அமைதி

ஒரு முனிவரின் ஆசிரமத்திற்கு அரசர் ஒருவர் வந்து தங்கினார். அன்று இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த ஆசிரமத்தை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. நாய்கள் வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன.
அரசரால் தூங்கவே முடியவில்லை. அரசருக்கு கோபம் வந்தது. நாய்களின் சத்தத்திற்கு நடுவில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது என்று புலம்பினார்.

முனிவர் பொறுமையுடன் பதில் கூறினார். அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நாய்கள் உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இங்கு கூடவில்லை. இங்கு அரசர் தங்கி இருப்பது நாய்களுக்கு தெரியாது. அதற்கான அறிவும் அந்த நாய்களுக்கு கிடையாது. அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள் என்றார். நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால் நான் எப்படி தூங்க முடியும் என்றார் அரசர்

அதற்கு முனிவர் நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அது போல் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல. உங்கள் எதிர்ப்பு உணர்வு மட்டுமே. நீங்கள் சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை. நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால் குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான் என்றார் முனிவர். உதவாக்கரை யோசனை என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அரசர். ஆனால் காலையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அரசர். ஆச்சரியம் எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன் என்றார் அரசர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.