சீதளாதேவி அம்பாள்

தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால் தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடலில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரணடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துன்பத்தைப் போக்க சிவன் தனது ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும் கங்கையிடமிருந்தும் பேரொளியை தோற்றுவித்தார்.

பார்வதியின் அம்சமாக தோன்றிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று அம்பாளாக வடிவெடுத்தது. அந்த அம்பாளின் சிரசு முறத்தினாலும் கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன் கழுதை வாகனத்தில் காட்சி கொடுத்தாள். இந்த தேவியை வழிபடுவதற்காக சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் சிவன். சீதளாஷ்டகம் எனப்படும் இந்த மந்திரத்தைக் கூறி அம்பாளை வழிபட்டால் வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளா என்றால் சமஸ்கிருதத்தில் குளிர்விப்பவர் என்று பொருள். தேவர்களும் அதுபோல் மந்திரத்தை சொல்லி சீதளாதேவியை வழிபட்டு தங்களின் துன்பத்தை போக்கிக் கொண்டார்கள். லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது சீதளாயை நமஹ என்ற பெயரும் வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. அதுபோல் தன்னிடம் சரணடைபவர்களின் சுமையை தனதாகக் கருதி விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனம் உணர்த்துகிறது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சக்ஷூ (CHAKSHU) என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலைவனப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக தாக்கும் பகுதியிலும் கோடை துவங்கும் காலத்தில் சீதளாதேவிக்கு மிகவும் விமரிசையாகக் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். தமிழகத்தில் ரூபங்களில் சில வேற்றுமைகளுடன் சீதளாதேவிக்கு மாரியம்மன் என்ற பெயரில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இங்கும் கோடை காலங்களில் வெப்பத்தினால் வரும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அதிகமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.