தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோவில்

ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் தீர்த்தகிரீஸ்வரர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தீர்த்தமலையில் இருந்து பல நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் தீர்த்த மலைக்கு கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேற்கே ராம தீர்த்தம் வாயு தீர்த்தம் வருண தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கௌரி தீர்த்தம் குமாரா தீர்த்தம் அகத்தியர் தீர்த்தங்கள் இமய தீர்த்தம் கந்த தீர்த்தம் உள்ளன. இதில் ராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை. தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.

வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான் தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால் கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ராம தீர்த்தம்

மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

அனுமன் தீர்த்தம்

அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம்

முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.

கௌரி தீர்த்தம்

இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.

அகத்திய தீர்த்தம்

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.

அக்னி தீர்த்தம்

அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.

தீர்த்தகிரிசுவரர் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். தீர்த்தகிரிசுவரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூசை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.