சிவன் ஆலயங்களில் மட்டுமே இருக்கும் பைரவர் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக இருக்கிறார். கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் போது இருக்கிறார் இந்த பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.
இவருக்கு வடை மாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக உள்ளது. சிறிய வடைகளை ஒன்றாக மாலை போல் கோர்க்காமல் மிகப்பெரிய ஒரு அளவில் ஒரே வடையாகத் தட்டி அதை பைரவரின் மேல் சாத்துகிறார்கள். இவருக்குத் தயிர் சாதம் நிவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும் மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார். மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள். பல வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருக்கிறது. இந்த பைரவரின் மூச்சு விடும் போது ஒரு தீபம் மட்டும் அசையும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைரவர் இருக்கும் திருக்குறுங்குடி கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.