அகந்தை

நான்கு பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து தங்களில் யார் முதலில் சொர்க்கத்துக்கு போவோம் சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

முதலில் சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்கு உண்டு என்றான்.

2 ஆவது வேதபாலன் என்ற பக்தன் சொன்னான். வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம். நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

3 ஆவது குகநாதன் என்ற பக்தன் சொன்னான். கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது. வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு. அதன்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

4 ஆவது சுந்தரானந்தன் சொன்னான். நான் உங்களை மாதிரி வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல. நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன். இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் வேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் என்று கூறிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நால்வரும் எழுந்து அவள் பின்னால் சென்று அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை. நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று நீ உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர். நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லை. நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி. நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. நீங்கள் சொல்வதில் உள் அர்த்தம் இருக்கிறதா? எங்களுக்கு புரியும் படி சொல்லுங்கள் என்று பக்தர்கள் கேட்டார்கள். அதற்கு வயதான மூதாட்டி வெளிப்படையாக தானே பேசுகிறேன். நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல. நான் என்ற அகந்தையை பற்றி. அந்த நான் போய்விட்டால் அதாவது நான் என்ற அகந்தை அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் வயதான மூதாட்டி. நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் உண்மை உணர்ந்து நான் என்ற அகந்தையை எப்படி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.