கௌமுக் குந்த் சிவலிங்கம்

ராஜஸ்தானின் சித்தோர்கர் கோட்டையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கௌமுக் குந்த் என்பது புகழ்பெற்ற புனிதமான நீர் ஊற்று ஆகும். இந்த நீரில் பழமையான சிவலிங்கம் உள்ளது. கௌமுக் என்றால் பசுவின் வாய் என்று பொருள். பசுவின் வாயில் இருந்து நீர் பாய்கிறது என்பதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்கால பசுவின் வாயிலிருந்து வரும் நீர் வருடம் முழுவதும் தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது அபிசேகம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இந்த கோட்டையின் பல இயற்கை நீர் ஊற்றுக்களில் இந்த நீர் ஊற்றும் ஒன்றாகும். இன்று வரை தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் சிவலிங்கம் முழுவதையும் மூடும் வகையில் தண்ணீர் நிரம்பி விடும். கோடை காலத்தில் குளத்தின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் போது அங்குள்ள கௌமுகமும் சிவலிங்கமும் பழங்கால சிவன் குடும்பம் தொடர்பான சிலைகளும் தெளிவாகத் தெரியும். இந்த நீர் ஊற்றைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் பல வருடங்களுக்கு முன்பு சில வருடங்கள் மழை இல்லாமல் இருந்தது. அப்போதும் பசுவின் முகத்தில் இருந்து தண்ணீர் இருந்து நிற்கவில்லை.

கோவிலுக்குள் ஒரு பெரிய தெய்வத்தின் சிலை கண்ணாடிக்கு முன்பாக இருந்து தன்னைத்தானே பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலை அறிஞர்களின் கூற்றுப்படி இந்த சிலை பார்வதி தேவியின் சிலை. இக்கோவிலில் ஒரு சிறிய அறையில் இரண்டு பசுக்களின் முகங்கள் உள்ளன அவற்றின் முகங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன. இரண்டாவது பசுவின் கீழ் சில பழமையான சிவலிங்கம் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறத்தில் நாற்கர வடிவில் உள்ள பெரிய விஷ்ணுவின் சிலை உள்ளது. பசுவின் வாயிலிருந்து வரும் தண்ணீர் சிவலிங்கத்தின் மேல் விழுந்த பின்பு அங்கிருந்து பிரதான குளத்திற்குச் செல்கிறது. அதன் அருகே ஸ்ரீ யந்திர வடிவ சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னால் உமா மகேஸ்வரர் சிலை பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. சுவரில் சுவரில் முழு சிவகுடும்பத்துடன் தொடர்புடைய பல சிலைகள் உள்ளது. இவை தற்போது மிகவும் சீரற்ற முறையில் உள்ளது. இந்த நீர் மருத்துவத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இங்கே தங்கியிருந்தால் அந்த இடத்தின் தெய்வீக தன்மை பசி இல்லாமல் செய்கிறது. இந்த கட்டுமானம் 11 ஆம் நூற்றாண்டில் ராஜா போஜ் என்பவரால் சமிதேஷ்வர் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டது. இக்கோவில் வாசலுக்கும் அரண்மனைக்கும் நடுவே சுரங்கப்பாதை உள்ளது.

One thought on “கௌமுக் குந்த் சிவலிங்கம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.