கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை. பெருமாளுக்கு வாகனமாகவும் அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடாழ்வார். ஆண் வடிவில் மட்டுமே காணப்படும் கருடாழ்வார் ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் கருடி என்ற பெயரில் பெண் வடிவில் அருள் பாலிக்கிறார். புராணங்கள் நூல்களில் கருடனின் பெண் வடிவம் அல்லது கருடனின் துணைவி கருடீ அல்லது உன்னதி என்று அழைக்கப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோவில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார்.
திருவாரூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் சன்னிதி அருகே பெருமாள் சன்னிதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இவர் காதணி மூக்கணி மற்றும் புடவை அணிந்த கோலத்தில் மங்களகரமாகக் காட்சி தருகிறார். ஆண் வடிவ கருடன் பெருமாளுக்கு வாகனமாக இருப்பது போல தாயாரின் வாகன சேவைக்கு அடையாளமாக இந்த பெண் வடிவ கருடீ வழிபடப்படுகிறார்.
