நாம் யார்?

ஒரு ராஜா யுத்தத்தில் தோற்றுப் போகிற மாதிரியான சூழல் வந்ததும் தப்பித்துப் போகலாம் என்று எண்ணுகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறி தப்பிப் போகிறான். எதிரி நாட்டுக்காரர்கள் துரத்திக் கொண்டு வந்ததைப் பார்த்தலும் ராஜா தன் மனைவியிடம் நான் முடிந்தால் இவர்களுடன் சண்டை போட்டு ஜெயித்து வருவேன். நீ கர்ப்பிணியாக இருக்கிறாய் உன் வயிற்றில் இருப்பது நம் நாட்டின் வாரிசு. அவனை வைத்து எப்படியாவது நாட்டை மீட்பதற்கு தயார் செய். நாட்டிற்காக நீ தப்பித்துப் போ என்கிறான். அதனால் ராணி குதிரையின் மேல் ஏறி தப்பிப் போகிறாள். சண்டையில் ராஜா இறந்து விடுகிறார். ராணி சிறிது தூரம் சென்றவுடன் அவளுக்கு பிரசவம் ஆகிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விடுகிறாள். அந்த இடம் வேடர்கள் வசிக்கிற ஒரு காடு. அவர்களுக்கு இந்தப்பெண்மணி ராணி என்பதும் தெரியாது. அதனால் ராஜகுமாரன் தான் யார் என்று தெரியாமல் வேடவர்களுடைய காட்டில் வளர்கிறான். அவன் ராஜகுமாரன் என்கிற விஷயம் ராஜா ராணி இரண்டு பேருக்கு மாத்திரம் தான் தெரியும். இரண்டு பேரும் உயிரோடு இல்லை. அவன் வேடர்களைப் போலவே சாப்பிட்டு அவர்கள் மொழியை பேசி வளர்கிறான்.

அந்த நாட்டில் இருந்த மந்திரி புத்திசாலி. தப்பித்துப் போன ராஜா ஒரு வேளை உயிரோடு இருந்திருந்தால் இந்த நேரம் வந்திருப்பார். வரவில்லை ஆகையால் ராணிக்கு குழந்தை பிறந்து இன்று உயிரோடு இருந்தால் அந்த ராஜகுமாரனை வைத்து எப்படியாவது இந்த நாட்டை மீட்டுவிடலாம் என்று சொல்லி மந்திரி ராஜா தப்பிச் சென்ற திசையை நோக்கி சென்று தேடிச் செல்கிறார். காட்டில் வேடர் குலத்தில் வளரும் ராஜகுமாரனின் முகத்தில் அரசரின் சாயல் மற்றும் நடை பாவனையை பார்த்து வேடர்களிடம் இவனைப் பற்றி விசாரிக்கிறார். அவர்கள் சொன்னதை வைத்து நம் ராஜகுமாரன் இவன் தான் என்று தெரிந்து கொண்டு நீ ராஜகுமாரன் வா போகலாம் உனக்கென்று நாடு மக்கள் இருக்கிறார்கள். நாட்டை மீட்டுவிடலாம் வா. அங்கு வந்தால் உனக்கு அத்தனை சுகங்களும் கிடைக்கும் என்கிறார். அவன் பயந்து கொண்டு நான் ராஜா எல்லாம் கிடையாது என்னை விட்டு விடுங்கள் வர முடியாது என்கிறான். அவனை மந்திரி தேற்றி அவனுக்கு குதிரை ஏறுவது கத்தி சண்டை போடுவது வரை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவனை அழைத்து வந்து நாட்டை மீட்டு விடுகிறார். நாட்டில் இப்போது அரசனாக அனைத்து சுகங்களையும் அனுபவித்தான் அந்த காட்டில் வளர்ந்த ராஜாகுமாரன்.

இது கதையில் உள்ள அந்த இளவரசன் நாம்தான். நம்முடைய தந்தை நடராஜா. சிதம்பரம் நடராஜா.

இக்கதையில் உள்ளது போல் நாமெல்லாம் பிறவி எடுக்கும் முன்பாக பகவானோடு இருந்தவர்கள். ஆசை காரணமாக எங்கிருந்து வந்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாயையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடல் என்னும் இந்த பவசாகரத்தில் மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இதிலிருந்து மீள வழி வழி தெரியாமல் நாம் வாழும் இந்த உலகம் என்று சொல்லக்கூடிய இந்த காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் ராஜகுமாரர்கள். ஜீவாத்மாக்களாகிய நாம் கைலாயத்திலோ வைகுண்டத்திலோ இருந்தவர்கள். நம் அப்பா இறைவன் என்று சொல்கின்ற ராஜா நடராஜா. நாம் இந்த உலகத்தில் வந்து மக்களுடன் சேர்ந்து மக்களாகி விட்டோம். அவர்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமெல்லாம் கைலாசவாசிகள். வைகுண்டவாசிகள் பசி தாகம் தூக்கம் இல்லாமல் அமிழ்தம் சாப்பிட்டுக் கொண்டு அழகாக பட்டாடைகளை தரித்துக் கொண்டு தேவர்களுடைய கிரீடத்தை போட்டுக் கொண்டு பேரின்பத்தில் லயித்துக் கிடந்தவர்கள். இன்றைக்கு பசிக்கிறது தாகம் எடுக்கிறது. உடலிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்று சேம்பும் சோப்பும் போட்டுக் கொண்டு சென்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் இதனையெல்லாம் பெருமையாக வேறு நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு ஆனந்தமாக பகவானோடு இருந்தவர்கள். இன்றைக்கு மானுடர்களாக மயக்கத்தில் மயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கதையில் வந்த மந்திரியைப் போல் நம் வாழ்க்கையிலும் ஒருவன் வந்து நீங்களெல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. நான் உங்களை கயிலாயத்தில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மனிதனோடு மனிதனாகப் போய் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம். அதெல்லாம் கிடையாது இது என் உடம்பு என் வீடு என் பந்தம் என்போம். மாயையின் மயக்கத்தில் இருப்பதினால் இறைவனே வந்து சொன்னாலும் நான் மனிதன் என்போம். கதையில் வரும் மந்திரியை ராஜ குமாரன் நம்பி அவர் சொன்னதை எல்லாம் செய்தது போல் நம்மிடம் சொன்னவரை நம்பினால் அவர் சொல்வதை நம்பினால் அவர் விடாமல் பயிற்சி கொடுத்து நமக்கு இருக்கிற சக்தியை நமக்கு புரிய வைப்பார். யார் அந்த அவர்? நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் நமக்கு அருள்பாலித்த நூல்கள் நம்முடைய தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பெரிய புராணம் உட்பட பன்னிரு திருமுறைகள் என்று பெரிய நூல் களஞ்சியமே இருக்கிறது. இந்த நூல்கள் வழியாக நமக்கு அவர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் பயிற்சி செய்து அந்த பயிற்சியில் எப்போது முற்றுப் பெருவோமோ அப்போது இந்த துன்ப பிறவியில் இருந்து விடுபட்டு கைலாசம் அல்லது வைகுண்ட அரசவைக்கு சென்று விடுவோம்.

கோயில் கர்ப்பக்கிரகம்

கோயில் கர்ப்பக்கிரகத்தை அமைக்கும் போது அங்கே எந்தப் பக்கத்திலிருந்தும் சூரிய ஒளியோ வெளிச்சமோ எளிதில் புகாதபடி மிகத் தடிமனான கற்களைக் கொண்டு கட்டினார்கள். இதன் பின்னே ஓர் அறிவியல் உள்ளது.

ஒரு மனிதனின் மனம் ஐம்புலன்களின் வழியாக வெளி உலகத்தை பார்க்கும் போது வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கும். ஆனால் கண்களை மூடி இருக்கும் போது இருட்டுடாக இருக்கும். அப்போது மனம் தானாகவே உள்நோக்கி பார்க்கத் துவங்கும். கோயிலுக்கு சென்று அங்கே மூலஸ்தானத்தில் இருட்டில் விளக்கு வெளிச்சத்தில் இறைவனை பக்தியோடு இறைவனை பார்க்கும் மனித மனமானது சுருங்க துவங்குகிறது. அந்தச் சிலையிலிருந்து வெளிப்படும் காந்த அலைகளையும் மந்திரங்களின் அதிர்வுகளையும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையில் மனித மனம் எந்த அளவிற்கு அடங்கியிருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த உடல் கிரகித்துக் கொள்ளும். கோயிலுக்கு செல்வது நமக்கு வேண்டியவற்றை கடவுளிடம் வேண்டிப் பெறுவதற்கு மட்டுமல்ல. வெளி உலக தொடர்பில் இருக்கும் குழப்பமடைந்த மனதை அந்த இருண்ட அறைக்குள் உள்ள இறைவனிடம் மனதை ஒரு நிலைப்படுத்தினால் மனம் அமைதி அடையும். அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது. இந்த வழிபாட்டு முறையும் ஒரு வகை தியானமே.

அமைதி

ஒரு அரசன் அமைதி என்பதை மிகச் சரியாக விளக்கும் ஓவியத்திற்குப் பெரிய பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பல ஓவியர்கள் பல அற்புதமான ஓவியங்களை வரைந்து வந்தனர். அதில் சிறந்த இரண்டு ஓவியங்களை மட்டும் அரசர் தேர்ந்தெடுத்தார்.

முதல் ஓவியத்தில் மிக அழகாக சலனமே இல்லாத ஒரு தெளிவான ஏரி இருந்தது. அதைச் சுற்றிப் பச்சைப் பசேலென்ற மலைகள். அதன் மேல் வெண் மேகங்கள் தவழும் நீல வானம் என அற்புதமாக இருந்தது. ஒவியத்தைப் பார்த்தாலே மனதில் முழுமையான அமைதி பிறக்கும். ஒவியத்தைப் பார்த்த அனைவரும் இந்த ஒவியத்தைதான் அரசன் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தார்கள்.

இரண்டாவது ஓவியத்தில் இருண்ட வானம் இடி மின்னலுடன் பெய்யும் பயங்கரமான மழை. பார்ப்பதற்கே பயத்தைக் கொடுக்கும் உருண்டு திரண்டு விழும் ஒரு பெரிய அருவி. படத்தை உற்றுப் பார்த்தால் அந்த அருவிக்குப் பின்னால் உள்ள ஒரு பாறை இடுக்கில் ஒரு சின்ன செடியில் தாய் பறவை ஒன்று தன் கூட்டில் குஞ்சுகளோடு மிக நிம்மதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தது.

அரசர் இரண்டாவது ஓவியத்தை அமைதி ஒவியமாக அறிவித்தார். அனைவருக்கும் ஒரே குழப்பம் இந்த ஓவியத்தில் எங்கே அமைதி இருக்கிறது? என்று அரசரிடம் கேட்டார்கள். அரசர் சிரித்துக்கொண்டே சொன்னார். அமைதி என்பது சத்தமே இல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லாத இடத்தில் இருப்பது அல்ல. எவ்வளவு பெரிய புயலும் சத்தமும் போராட்டமும் உங்களைச் சுற்றி நடந்தாலும் உங்கள் மனதிற்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தப் பறவையைப் போல் நிம்மதியாக இருந்தால் அதுதான் உண்மையான அமைதி என்றார்.

நம் வாழ்க்கையில பிரச்சனைகளே வரக்கூடாது அப்போதான் நிம்மதியா வாழ முடியும்னு நினைத்தால் அது கடைசி வரைக்கும் நடக்கவே நடக்காது. கடனைப் பற்றிய கவலை வேலைப்பளு குடும்பக் கஷ்டங்கள் என உலக துன்பங்கள் அனைத்தும் சுற்றிப் புயல் மாதிரி வீசினாலும் மனசை மட்டும் அந்தப் பறவை மாதிரி எப்பவும் அமைதியா வைத்துக் கொண்டால் அதுதான் அமைதியான நிம்மதியான வாழ்க்கை. உண்மையான அமைதி நிம்மதி வெளியில சூழ்நிலையில இல்லை. ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.

பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமன்

இராமாயணத்தில் அசோக வனத்தில் சீதையை சந்தித்த பிறகு இலங்கையை அழிக்கத் தொடங்கிய அனுமனை நோக்கி இந்திரஜித் தனது பிரம்மாஸ்திரத்தை எய்தான். பிரம்மாஸ்திரம் தன்னை ஒன்றும் செய்யாது என்ற வரத்தை ஏற்கனவே பெற்றிருந்த அனுமன் பிரம்மாவிற்கு மரியாதை அளிக்கும் நோக்கத்திலும் அந்த அஸ்திரத்தின் வலிமையை வீணடிக்கக் கூடாது என்பதாலும் பிரம்மாஸ்திரத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாகவும் அனுமன் அந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நின்றார். தான் அனுமனை கட்டுப்பட்டுத்தி வெற்றி பெற்றதாக நினைத்த இந்திரஜித் அனுமனை இராவணனின் அவைக்கு அழைத்துச் சென்றான். இலங்கையின் பலத்தையும் இராவணனின் எண்ணங்களையும் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தூதரின் கடமையைச் செய்ய நினைத்த அனுமன் பிரம்மாஸ்திர கட்டுடன் இராவணனின் அரசவைக்கு சென்றார். இந்திரஜித்தின் அறிவுரையை மீறி அசுரர்கள் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமனை மேலும் சாதாரண கயிறுகளால் கட்டினர். அவர்கள் இவ்வாறு செய்தவுடன் பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு நீங்கியது.

இந்திரஜித்தின் வலிமை மிக்க பாம்பு போன்ற பிரம்மாஸ்திரம் எனும் ஆயுதத்தால் அனுமனின் கைகளும் வாலும் சுருட்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இராமாயணக் காட்சி இந்த சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஆந்திர மாநிலம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் பேரரசின் தலைவரான திம்மநாயுடுவால் 1510 – 1525 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.

கார்த்திகேயன்

தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோயிலில் இந்த முருகரின் சிலை ஒருகாலத்தில் இருந்தது. நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைபாடுகளுடன் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட சிலையாகும். இக்கோயிலானது கிபி 11ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

பத்ரகாளி அம்மன்

திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிற்பமானது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைச் சேர்ந்தது. இக்கோயில் கிபி 13 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் (பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகரநாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில்) கட்டப்பட்டது. சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட திரிசூலம் உலோகத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

நந்தி பகவான்

கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் இந்த நந்தி பகவான் சிற்பம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.