வில்வ தீர்த்தம் சம்பு தீர்த்தம் பகுள தீர்த்தம் பலாச தீர்த்தம் அசுவ தீர்த்தம் ஆம்ர தீர்த்தம் கதம்ப தீர்த்தம் புன்னாக தீர்த்தம் என்று 9 தீர்த்தங்கள் உள்ளன. விமானம் பிரணாவாக்ருதி. புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு சேத்ரங்களில் ஒன்று. பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கம் மற்றும் 11வது தலமான திருச்சிறுபுலிர் ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும் தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. மற்ற திவ்யதேசங்களில் 9 ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். ஸ்ரீரங்கம் பெருமாள் பிரம்ம லோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள் ஆவார். சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளுக்கு மேலாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் உள்ள பாடல்களில் இதற்கான குறிப்புகள் உள்ளது. அகநானூறில் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.

மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி கைகளில் சங்கு கரம் அமிர்த கலசம் மற்றும் அட்டைப் பூச்சியுடன் காட்சி தருகிறார். ரங்கநாதர் சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. இவர் கையில் வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. ஸ்ரீதேவி பூதேவி இருவரும் பெருமாளுடன் அனைத்து கோவில்களிலும் இருப்பார்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும் அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இந்தத் தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும் போது மத்தளம் எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. திருக்கோயில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைமிக்க ஒரு நாகரிகப் பண்பாடும் மற்றும் பேரரசுகளை கண்ட வரலாறு உள்ளது.

பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும் தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன் இட்சுவாகு வேண்டுகோளின்படி தான் தினமும் பூஜித்த வந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார். இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால் ராவணனை அழித்த பின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். இலங்கை செல்லும் வரை சிலையை எங்கும் கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான் விபீஷணன். வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான் அச்சிறுவனிடம் சிலையை கொடுத்து எக்காரணம் கொண்டும் இதனை கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான். பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான். சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். தன் முழு வலிமையை பயன்படுத்தி எடுக்க முயன்றான் அவனால் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான் கலங்கினான். பின் சிறுவனாக வந்த விநாயக பெருமான் தன்னை வெளிப்படுத்திக் காட்டினார். சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது. அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும். திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக் கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். விபீஷணனுக்காக தான் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டு வந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். சோழ மன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுது விட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார்.

பல ஆண்டுகளுக்குப்பின் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் என்ற அரசன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்த போது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான் அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது. அப்போது அவனுக்கு ஏற்கனவே வந்த கனவு ஞாபகம் வந்தது அதன் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில் சுவரும் கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ பாண்டிய விஜயநகர மன்னர்கள் ஆழ்வார்கள் ஆச்சார்யார்களின் தொடர் பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது.

இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இரு பக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர் சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரிய பெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு தாமரை வடிவங்களில் சங்கநிதி பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் அவரது மனைவி மகன் மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து வண்ணம் தீட்டி வைக்கப்பட்டுள்ளது. மூலவர் உற்சவர் தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண் பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு (தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தில் மேல் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும் உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது வைகுண்ட ஏகாதேசி என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன. இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம் பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகஸ்டு 2014 இல் நடைபெற்றது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிசேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும் 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூஸ் பதம் என்று அமைக்கப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும் பாடவும் செய்வார்கள். ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே நடத்துவாள்.

ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும் சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை வளையல் குங்குமம் வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள். கார்த்திகை கைசிக வளர்பிறை ஏகாதசியன்று இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த விழா நடக்கிறது. கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும் போர்வை அணிவிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. ரங்கநாதருக்கு அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவார். கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள் அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில் வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருட பஞ்சமியன்று கருடாழ்வாருக்கு பருப்பு வெல்லம் கொழுக்கட்டை படைத்து மல்லிகைப்பூ மாலை மஞ்சள் வஸ்திரம் அணிவித்து இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். ரங்கநாதர் சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர் இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கப்படுகிறது. அவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன் அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.

திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள் இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் என்னும் ஊர் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நகரம் ஆகும். அந்த நகரத்தில் இக்கோயில் ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 631000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள் வணிக நிறுவனங்கள் தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. கோவில் கோபுரங்களில் மிகப் பெரிதான இராஜகோபுரம் 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும் 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும் 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கட்டுவதற்கு 1.7 கோடி செங்கற்கள் 20000 டன் மணல் 1000 டன் கருங்கல் 12 ஆயிரம் டன் சிமெண்ட் 130 டன் இரும்பு கம்பிகள் 8000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டது.

வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர் இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் உள்ளது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. வைணவத்தின் மையத் தலைமைச் செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களமாக இருந்துள்ளது.

கோவிலில் எழு என்ற எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது அவை கோவிலின் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் ஆகும்

மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று பூலோகம்
திரிவிக்ரம சோழன் சுற்று புவர்லோகம்
அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று சுவர்லோகம்
திருமங்கை மன்னன் சுற்று மஹர்லோகம்
குலசேகரன் சுற்று ஜநோலோகம்
ராஜ மகேந்திர சோழன் சுற்று தபோலோகம்
தர்ம வர்ம சோழன் சுற்று சத்யலோகம்

பெரிய என்ற 7 சொற்கள் கொண்டவைகள்

பெரிய கோவில்
பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
பெரிய கருடன்
பெரிய வசரம்
பெரிய திருமதில்
பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சியார்கள்

ஸ்ரீதேவி
பூதேவி
துலுக்க நாச்சியார்
சேரகுலவல்லி நாச்சியார்
கமலவல்லி நாச்சியார்
கோதை நாச்சியார்
ரெங்கநாச்சியார்

ஸ்ரீரங்கம் கோவிலில் திருவிழாக்களில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். அந்த 7 திருவிழாக்கள்

விருப்பன் திருநாள்
வசந்த உத்சவம்
விஜயதசமி
வேடுபறி
பூபதி திருநாள்
பாரிவேட்டை
ஆதி பிரம்மோத்சவம்.

நம்பெருமாள் நெல்லளவு காணும் மாதங்கள் 7

சித்திரை
வைகாசி
ஆடி
புரட்டாசி
தை
மாசி
பங்குனி

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். இந்த ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

கோடை உத்சவம்
வசந்த உத்சவம்
ஜேஷ்டாபிஷேகம் உத்சவம்
திருப்பாவாடை உத்சவம்
நவராத்ரி உத்சவம்
ஊஞ்சல் உத்சவம்
அத்யயநோத்சவம்
பங்குனி உத்திரம்.

கீழ்கண்ட ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்

பூச்சாண்டி சேவை
கற்பூர படியேற்ற சேவை
மோகினி அலங்காரம்
ரத்னங்கி சேவை
வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம்
உறையூர் ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை
ஜாலி சாலி அலங்காரம்

பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் மதுரகவி ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருப்பாணாழ்வார்
தொண்டரடிபொடி ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்
பெரியாழ்வார் ஆண்டாள்

பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

நாழிகேட்டான் கோபுரம்
ஆர்யபடால் கோபுரம்
கார்த்திகை கோபுரம்
ரெங்கா ரெங்கா கோபுரம்
தெற்கு கட்டை கோபுரம்
ஐஐ தெற்கு கட்டை கோபுரம்
ராஜகோபுரம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு 7 உற்சவங்கள் நடைபெறும்.

இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள் ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றார்கள். கம்பர் அதை நரசிம்மரே சொல்லட்டும் எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர் கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர் தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது கரம் கிடையாது. சன்னதி எதிரில் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பட்ட பெரிய அரைக்கோள வடிவிலான வைரம் ஒன்று திருவரங்கம் அரங்கநாதரின் கண்களாக இருந்ததாக அறியப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கர்நாடக போர்களில் இடம் பெற்ற ஒரு பிரான்சு வீரன் இந்துவாக மதம் மாறி திட்டமிட்டு கோயிலின் கருவறைக்குள் நுழைந்து இந்த வைரத்தை திருடி பின்னர் சென்னையில் ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றான். கிபி 1750 லிருந்து பல அயல் நாட்டு வணிகர்களின் கைமாறி ஆம்ஸ்டர்டமில் கிரிகோரி கிரிகொரிஏவிச் ஆர்லவ் எனும் ரஷியரால் 400000 டச்சு ஹுல்டென் கொடுத்து வாங்கப்பட்டு ரஷ்யா அரசி இரண்டாம் கத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரஷ்யாவின் ராஜாங்க கருவூலத்தில் காக்கப்பெற்று இன்றளவும் ரஷ்யாவின் மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பெற்றுள்ளது. இந்த வைரத்திற்கு ஒற்லோவ் வைரம் என்று பெயரிடப்பட்டது. சுமார் 190 காரட் (அதாவது 38 கிராம்) எடை உள்ள இந்த வைரம் தற்போது மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் உள்ளது.

சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. கோவில் வரலாறு 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்டது ஆகும். கோவில் வரலாறு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. 105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன் இரண்டாம் பராந்தகன் ராஜராஜன் ராஜேந்திரன் குலோத்துங்கன் விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும் ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர்.

கிபி 1311 லும் 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது. 1331 படையெடுப்பிற்கு முன் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கத்தின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின் உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப்பட்டது. இந்த நிகழ்வு 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள் நாயக்கர்கள் தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர். இஸ்லாமியப் படையெடுப்பால் கருடரின் நிலை அழிக்கப்பட்டதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. கி.பி.1415 மற்றும் 15 16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம்.

திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து திருப்பணிகள் புரிய 1966 இல் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர் ஜார்ஜ்ரைட் ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும் அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை

திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்திருக்கிறார். இத்தலத்தில் ஆண்டாள் திருப்பாணாழ்வார் துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

திவ்ய தேசங்கள் முன்னுரை

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும் ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று வழிபட்டு அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் வைணவ சமய வழிபாடாக உள்ளது.

84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும்
11 திருத்தலங்கள் கேரளாவிலும்
2 திருத்தலங்கள் ஆந்திராவிலும்
4 திருத்தலங்கள் உத்தரப் பிரதேசத்திலும்
3 திருத்தலங்கள் உத்தராகண்டத்திலும்
1 திருத்தலம் குஜராத்திலும்
1 திருத்தலம் நேபாளத்திலும்
2 திருத்தலங்கள் வானுலகிலும் உள்ளது.

கிழக்கு திசையில் 79 மேற்கு திசையில்19 வடக்கு திசையில் 3 தெற்கு திசையில் 7 ஆக 108 திவ்ய தேசங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.