அட்சய திருதியை

காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூரணி தேவி தான் பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்தால் தானே அன்னத்திற்கு அதிபதி என்று சிறு கர்வம் கொண்டாள். அந்த கர்வத்தை போக்குவதற்கு சிவபெருமான் ஒரு சிவயோகியாக தோற்றம் கொண்டு அன்னபூரணியம் வந்து தாயே பசி என்றார்இதை கேட்ட அன்னபூரணி தேவி இலையிட்டு தன்னால் இயன்ற வரை உணவுகள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி உட்கொண்டுக் கொண்டே இருந்தார். அன்னபூரணி உருவாக்கிய உணவுகள் அனைத்தும் பூர்த்தியாக அன்னபூரணி தேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற தன்னுடைய அண்ணனாகிய மகா விஷ்ணுவை பிரார்த்தித்து அழைத்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மகா விஷ்ணுவாகிய மாதவன் ஒரு அந்தணர் கோலத்தில் அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றார். அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை சிவார்ப்பணம் என்று சொல்லிக் கொண்டு தன் திருவாயால் உட்கொண்டார். உடனடியாக மீண்டும் பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

சிவயோகிக்கு அருகில் இலையிட்டு மகா விஷ்ணுவை அமர்த்தி உணவு பறிமாறினார் அன்னபூரணி தேவி. மகா விஷ்ணு உணவருந்த அமர்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால் சிவயோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவயோகியை வணங்க சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உனக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார். உடனே மகா விஷ்ணு இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எவ்வாறு வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல செயலுக்காக நல்ல மனதுடன் காரியங்களை தொடங்குகிறார்களோ அது இனிதே வளரும் என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம் சுக்ல பக்ச திரிதியை நாம் அட்சய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.