அகத்தியர் தென்நாட்டில் பல இடங்களிலும் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்த கோயில்களில் சாரம் அகத்திஸ்வரர் கோயிலும் ஒன்று. அகத்தியா் தமது திருக்கரங்களினால் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத் திருமேனி ஶ்ரீஅகத்தீஸ்வரா் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அகத்தீஸ்வரா் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையின்திருநாமம் ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆகும். இந்த அன்னையின் திருவுருவச்சிலை தற்போது திருக்கோயிலில் இல்லை. காலவெள்ளத்தில் இச் சிலை சிதிலமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அக்காலத்தில் இந்த இடம் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஈசன் தன் தேவியோடு அகத்திய மகரிஷி முன் தோன்றி தன் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினாா். ஈசன் மீது அகத்தியா் கொண்டிருந்த பக்தியின் சாரத்திற்கு சான்றாக இந்த திருத்தலம் சாரம் என்று அழைக்கப்பட்டது.
இக்கோயிலில் பிரம்ம சாஸ்தா முருகர் அருள்பாலிக்கிறார். பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனைச் சிறையிலிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கிய போது பிரம்மனுக்கு உரிய ஜபமாலையும் கமண்டலத்தையும் கொண்டாா் முருகப்பெருமான். கந்தனுக்குரிய இந்தத் திருவடிவம் பிரம்மசாஸ்தா என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம சாஸ்தா என்று முருகப்பெருமானின் இந்த வடிவினை கந்தபுராணப் பாடல் குறிப்பிடுகின்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானை சுப்ரமண்யன் என்று வணங்குகிறோம். பிரம்மண்யன் என்றால் பிரம்மத்தை உணா்ந்த பரமஞானம் பெற்றவன் என்பது பொருளாகும். சு என்பது இதனை அதி உன்னதமான என்ற பொருளை மேலும் சிறப்பிக்கும் அடைமொழியாகும். பிரம்மத்தின் அதி உயா்வான நிலையை அடைந்தவன் சுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம் தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். எனவே தான் முருகப் பெருமானை ஞானக் கடவுள் என்று வணங்குகின்றோம்.
குளிகன் மற்றும் மாந்தியுடன் ஜேஷ்டாதேவியின் திருவுருவச் சிலை உள்ளது. இச்சிலை இத்தலத்தில் தற்போது ராஜமாதங்கி என்றும் சியாமள வராஹி என்றும் அழைக்கப்படுகின்றது.
பல்லவ மன்னா்கள் முருகனைப் பரமபாகவதன் பரம மகேஸ்வரன் பரம வைஷ்ணவன் பரம பிரம்மண்யன் என்று அழைத்ததாக செப்பேடுகள் தொிவிக்கின்றன. சோழ மன்னா்கள் காலத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் காணப்படும் அரிய இந்த பிரம்ம சாஸ்தாவின் சிலை பல்லவா்கள் காலத்தைச் சாா்ந்தது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். தொண்டை நாட்டில் ஆனூா் கந்தசாமி கோயிலிலும் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்திலும் புதுச்சோி மாநிலம் மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவா் கோயிலிலும் பிரம்ம சாஸ்தா வடிவிலான முருகப்பெருமானின் சிலைகள் உள்ளன.
சாரம் ஶ்ரீஅகத்தீஸ்வரா் திருக்கோயிலில் சோழா் கால கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் பண்டைய அளவு கோலினைக் கல்வெட்டில் வடித்துள்ளனா். மற்றொரு கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்து மூன்றாவது ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டில் இத்தலத்தின் பெயா் ஜெயங்கோவளநாட்டு சாரமான ஜெயங்கொண்ட சோழ நல்லூா் என்றும் ஈசனின் பெயர் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் கோயிலுக்கு நந்தா விளக்கேற்றுவதற்காக முப்பது பசுக்களை தானமாக வழங்கியதையும் சந்தி விளக்கெரிக்க பதினாயிரத்து எண்ணூறு காசும் கொடுத்து சூரிய சந்திரா் உள்ளவரை விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதையும் ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திண்டிவனத்திற்கு அருகில் 8 கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயில் தற்போது சிறிது சிறிதாக புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.