காயத்ரீ மந்திரம்

ஒரு பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூணூல் தயாரிப்பை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் ஊர் மக்களும் பிராமணர்களுக்கு ஓரளவு உதவி வந்தார். பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்தது. காயத்ரியை ஒருமனதாக எண்ணி ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார். அவரது மனைவி பெண்ணின் திருமணத்திற்கான பொருளை அரசனிடம் பெற்று வரும்படி பிராமணரைத் தூண்டி விட்டார். அவரும் மன்னனிடம் சென்றார். மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக் கொண்டே அவர் வந்த காரியம் பற்றி கேட்டார். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும் அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார். நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்டார். கூசிக் குறுகிய பிராமணரோ தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும் சமாளித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்து வரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க வைக்க பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசு போதவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன். மேலும் பொற்கட்டிகள் வெள்ளிக் கட்டிகள் நகைகள் ரத்தினங்கள் என இட இட தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான். சமயோசிதமான மந்திரியோ பிராமணரே இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் என்றார். அதே போல் நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்து வருங்கள் என்றார்.

பிரமணருக்கோ அரசரிடமே பொன் போதவில்லை. நாளை வரச் சொல்கிறார். நாளை மேலும் நிறைய கிடைக்கும் அதனை எப்படி கொண்டு செல்வது என்று அடுத்த நாள் கிடைக்கும் பொன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தார். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும் அவருக்கு தொலைந்தே போனது. மன்னன் எவ்வளவு பொருள் தருவான். பெண்ணின் திருமண செலவு போக நமக்கும் நிறைய இருக்குமே. அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? என்று பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. காலை எழுந்ததும் அவசரம் அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒரு வழியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக் கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத் தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். சில பொற்காசுகளை வைத்ததும் பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்து விட்டது. அவற்றிலிருந்து சில பொற்காசுகளை எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர். ஒரு பொற்காசு திருமணத்திற்கு போதாது என்று திருமணத்திற்கு தேவையான பொற்காசுகளை கொடுத்தனுப்பினான் மன்னன்.

பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம். மந்திரியிடம் முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்? என்று கேட்க மந்திரியோ மன்னா இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவர் சாது. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் காயத்ரீ தேவையை மட்டுமே சிந்தித்துக் கொண்டு காயத்ரீ மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தார். தன்னுடைய பெண்ணின் திருமண தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜெபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கொடுத்தாலும் அதற்கு நிகராக தராசு தட்டு சரிசமமாகாது. அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது அவர் நவரத்னம் எவ்வளவு கிடைக்கும் பொன் எவ்வளவு கிடைக்கும் பொருள் எவ்வளவு கிடைக்கும் என்ற சிந்தனையில் காயத்ரி தேவியை சிந்திக்காமல் வாயால் மட்டுமே மந்திரத்தை சொல்லிக் கொண்டு பூணூலை செய்தார். மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. எனவே இன்று அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்து விட்டது என்றார் மந்திரி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.