தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் கதை

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு காடு. அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள சிவபெருமான் சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் காட்டை விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் கதையின் சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.