ஏற்றத்தாழ்வு

மகாகவி காளிதாசர் வயல் வழியாக வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக உள்ளது சிறிது தண்ணீர் குடிக்க தாருங்கள் என்று கேட்டார். அந்த கிராமத்துப் பெண்ணும் தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். உடனே காளிதாசருக்கு இந்த பெண் சிறியவள் தன்னை பற்றி சொன்னால் இவளால் புரிந்து கொள்ள முடியாது என்ற ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. நாம் பெரிய கவிஞர் என்று இந்த பெண்ணிடம் சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார். உடன் அந்த பெண் உலகில் இரண்டு பயணிகள் தான் ஒருவர் சந்திரன் ஒருவர் சூரியன் இவர்கள் தான் இரவு பகல் என பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண் உலகில் இரண்டு விருந்தினர்கள் தான் உள்ளார்கள் ஒன்று செல்வம் இரண்டு இளமை இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார். உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி எவ்வளவு மிதித்தாலும் எவர் மிதித்தாலும் தாங்கும் மற்றொன்று மரம் யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள். சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார். அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான் ஒன்று முடி மற்றொன்று நகம் இவை இரண்டையும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள். நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார். உடனே அந்த பெண் உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான் இருக்கிறார்கள் ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன் மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றாள்.

காளிதாசர் செய்வதறியாது அந்த பெண்ணின் காலில் விழுந்தார். உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்தார் காளிதாசர் சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள் காளிதாசர் கைகூப்பி வணங்கியதும் தேவி காளிதாசரைப் பார்த்து காளிதாசா எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்ந்து அனைத்து உயிர்களையும் இறைவனாக பார்த்து அன்பு செலுத்துகிறனோ அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான். ஆகவே நீ மனிதனாகவே இருந்து பெரியவர் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வுகள் பார்க்காமல் இரு என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.