இறைவன் இருக்கும் இடம்

ஓர் ஊரில் வசித்த விவசாயி முருகன் இறைவன் மீது பெரிதும் பக்தி கொண்டவன். நல்லவன் பெரியோர்களை மதிப்பவன். ஏழையான அவன் போதும் என்ற மனதுடன் வாழ்ந்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி நேர்மையாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவியும் ஐந்து வயதில் மகனும் இருந்தார்கள். ஒரு சமயம் அவனுக்கு இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இறைவா நீங்கள் உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்து அருள் புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் முருகனின் பிரார்த்தனை பலித்தது. இறைவன் முருகனின் கனவில் தோன்றி அன்பனே வரும் புதன்கிழமை நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினார். கனவு கலைந்து எழுந்த முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் மகிழ்ச்சியை மனைவியிடமும் மகனிடமும் பகிர்ந்துகொண்டான். அவர்களும், தங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். இறைவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை எப்படி உபசரிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். முடிவில் இறைவனுக்கு வழங்குவதற்கு இனிப்பு தயார் செய்ய வேண்டும். ஒரு ஜோடி புதிய செருப்பு கொடுக்க வேண்டும், ஒரு சால்வை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இறைவன் குறிப்பிட்ட புதன்கிழமை வந்தது. முருகன் குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஆவலோடு வாசல் கதவருகில் காத்திருந்தார்கள்.

காலை மணி பத்தாயிற்று. அப்போது முருகன் வீட்டருகில் 35 வயது மதிக்கத்தக்க ஏழைப்பெண் தன் எட்டு வயது மகளுடன் வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. முருகன் வீட்டுக்கு அருகில் வந்தபோது மயங்கி விழுந்து விட்டாள். முருகன் அந்தப் பெண் அருகில் சென்று, அவளுக்கு முதலுதவி அளித்தான். சிறிது நேரத்தில் அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். முருகன் அவளுடன் பேசியபோது அவளும் அவள் மகளும் வறுமை காரணமாக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடப்பதும் பசியில் மயங்கி விழுந்தததும் தெரிய வந்தது. காரணம் தெரிந்ததும் அவன் அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். முருகன் குடும்பத்தினர் அவர்களுக்கு இறைவனுக்குத் தருவதற்காக வைத்திருந்த இனிப்புகளை கொடுத்தார்கள். மீதமிருந்த இனிப்பையும் அவர்களிடமே கொடுத்து இவற்றை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். அந்தப் பெண் முருகன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

முருகனின் உள்ளம் இறைவன் பக்கம் திரும்பியது. அவர் எப்போது வரப் போகிறார் என்று பரபரத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்தது. இந்த நிலையில் கடுமையான வெயிலில் ஒரு பிச்சைக்காரன் முருகன் வீட்டுக்கு அருகில் வந்தான். அவன் முருகனிடம் உங்களிடம் ஏதாவது பழைய செருப்பு இருந்தால் அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள் என்று வேண்டினான். முருகன் வீட்டிற்குள் சென்று, தான் இறைவனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு ஜோடி புதிய செருப்பை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான். மாலையில் குளிர் கடுமையாக இருந்தது. குளிரில் நடுங்கியபடியே முதியவர் ஒருவர் தெருவில் நடந்து வந்தார். அவரைப் பார்த்த முருகன் இவர் இப்படி குளிரில் கஷ்டப்படுகிறாரே என்று வீட்டிற்குள் சென்று கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்தான். அவன் மனைவி இறைவனுக்காக இதை மட்டுமாவது வைத்திருங்கள் என்று கூறி தடுத்தாள். முருகன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சால்வையை முதியவருக்குப் போர்த்தினான். அவர் முருகனுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார். அன்று பகல் முடிந்து இரவும் வந்து விட்டது. இறைவன் வரவில்லை. முருகன் மிகவும் மனம் வருந்தினான். அந்த ஏமாற்றம் அவனைப் பெரிதும் பாதித்தது. அவன் இறைவனிடம் இறைவா நீங்கள் ஏன் இன்று என் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தான். அப்போது இறைவனின் குரல் அசரீரீயாக ஒலித்தது:

இன்று நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்து நீ கொடுத்தவற்றைப் பெற்றுக் கொண்டேன். முதலில் ஒரு ஏழைப்பெண் அவள் மகள் வடிவத்தில் உன்னிடம் வந்து நீ கொடுத்த இனிப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவதாக ஒரு பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து செருப்பையும் அடுத்து முதியவர் வடிவத்தில் வந்து சால்வையைப் பெற்றுக்கொண்டேன் என்றார்.

சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவனுக்கு உதவுகிறேன் என்று இல்லாமல் அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம். உதவி என்ற சொல்லை உன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதே தெய்வ நிந்தனையாகும். இறைவனுடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது அந்த நாயை இறைவனாகவே நினைத்து வழிபடு. அந்த நாய்க்குள் இறைவன் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.