துளசி

அதிகாலையில் தினமும் எழுந்து ஏழை ஒருவன் தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து அதைச் சந்தையில் விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிலில் முனிவர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான். ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப் பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான். கீரைகளைப் பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது. உடனே நம்மால் தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை. இந்த துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாகக் கொடுப்போமே என்று எண்ணியபடி செடியில் இருந்து துளசியையும் சேர்த்துப் பறித்து கீரைக் கட்டோடு ஒன்றாகப் போட்டு தலை மீது வைத்துக் கொண்டு முனிவரின் இல்லம் நோக்கி நடந்தான். ஆனால் அவன் பறித்துப் போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.

முனிவரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி. முனிவர் ஏழையைப் பார்த்தார். அதேசமயம் அவன் பின்னே அருவமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். தன் கண்ணை மூடி ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அம்சத்தில் ஒருவரான ராகு பகவான் என்பது தெரிந்தது. முனிவர் உடனே ஏழையிடம் உன் தலையில் உள்ள கீரைக் கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிஷம் அதைக் கீழே இறக்க வேண்டாம். இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு குடிலின் பின் பக்கம் சென்று ராகு பகவானின் மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார். ஏழையின் பின்னால் இருந்த ராகு பகவானும் குடிலின் பின்னே இருந்த முனிவரின் முன்பாக வந்து நின்று வணங்கி சுவாமி என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். முனிவரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன காரணம் என்று நான் அறியலாமா? என்று கேட்டார். அதற்கு ராகு சுவாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி. ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன். இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனைத் தீண்டி விட்டு என் கடமையை முடித்துக் கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன் என்றார்.

முனிவருக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது. எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியைப் பறித்துக் கொண்டு வந்துள்ளான். அவனைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணினார். ராகுவே அவனை நீ தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா? என்றார். ராகுவோ சுவாமி இத்தனைக் காலம் நீங்கள் இறைவனை பூஜை செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்கப் பெறுவான். அதனால் நான் அவனைத் தீண்டாமல் சென்று விடுவேன் என்றார். முனிவரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை நான் செய்த பூஜை பலன்கள் முழுவதையும் அந்த ஏழைக்கு கொடுக்கிறேன் என்று கூறி ஏழைக்குத் தன் பூஜை பலனை கொடுக்க ராகு பகவானும் முனிவரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார். அப்பொழுது கீரைக் கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது. முனிவர் அந்த ஏழையிடம் வந்து இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா? என்றார். ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.