ஸ்ரீசைலத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள சைலகே்ஷத்ர வனத்தின் நடுவே பூமிக்கு அடியில் இக்கோயில் உள்ளது. இங்கு தரை மட்டத்தில் கோயில் விமானம் உள்ளது. இந்த விமானத்தின் கீழே பூமிக்கு அடியில் வீற்றிருக்கிறாள் இஷ்ட காமேஸ்வரி தேவி. ஒரு புறம் பழைமையான சிலைகள் இன்ன தெய்வங்கள் என்று கண்டு பிடிக்க இயலாதவாறு நிற்கின்றார்கள். மற்றொரு புறம் கோயிலுக்குள் இறங்கும் துவாரம். ஒரு நேரத்தில் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும். கோயிலின் துவாரம் வழியாக தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும். சன்னிதியின் உள்ளே ஒருவர் சம்மணமிட்டு அமரக் கூடிய அளவுக்கு இடவசதி இருக்கும். 8 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோயில் காட்டுப் பகுதியில் புலிகள் சரணாலயத்தின் நடுவே இருப்பதனால் இங்கு செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. ஒரு நாளைக்கு பத்து ஜீப்களில் தலா ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஜீப்களில் செல்வதற்கு முந்தைய நாளே பதிவு செய்து கொள்வது அவசியம். அடர்ந்த காட்டுப் பகுதி ஆகையால் முறையான சாலைகளோ உணவுப் பொருட்களோ கிடையாது. காட்டுக்கு நடுவே இயல்பாக ஏற்பட்டுள்ள பாதைகள் வழியே 11 கிமீ பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகும். தண்ணீர் உணவுப் பொருட்கள் பூஜை சாமான்கள் அனைத்தும் வாங்கி செய்ய வேண்டும். காலைய 9.30 க்கு ஜீப்கள் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஜீப்கள் செல்ல பாதையில்லை. நடந்து செல்ல வேண்டும். காட்டில் செஞ்சுக்கள் என்ற வேடர்கள் வசிக்கிறார்கள்.