ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்

விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் தொற்றுநோய் விஷ கிருமிகளால் மக்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இறை பற்று மிக்க சதாசிவராய மன்னர் இதனைக் கண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜ வைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார். மன்னரின் ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திர பாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து. கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12 வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கமும் அபிஷேக தீர்த்தமும் பக்தர்களுக்கு அருமருந்தாய் விளங்கி அனைவருக்கும் நன்மை செய்து நோய்களில் இருந்து காத்தது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டு இடிபட்டது. இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்து வைத்தார்கள்.

இந்த இடத்தில் 1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானப் பணி நடந்தது. இப்பணி ஒரு கால கட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்து விட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் கோவில் மன்ற நிர்வாகி அகத்தியர் நாடி சோதிடர் திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்களை நாடினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட பாஷாண லிங்கம் பற்றி செய்தி வந்தது. அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு நாடி சோதிடர் பெருமுயற்சியுடன் குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது. திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்கள் தன்னிடம் கிடைத்த அந்த திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார். இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.