கோத பரமேஸ்வரர் திருக்கோயில் 4

மூலவர் கோதபரமேஸ்வரர் கைலாசநாதர் திருநாகீசர். லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோத என்றால் சமஸ்கிருதத்தில் பசு என்று பொருள். பசு இறைவனை வெளிப்படுத்தியதால் கோத பரமேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சிவலிங்கத்தில் நாக வடிவில் ராகு இருக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வ மரம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர். புராண பெயர் திருநாங்கீசநேரி சங்காணி. காணி என்றால் நிலம் என்றும் செங்காணி என்றால் செம்மண் நிறைந்த நிலம் என்றும் பொருள். செங்காணி என்பதே பின்னர் சங்காணி என்று மறுவியது. மேலும் இந்தப் பகுதியில் சிறு சிறு குன்றுகள் சூழ்ந்து இருப்பதால் குன்றத்தூர் என்ற பெயர் பெற்று பின்னர் குன்னத்தூராக மறுவியது. முற்காலத்தில் இந்த ஊர் கீழவேம்புநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த நிலப்பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இங்குத் தனி விமானத்துடன் கூடிய  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சுவாமியும் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதியில்  அம்மையும் காட்சி தருகிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் நந்தி தட்சணாமூர்த்தி கன்னிமூலகணபதி வள்ளி தெய்வானை உடன் ஆறுமுகநயினார் என்னும் நாகசுப்ரமணியர் உள்ளார். இவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் உள்ளார்கள். முன் மண்டபம் அர்த்த மண்டபம் நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. இங்குச் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி பக்தர்களுக்கு ஆபத்து வரும் வேளையில் அவர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்குத்  தயாராக உள்ளார் என்பது போல கால்களை தூக்கி எழும்புவதற்கு தயாராக இருப்பது போல் உள்ளார்.

ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஏனெனில் பழத்தை உண்பவருக்கு நித்திய இளமையையும் வலிமையையும் தரும். ஆகவே அரசன் மரத்தைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது. இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச் சொன்னான். கர்ப்பிணிப்பெண் வீட்டில் இருந்த பழத்தை கண்ட காவலர்கள் மன்னனிடம் அழைத்துச் சென்றார்கள். விசாரணை ஒன்றும் செய்யாமல் அரசன் அவளை கழுவேற்ற மன்னன் உத்தரவிட்டான். தான் நிரபராதி என்று எவ்வளவு சொல்லியும் அவளது பேச்சை யாரும் கேட்கவில்லை. அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் நீதி தளைக்கும் வரை பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். பின்னர் அவளின் சாபத்தின் படியே காலப் போக்கில் ஆண்கள் யாரும் அந்த ஊரில் இல்லாமல் போனார்கள். பின்னர் ஆண்கள் இல்லாததால் பெண்களும் அவ்வூரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களை திருமணம் செய்யவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களின் பக்தியை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்து அருள விரும்பினார். ஆகவே உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தை வெளிப்படுத்த எண்ணினார். இதனால் பாம்புகள் சூழ்ந்திருந்த மண் புற்றுக்கு மேல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்கள் சென்று மறைந்திருந்த இறைவன் மீது தானாகப் பாலை சொரிந்தன. அதனை கண்ட பசுவை மேய்ப்பவர்கள் இந்தச் செயலை பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரும் அங்கு வந்து அந்த அதிசயத்தை  நேரில் கண்டு மகிழ்ந்தார். சிவபெருமானுக்கு கம்பீரமான கோவில் ஒன்றை எழுப்ப எண்ணினார். உடனடியாக அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து இறைவனுக்கு முறையான கோயில் கட்ட உத்தரவிட்டார். இச்செயல் இறைவனின் அருளால் கர்ப்பிணிப் பெண்ணின் சாபத்தை நிராகரிக்க முடிந்தது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது மலர் கரை ஒதுங்கிய இடம் குன்னத்தூர். நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் நான்காவதான இக்கோயில் இராகுவுக்கு உரியது. இராகு தலம் என்றும் இராகு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலின் அருகே கீழத்திருவேங்கடநாதபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலும் சற்று தொலைவில் சிறிய மலைக்குன்றின் மீது மேலத்திரு வெங்கட நாத புரம் கோவில் கோவிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்தக் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோவில் பூஜைகள் முறையாக நடைபெற வீரபாண்டிய மன்னன் 4200 ரூபாய் மதிப்புடைய பணம் கொடுத்துள்ளது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கோவிலில் நில அளவுகோல் ஒன்று உள்ளது. இது ஊரில் ஏற்படும் நிலம் சம்மந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப் பட்டுவரும் செப்பேடு ஒன்றில் இந்தத் திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இங்குள்ள இறைவனின் பெயர் திருநாகீசர் என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிடப்பட்டு உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.