குருவே இறைவன்

ஒரு சீடனின் வீட்டுக்கு இறைவனும் சீடனின் குருவும் வருகை தந்தனர். இறைவனையும் குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக இறைவனின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான். உடனே இறைவன் அவனைத் தடுத்து முதலில் நீ உன் குருவை வணங்கு என்று சொன்னார். சீடன் குருவினை பணியச் சென்ற போது சீடனே நான் உனது வீட்டிக்கு இறைவனை அழைத்து வந்திருக்கிறேன். அதனால் நீ இறைவனைத்தான் முதலில் வணங்க வேண்டும் என்று சொன்னார். குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் இறைவனின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். அப்பனே உன் வாழ்க்கையில் இறைவனை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார். ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும். ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக என்றார் இறைவன். சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். சீடனே நான் தான் இறைவனை அடைய வழி காட்டினேன் என்றாலும் அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். ஆகவே நீ முதலில் இறைவனிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது என்றார் குரு. மீண்டும் இறைவனிடம் சென்றான் சீடன். அப்பனே உனது குரு சொல்வது எல்லாம் சரிதான். இறைவன் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்கிறேன். அதன் பின் சிந்தித்து செயல்படு என்றார்.

ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன். ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத் தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே இறைவனை விட குருவே உயர்வானவர். இறைவன் வேறு குரு வேறு இல்லை குருவே இறைவன் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இறைவன். சீடன் குருவை முதலில் வணங்கி பின் இறைவனை வணங்கி இருவரின் அருளையும் பெற்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.