குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஏரான் என்ற இடம். இங்கு விஷ்ணு கோவில் வராக மூர்த்தியுடன் கோவில் உள்ளது. தற்போது சிதிலப்பட்டு காணப்படும் இக்கோவில் கிபி 510 ம் நூற்றாண்டை சேர்ந்த்தாக இந்த கோவில் கருதப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குப்தப் பேரரசின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது. ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மௌரியர்கள் சுங்கர்கள் சாதவாகனர்கள் சாகர்கள் நாகர்கள் குப்தர்கள் ஹூணர்கள் காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோவில் சிதிலமடைந்து விஷ்ணுவின் சிலை உள்ளது. எதிரில் வராக மூர்த்தி சிலை திறந்த வெளியில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சிலை சுமார் 14 அடி நீளம் 5 அடி அகலம் மற்றும் 11 அடி உயரம் கொண்டது. இந்த சிலை இந்தியாவின் மிகப்பெரிய வராக சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிலை 1185 முனிவர்களின் தலை முதல் கால் வரை முழுமையான உருவங்களை பன்னிரண்டு வரிசைகளில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வரிசை உருவங்கள் யூ வடிவில் வராகத்தின் உடலில் செதுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வரிசைகளிலும் இரண்டு ஆயுதம் ஏந்திய முனிவர்களின் உருவங்கள் உள்ளன. மற்றவர்கள் ஒரு கையில் தண்ணீர் பாத்திரத்தையும் மற்றொரு கையில் அபய முத்திரை அல்லது விஸ்மயா முத்திரையுடன் உள்ளார்கள். வராக மூர்த்தியின் வலது தந்தத்தில் பூதேவியின் உருவம் உள்ளது. வராக மூர்த்தியின் முகத்தில் சரஸ்வதி சமபங்க தோரணையில் இடுப்பில் கைகளை ஊன்றியபடி நிற்கிறாள். காதுகளில் வித்யாதரர்கள் உள்ளார்கள். வராக மூர்த்தியின் கழுத்தில் இருபத்தெட்டு வட்டங்கள் கொண்ட மாலை உள்ளது. இருபத்தேழு வட்டங்களுக்குள் ஒரு ஆண் மற்றும் பெண் உருவம் உள்ளது. ஒரு வட்டத்தில் மட்டும் தேள் உருவம் உள்ளது. தொண்டை மற்றும் மார்புப் பகுதியில் நான்கு வரிசையில் ஆண் உருவங்கள் உள்ளது. மொத்தம் தொண்ணூற்றாறு வகையான உருவங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கு இடையில் மேலிருந்து நடுவில் தாமரையின் மீது விஷ்ணு நிற்கும் உருவம் உள்ளது. அவர் இரண்டு கைகளுடன் இருந்திருக்கிறார். தற்போது இரண்டு கைகளும் சிதிலமடைந்திருக்கிறது. மார்பின் மூன்றாவது வரிசையில் ஏழு கோள்களைக் குறிக்கும் ஏழு ஆண் உருவங்களும் இடதுபுறம் 2 கோள்களை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் தாமரைகளை கையில் ஏந்தியவாறும் மீதமுள்ளவர்கள் தண்ணீர் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர்.

வராகத்தின் தோள்களில் துருத்திக் கொண்டு இருப்பது போன்ற ஒரு கட்டை உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் மேற்கில் வாசுதேவரும் தெற்கில் சிவனும் வடக்கே பிரம்மாவும் கிழக்கில் விஷ்ணுவும் உள்ளார். வராகத்தின் கால்கள் மற்றும் வால் பகுதியிலும் முன்கால்களில் ஆறு வரிசைகளிலும் பின்னங்கால்களில் மூன்று வரிசைகளிலும் முனிவர்கள் வரிசைகளாக உள்ளார்கள். வராகத்தின் கால்களுக்கு இடையில் பாம்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செதுக்கப்பட்டுள்ள கடலின் சித்தரிப்பு உள்ளது. வராகத்தின் கழுத்தின் கீழ் சமஸ்கிருதத்தின் 8 வரிகளில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வராக மூர்த்தி அவதாரம் புனிதர்கள் மற்றும் அறிஞர்களைப் பாதுகாப்பதைக் குறிக்கும் படி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.