பனசங்கரி கோயில் பெங்களூரில் எஸ். கரியப்பா சாலையில் அமைந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் 106 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூலவர் பனசங்கரி தேவி. ஆஞ்சநேய சுவாமி சிலை உள்ளது. கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. கோயிலில் கிணறு ஒன்று உள்ளது. மழை இல்லாத பஞ்ச காலத்தில் கூட இக்கிணற்றில் நீர் வற்றியது இல்லை. இந்த கிணற்றின் நீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பசப்பா ஷெட்டர் என்பவரின் குல தெய்வம் பதாமி குகைக் கோயிலில் உள்ள பனசங்கரி ஆகும். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று குலதெய்வத்தை தரிசித்து வந்த பசப்ப ஷெட்டரி ஒரு வருடம் உடல் நலக்குறைவால் குலதெய்வத்தை தரிசிக்க முடியாமல் போனது. இதனால் வருத்தமடைந்த அவர் பாதாமி பனசங்கரி தேவியை மனதார வேண்டிக் கொண்டார். அன்று இரவு பசப்ப ஷெட்டரின் கனவில் தோன்றிய பனசங்கரி பாதாமி பனசங்கரி கோயிலுக்கு வருமாறும் அங்கு அவருக்கு ஒரு பனசங்கரியின் சிலை கிடைக்கும் என்றும் அதனை வைத்து கோயில் எழுப்புமாறு அருள்பாலித்தாள். அதன்படி பாதாமி கோயிலுக்குச் சென்ற பசப்ப ஷெட்டா அங்கு கோயில் அர்ச்சகர் கொடுத்த பனசங்கரி தேவியின் சிலையைக் கொண்டு வந்து தற்போது கோயில் இருக்கும் இடத்தில் வைத்து வழிபட்டார். பின்னர் அதே இடத்தில் ஸ்ரீ பசப்ப ஷெட்டர் அவரது மகன்கள் சோமன்ஷெட்டி பலருடன் இணைந்து 21-05-1915 அன்று இந்தக் கோயிலைக் கட்டி சக்தி ஸ்வரூபினி தேவி மற்றும் சிம்மவாஹினி பனசங்கரி தேவியை பிரதிஷ்டை செய்தனர்.
ராகுகால பூஜைக்கு பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஞாயிறு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்களால் அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. இக்கோயிலில் பௌர்ணமி அன்று ஜாத்ரா மஹோத்ஸவம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபத பௌர்ணமி தினத்தில் அம்மனின் பிறப்பு விழா நடைபெறும். நவராத்திரியின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.