தான் என்ற எண்ணம்

நாட்டின் எல்லையில் இருந்தது அந்தத் துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை. நாட்டின் மன்னன் அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான். ஆசிபெற வரும் போதெல்லாம் அரசன் தன்னுடைய அரண்மனையின் சிறப்பு பற்றி பெருமையாக பேசுவான். தன் அரண்மனையை பற்றி மிக பெருமையாக பேசுவார். தனது அரண்மனைக்கு வந்து சில காலம் தங்கிச் செல்லும்படியும் துறவிக்கு அழைப்பு விடுத்தான். கல்வி கேள்விகளில் சிறந்தவன் நல்லாட்சி வழங்குபவன் தரும சிந்தனை கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசனின் பேச்சில் தான் என்ற கர்வம் இருந்ததை அறிந்த துறவி கர்வத்தை அடக்க தீர்மானித்து ஒருநாள் அரண்மனைக்கு சென்றார். அங்கிருந்த காவலர்கள் அவரை அறிந்தவர்கள் என்பதால் துறவியை தடுக்கவில்லை. வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார். அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல் விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார். அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள் காவலர்கள் அதிகாரிகள் என யாரையும் துறவி கண்டு கொள்ளவில்லை. தன்போக்கில் சென்று அரசனின் அறையை அடைந்து அரசனுக்கு முன்னே போய் நின்றார். அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். வரவேற்று துறவியை வணங்கினான். வாருங்கள் குருவே உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள் தங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் குருவே உடனே அதனை நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்றான் அரசன்.

அதற்கு துறவி இந்த விடுதியில் எனக்குத் தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும் என்றார். விடுதி என்று துறவி சொன்னது அரசனுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. இவ்வளவு பெரிய அரண்மனையை இந்தத் துறவி விடுதி என்கிறாரே என்று நினைத்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு குருவே இது விடுதி அல்ல என் அரண்மனை என்றான். அப்படியா சரி நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல். இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக இருந்தது என்றார் துறவி. என் தந்தைக்கு என்றான் அரசன். அவர் எங்கே இப்போது இருக்கிறார் என்று கேட்டார் துறவி. உடனே மன்னன் அவர் இறந்துவிட்டார் என்றான். அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக இருந்தது என்று கேட்டார் துறவி. என் பாட்டனாருக்கு என்றான் மன்னன். அவர் இப்போது எங்கே என்று கேட்டார் துறவி. அவரும் இறந்துவிட்டார் என்று மன்னன் தெரிவித்தான். துறவி சிறு புன்னகையுடன் அப்படியானால் உன் தந்தை பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள். வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்படியென்றால் இது விடுதிதானே நீ இதனை அரண்மனை என்கிறாய் என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய் நின்றான் அரசன். தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம் தெளிந்தான். துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது வந்த வேலை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து சென்றிருந்தார் துறவி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.