கந்தபுராணம் பகுதி -8

குழந்தைகளை வளர்க்க முன்வந்த கார்த்திகை பெண்களை சிவபெருமான் பாராட்டினார். அப்போது திருமால் அப்பெண்களிடம் தேவியரே நீங்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர்கள் சரவணப்பொய்கை சென்றனர். தாமரை மலர்களின் மீது குளிர்நிலவாய் காட்சியளித்தனர் குழந்தைகள். அவர்களை குளத்தில் இறங்கி வாரியெடுத்தனர் கார்த்திகை பெண்கள் அப்போது அவர்களை அறியாமலே அவர்களின் தாய்மை நெஞ்சத்தில் பொங்கிச் சுரந்த பாலை ஊட்டினர். குழந்தைகள் படுசுட்டிகளாக இருந்தன. அவர்களின் விளையாட்டிற்கு அளவே இல்லை சிறிது காலத்தில் அவர்கள் தத்தி தத்தி நடைபயில ஆரம்பித்தனர். தள்ளாடி விழுந்தனர் ஓடியாடி விளையாடினர். இதைப் பார்த்து தாய்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது. இங்கே இப்படியிருக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது தேவர்கள் மட்டுமல்ல அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் தன் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழும் அளவுக்கு ஓடினாள். அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர்.

அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார். ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்க்க. அவர்கள் வயிற்றில் கர்ப்பம் தரித்தது. இதைப் பார்த்த பார்வதிதேவி கோபத்துடன். பெண்களே நீங்கள் என் மணாளனை மயக்கும் விழிகளால் பார்த்து அவரது மனதைக் கெடுத்து கர்பமானீர்கள். இந்த கர்ப்பம் உங்கள் வயிற்றை விட்டு வெளியேற நீண்டகாலம் ஆகும். இதை சுமந்த படியே வாழ்ந்து வாருங்கள் என சாபம் கொடுத்தாள். அப்பெண்கள் கலங்கியழுதனர். சிவன் அவர்களிடம் பெண்களே ஒரு ஆண்மகன் பிற பெண்களை உற்று நோக்கினால் என்ன தண்டனையோ அதே தண்டனை பெண்ணினத்திற்கும் உண்டு. ஆண்கள் தங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்க பெண்ணினமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்வே உலகத்துக்கு உதாரணமாக அமையட்டும். இருப்பினும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் என் தேவியராகி விட்டதால் உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள் என்று உத்தரவிட்டார். பத்து மாதம் கடந்தும் அவர்களுக்கு பிரசவிக்கவில்லை. கர்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அவை அவர்களின் உடலில் முத்துக்களாய் ஊறின (அம்மை). அந்த அம்மை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றில் இருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய லட்சம் வீரர்கள் அங்கே தோன்றினார்கள்.

ஒருமுறை பார்வதிதேவி சந்தோஷமாக இருந்த போது அந்த தேவியர் தங்களது சேவையை ஏற்று சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டனர். இனியும் கர்ப்பம் தாங்கும் சக்தியில்லை என்று கதறினர். சிவபெருமான் பார்வதியிடம் தேவி இந்த உலகின் நன்மை கருதியே என் அம்சமான வடிவேலன் தோன்றினான். அவனுக்கு பக்க பலமாக இருக்க இந்த லட்சம் வீரர்களை உருவாக்கினேன். இவர்களை வழி நடத்திச் செல்ல சேனாதிபதிகள் வேண்டும். அதற்காகத்தான் இவர்களைக் கர்ப்பமுறச் செய்தேன். இது என் திருவிளையாடல்களில் ஒன்று அவர்களை தவறாகக் கருதாமல் உன் சாபத்தை நீக்கிக் கொள் என்றார். கருணைமிக்க அந்த அன்னையும் சாப விமோசனம் கொடுக்க வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஷஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். பின்னர் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை வணங்கி, பார்வதி தேவியின் கடாட்சமும் பெற்று பூரண சக்தியுள்ளவர்கள் ஆயினர்.

இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான். மற்ற சகோதரர்கள் வீர விளையாட்டுகளுக்கு சென்றால் அவர்களைக் கண்டதுமே போட்டியாளர்கள் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு ஓட ஆரம்பித்தனர். சிவன் அவர்களை ஆசிர்வதித்து மக்களே உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். என்னிடம் அருள் பெற்ற அவர்கள் எனக்கு பிடிக்காத செயல்களைச் செய்கின்றனர். அவர்களை வெற்றி கொண்டு உலகில் நன்மை நடக்க நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன் வாருங்கள் நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம் என்றார். பார்வதிதேவியும் அகமகிழ்ந்து தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச் சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்த அவர்கள் தாங்கள் சென்ற காளை வாகனத்தில் இருந்து இறங்கினர். பார்வதிதேவி ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள். அப்போது அவள் மார்பில் சுரந்த பாலை முருகக்குழந்தைகள் குடித்து மகிழ்ந்தனர். அப்போது சிந்திய சில துளிகள் சரவணப்பொய்கையில் கலந்தன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

கந்தபுராணம் பகுதி -7

அஜாமுகி துர்வாசரை மறித்து தன் இச்சைக்கு அடி பணியச் சொன்னாள். தவ சிரேஷ்டரான அவர் இக்கொடுமையை செய்ய முடியாது என மறுத்த பிறகும் அவரை பல வந்தப்படுத்தினாள். இதன் விளைவாக அவளுக்கு இல்வலன் வாதாபி என்ற மக்கள் பிறந்தனர். அவர்கள் தன் தந்தையின் தவப்பயன் முழுவதையும் தங்களுக்கு தரவேண்டினர். அவரோ மறுத்தார். எனவே அவரைக் கொல்லவும் துணிந்தனர் மகன்கள். படுகோபக்காரரான துர்வாசர் என்னைப் போன்ற முனிவர்களை துன்புறுத்துவதாலேயே நீங்கள் அழிவீர்கள் என சாபமிட்டார். பின்னர் இல்வலன் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து தன் தம்பி வாதாபியை வெட்டி அக்னி குண்டத்தில் போட்டான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மனிடம் பிரம்மனே நான் எத்தனை முறை என் தம்பியைக் கொன்றாலும் நான் அழைக்கும் போது உயிர் பெற்று வரும் வரம் தர வேண்டும் என்றான். அந்த வரம் அவனுக்கு கிடைத்தது. இல்வலன் அந்தணர்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து தங்கள் இல்லத்தில் திதி நடப்பதாகவும் தான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும் என்றும் சொல்வான். வாதாபி உணவு வடிவில் அந்தணர்களின் வயிற்றுக்குள் போய் அவர்களின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். இப்படி வேதம் கற்ற அந்தணர்கள் பலரைக் கொன்று குவித்தான். இப்படியாக அசுர வம்சம் செய்த அட்டூழியம் பெருகியது.

ஒரு சமயத்தில் இந்திரனின் மனைவி இந்திராணியை பார்த்த சூரபத்மன் அவளை அடைய விரும்பினான். அவர்கள் ஓடி ஒளிந்தனர். பின்னர் சாஸ்தாவின் அருளால் அவள் தப்பிக்க வேண்டியதாயிற்று. இந்திராணியைக் காப்பாற்ற சிவ மைந்தரான சாஸ்தாவின் காவலர் மகாகாளர் சூரனின் தங்கையான அஜாமுகியின் கையை வெட்டி விட்டார். இப்படி சூரர்களுக்கும் தேவர்களுக்கும் பகைமை வளர்ந்தது. தேவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலரை சூரன் கொன்றான். ஆனால் அவர்கள் அமிர்தம் குடித்திருந்ததன் பலனாக மீண்டும் எழுந்து விட்டனர். வேறு வழியின்றி அவர்களை தன்னாலான மட்டும் கொடுமை செய்தான் சூரபத்மன். தேவர்கள் மகாவிஷ்ணுவின் தலைமையில் கூடி சூரர்கள் இந்தளவுக்கு வளரக் காரணமாக இருந்த சிவபெருமானால் தான் அவர்களை அழிக்கவும் முடியும். எனவே அவரை அணுகுவதென முடிவு செய்தனர். அனைவரும் விஷ்ணுவின் தலைமையில் கைலாயம் சென்றனர். நந்திதேவரின் அனுமதி பெற்று சிவபெருமானைச் சந்தித்தனர்.

சிவபெருமானுக்கும் பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாய் பிறந்த பார்வதிக்கும் அப்போது தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர்களிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். ஐயனே அசுரர்கள் எங்கள் பொருளை கொள்ளையடித்தனர். உலகங்களை ஆக்கிரமித்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேவர்களில் பலர் சிறையில் கிடக்கின்றனர். வேதம் கற்ற அந்தணர்களை வாதாபி என்ற அசுரன் கொன்று குவிக்கிறான். நவக்கிரகங்களும் தங்கள் பணியைச் செய்வதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால் இப்போது மாற்றான் மனைவி எனத் தெரிந்தும் இந்திராணியை அடைய விரும்புகிறான் பத்மாசுரன். இந்த கேவலத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கேவலத்தை தடுக்க இந்திரனின் மகன் ஜெயந்தன் முயன்றான். இப்போது அவனும் சிறையில் கிடக்கிறான். இனியும் தாங்கள் பொறுத்தால் தேவர் உலகமே இல்லாமல் போய்விடும் என்றனர்.

அதற்கு சிவபெருமான் உலக மாந்தர் என்ன அட்டூழியம் செய்தாலும் பூமியும் வானமும் தாங்கும். ஆனால் விரும்பாத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தும் போது மட்டும் தாங்கவே செய்யாது. பெண்ணுக்கு கொடுமை இழைக்கப்படும் இடம் பூலோகமாயினும் சரி ஏழுலகில் ஏதாயினும் சரி அங்கே அழிவு துவங்கி விடும். அசுர உலகத்துக்கும் அழிவு துவங்கி விட்டது. சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். தேவர்களே கலக்கம் வேண்டாம். என் அனுமதியின்றி தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டு நீங்கள் செய்த பாவத்தின் பலனை இதுவரை அனுபவித்தீர்கள். இனி நீங்கள் சுகமாக வாழலாம். அந்த சுகத்தை எனக்கு பிறக்கும் மகன் வடிவேலன் உங்களுக்கு தருவான் என்றார். தேவர்கள் மகிழ்ந்து ஐயனே எங்களை வாழ வைக்கப் போகும் வடிவேலன் எப்போது வருவார் எனக் கேட்டனர். சிவன் அவர்கள் முன்னிலையிலேயே பார்வதியை பார்த்தார். அப்போது அவருடைய நெற்றியில் இருந்து அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அந்த அனலின் வேகத்தை தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். பார்வதிதேவியாலும் அந்த வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் எழுந்து ஓடினாள். சிவனின் நெற்றியிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் ஜொலிக்கும் ஆறு நெருப்பு பந்துகளாக மாறின. அவற்றின் அருகே நெருங்க முடியாத தேவர்களை நோக்கி தேவர்களே நீங்கள் உங்கள் கண்ணெதிரே பார்ப்பது வண்ண வடிவேலனின் நெருப்பு முகங்கள். அவன் ஆறுமுகம் கொண்டவனாக இருப்பான். இவனே உங்கள் வினை தீர்ப்பவன் என்றார்.

தேவர்கள் அந்த நெருப்பு பந்துகளை வணங்கினர். அதே நேரம் இந்நெருப்பு பந்துகளை தங்களுடன் எடுத்துச் செல்வது எப்படி என ஆலோசித்தனர். சிவபெருமான் அவர்களின் எண்ணத்தை அறிந்து கொண்டு தேவர்களே கவலை வேண்டாம். இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் என் மகன் ஆறு குழந்தைகளாக வளர்வான். இவர்களை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்கப் போகிறீர்கள் என்றார். அப்போது ரிஷிபத்தினிகள் ஆறு பேர் சிவபெருமான் முன் வந்து நின்றனர். தேவாதிதேவா அந்த குழந்தைகளுக்கு நாங்களே தாயாக இருந்து வளர்த்து வருவோம். எங்களிடம் ஒப்படையுங்கள் என்றனர்.

KRS | கரச on Twitter: "திருவண்ணாமலை ...

கந்தபுராணம் பகுதி -6

இப்போது அசுரப்படை வைகுண்டத்தை முற்றுகையிட்டு விட்டது. உலகை பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள திருமால் ஆவேசமாய் எழுந்தார். தனது பாஞ்சஜன்யம் என்னும் வெற்றிச்சங்கு, நந்தகம் என்ற கத்தி, கவுமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சார்ங்கம் என்ற வில் ஆகிய ஆயுதங்களுடன் அசுரப்படைகளை அழிக்கப் புறப்பட்டார். சிவனிடம் அருள் பெற்ற அசுரர்களைத் தன்னால் அழிக்க முடியாதெனத் தெரிந்தாலும் சிவனின் அருள் பெற்றவர்களுக்கு தனதருளையும் கொடுக்கும் நோக்கத்தில் அவர்களைச் சந்தித்தார். சூரர்களுடன் கடும் போரில் இறங்கி விட்டார் நாராயணன். 12 ஆண்டுகள் கடும் போராட்டம் நடந்தது. எந்த ஆயுதமும் சூரர்களை அழிக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த நாராயணன். அவர்களுக்கு அருளும் நோக்கில் தன் சக்கராயுதத்தை ஏவினார். அது தாரகாசுரனின் மார்பில் பதக்கமாய் பதிந்தது. நாராயணன் தாரகனிடம் சூரனே நீ சிவனிடம் வரம் பெற்றதை நான் அறிந்தாலும் உனக்கு அருளும் நோக்கிலேயே சக்ராயுதத்தை பரிசாய் தந்தேன். நீ உன் இஷ்டம் போல் இந்த லோகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம் என்றார். தாரகன் அவரிடம் இருந்து விடை பெற்றான்.

பின்னர் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய சகோதரர்கள் நந்திகேஸ்வரரின் அனுமதியுடன் சிவபெருமானைச் சந்தித்து ஆசி பெற்றனர். சகல அண்டங்களையும் வென்றது குறித்து கூறினர். சிவபெருமான் அவர்களை வாழ்த்தி ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு தலைவரை நியமித்த பின்னர். அவற்றின் நடு நாயகமாக விளங்கும் ஓரிடத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்ய அனுக்கிரஹம் செய்தார். இவ்விடத்தில் ஒரு சந்தேகம் எழும் ஏன் தேவர்கள் அல்லல் பட வேண்டும்? அசுரர்களை ஏன் இறைவன் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே அது. தேவராயினும் மனிதராயினும், கந்தர்வராயினும் பிற வகையினராயினும் தவறு செய்யும் பட்சத்தில் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் ஓடினர். பரந்தாமா பரமசிவன் தான் அசுரர்களுக்கு வரங்களைத் தந்தார் என்றால் தாங்களும் தங்கள் சக்ராயுதத்தை அவர்களுக்கு வழங்கி விட்டீர்களே இது நியாயமா? நம்மை ஆபத்து சூழந்து கொண்டுள்ளதே என்றனர். அவர்களிடம் பரந்தாமன் தேவர்களே முன்பொரு முறை பரமசிவனின் மாமனார் தட்சன் நடத்திய யாகத்திற்கு அந்த லோகாதிபதியின் அனுமதியின்றிச் சென்றோம். அவன் கொடுத்த அவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டோம். அந்த பாவத்தின் பலன் உங்களை மட்டுமல்ல என்னையும் சேர்ந்து கொண்டது. அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கிறோம். பரமேஸ்வரன் போட்டுள்ள இந்த முடிச்சை அவிழ்க்க அவரால் தான் இயலும். தவறு செய்த நாம் தண்டனையை அனுபவித்து தானே ஆக வேண்டும் என்றார். பரந்தாமனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தேவர்கள் தலை குனிந்தனர். ஒரு நிமிட நேரம் செய்த தவறுக்காக 108 யுகங்கள் அசுரர்களின் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என வருந்தினர்.

பரமேஸ்வரனை இரண்டாம் முறையாக சிவலோகத்திற்கே சென்று சந்தித்த சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்தனர். பிரம்மா அவனுக்கு முடிசூட்டினார். விஷ்ணு முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரை சூரபத்மன் வைகுண்டத்துக்கே அனுப்பி விட்டான் தேவர் தலைவரான இந்திரன் அசுரன் உமிழும் வெற்றிலை எச்சிலை பிடிக்கும் பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டான். வாயு சாமரம் வீசினான். பணப்பை இருந்த குபேரனின் கையில் அசுரனுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டிய பாக்குப்பை இருந்தது. வெண்கொற்றக்குடையை சூரிய சந்திரர்கள் பிடித்தனர். இப்படி தேவர்களெல்லாம் ஆளுக்கொரு வேலை செய்ய உத்தரவிட்டனர் சூரர்கள். மகேந்திரபுரியை நிர்மாணித்த விஸ்வகர்மாவின் மகள் பத்மகோமளை பேரழகியான இவளை பத்மாசுரன் திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் உதவியுடன் உலகிலுள்ள அழகிகளை மயக்கி தன்னுடன் சேர்த்துக் கொண்டான். கணவன் அசுரனாயினும் அவன் மணம் கோணாமல் பதி பக்தி மிளிர அவனுடன் வாழ்ந்தாள் கோமளை.

இவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர். பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என அவர்களுக்கு பெயர் சூட்டினர் அசுரதம்பதியர். பட்டத்தரசிக்கு நான்கு மக்கள் பிறந்தாலும் சூரன் பல இன கன்னிகைகளுடன் கூடினான். மூன்றாயிரம் மகன்கள் பிறந்தனர். இங்கே இப்படியிருக்கும் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரை அழைத்துக் கொண்டான். அவன் எமனின் மகள் விபூதிகையை திருமணம் செய்தான். இன்னும் பல பெண்களை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றான். தாரகன் மாயாபுரி என்ற நகரை அமைத்தான். அவன் நிருதியின் மகளான சவுரிகை என்பவளைத் திருமணம் செய்ததுடன் மேலும் பல பெண்களையும் சேர்த்துக் கொண்டான். சவுரிகைக்கு அசுரேந்தின் என்ற மகன் பிறந்தான். சூரர்களுக்கு ஆட்டுமுகம் கொண்ட அஜாமுகி என்ற சகோதரி இருந்தாள், அவள் தன் பங்குக்கு இந்த உலகைக் கெடுத்துக் கொண்டிருந்தாள். அழகுள்ளவனோ அழகில்லாதவனோ யாராயிருந்தாலும் அவள் விரும்பி விட்டால் தன்னை அனுபவித்தாக வேண்டும் என கட்டளையிட்டாள். பல அந்தணர்கள் தேவர்கள் என எல்லோரையும் அனுபவித்தாள். ஒழுக்கம் என்ற சொல்லே அவளுக்கு தெரியாது. போதாக்குறைக்கு தன்னோடு பிறந்த அசுர சகோதரர்களுக்கு லோகத்திலுள்ள அழகான பெண்களை எல்லாம் பிடித்து வந்து இரையாக்கினாள். ஒருநாள் கோபக்கார முனிவரான துர்வாசரை சந்தித்தாள்.

கந்தபுராணம் பகுதி -5

அழகாபுரி அரசன் குபேரன் அசுரப்படையின் அத்துமீறல் கண்டு அதிர்ந்து போனான். அவனுக்கு அசுரர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்ற வரலாறு முழுமையாகத் தெரியும். சூரபத்மனை வெல்ல இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவன் பொன்னோடும் மணியோடும் சூரபத்மனைச் சரணடைந்து பத்மாசுரனே நான் இன்று முதல் உங்கள் அடிமை. நீங்கள் விரும்பும் போதெல்லாம் பொருளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டியது என் கடமை. நான் தங்களைச் சரணடைகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த செல்வபுரியின் வனப்பைக் கண்ட அசுரப்படையினர் ஊருக்குள் புகுந்து அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்தனர். தன் நாடு அலங்கோலமானது கண்டு குபேரன் பெரிதும் வருந்தினான். சூரபத்மன் அவனது பேச்சை பொருட்படுத்தவே இல்லை. அனைத்துச் செல்வத்துடனும் படைகள் புறப்படட்டும் என ஆணையிட்டான். குபேரபுரியை அடுத்து அவன் வடகிழக்கு திசை நோக்கிச் சென்றான். அந்த திசைக்கு அதிபதி ஈசானன். இவனை பார்த்த சூரன். அப்படியே ஒதுங்கிக் கொண்டான்.

அசுரர்களிடம், வேண்டாம் இவனை வெல்ல நம்மால் இயலுமா என எனக்குத் தெரியவில்லை. இவனை உற்று நோக்குங்கள். இவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. நமக்கு வரமளித்த சிவனும் முக்கண்ணன். ஒருவேளை அவர் தான் இவரோ என எண்ணத் தோன்றுகிறது. வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் எனப் படைகளை கட்டுப்படுத்தி விட்டு கிழக்கு நோக்கி திரும்பினான். இக்காலத்தில் கூட வாஸ்து முறைப்படி பூஜை அறையை ஈசான முலையில் வைக்க காரணம் இதுதான். இந்த மூலையில் பூஜையறையை வைத்து மனமொன்றி இறைவனை வழிபட்டால் அசுர எண்ணங்கள் மனதை விட்டு அகலும். இறையருளால் தலைக்கு வரும் ஆபத்து கூட தலைப்பாகையோடு போகும் என்பது நம்பிக்கை.

கிழக்கு திசையில் தான் தேவர்களின் தலைமை இடமான இந்திரலோகம் இருந்தது. அசுரப்படை அகோரமாய் கத்திக் கொண்டு அங்கு புகுந்தது. எல்லாரையும் விட்டு விட்டு இந்திரன் ஓடோடிச் சென்று ஆகாய மேகக் கூட்டங்களிடையே தலை மறைவாகி விட்டான். தேவலோகத் தலைநகரான அமராவதி பட்டணத்தை சூறையாடினார்கள் அசுரர்கள். ஒரு அறையில் பதுங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேவமாதர்கள் அசுரர்கள் கண்ணில் பட அவர்களை சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். ஒளிந்திருந்த தேவர்களை கைது செய்து அவர்களின் தலையில் அமராவதி பட்டணத்து செல்வங்களை ஏற்றி சுமந்து வரச்செய்தார்கள். இதையடுத்து அக்னியின் கோட்டைக்குள் புகுந்தன அசுரப்படை. அக்னி தைரியசாலியான அவன் அசுரர்களை நோக்கி தன் நெருப்பு ஜ்வாலையை வீசி அருகில் நெருங்க விடாமல் செய்தான் ஆனால் சூரபத்மனின் தம்பி தாரகன் அக்னியின் மீது பாசுபதாஸ்திரத்தை எய்தான். இது அவனுக்கு சிவபெருமான் கொடுத்த பரிசு. சிவனின் அஸ்திரத்துக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான் அக்னி. காரணம் அந்த அஸ்திரம் நெருப்புக்கே நெருப்பு வைக்கக்கூடியது. தன் அக்னிலோகம் மட்டுமின்றி சர்வலோகங்களும் அந்த அஸ்திரத்தால் அழித்து போய்விடும் என்பதால். அக்னி வேறு வழியின்றி சூரனிடம் சரண்புகுந்தான். தாரகன் அவன் மீது இரக்கப்பட்டான். அக்னியே நீ குபேரனைப் போலவோ இந்திரனைப் போலவோ பயந்து ஓடவில்லை. உன்னால் முடிந்தளவு என்னிடம் போராடினாய். எனவே இந்த பட்டணத்துக்கு நீயே ராஜாவாக தொடர்ந்து இரு. ஆனால் எங்களைப் பொறுத்தவறை நீ பணியாளன். நாங்கள் வரச்சொல்லும் இடத்துக்கு வர வேண்டும். என்று ஆறுதல் சொன்னான். ஆனாலும் இந்த சமாதான பேச்சுவார்த்தை முடிவதற்குள் அசுரப்படைகள் அக்னி பட்டணத்தை அழித்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.

இதையடுத்து தென்திசை நோக்கி திரும்பியது அசுரப்படை தெற்கே இருப்பது எமலோகம் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இங்கு வர வேண்டியவர்கள் இதோ இப்போது வந்து விட்டார்கள். எமன் தன் லோகத்தில் விளைந்த அரிசி பயிறு வகை உளுந்து சகிதமான படை ஊருக்குள் வருவதற்கு முன்பே நுழைவிடத்தில் போய் நின்று விட்டான். முதலில் வந்த தாரகனின் தாழ் பணிந்து ஐயனே நான் நீங்கள் சொல்லும் நபரை மட்டும் தான் பிடிப்பேன். யாருக்காவது விதி முடிந்தால் கூட நீங்கள் கட்டளையிட்டால் அவரை பிடிக்க மாட்டேன் என் பட்டணத்தை மட்டும் ஏதும் செய்து விடாதீர்கள் என்றான். எமன் மீதும் இரக்கம் கொண்ட தாரகன் படைகளை ஊருக்குள் போகக்கூடாது என சொல்லி விட்டான். இப்படியாக நிருதி, வாயு, வருண லோகங்களுக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டினர் அசுரப்படையினர்.

இதன் பின் தாரகனுக்கு ஸ்ரீமன் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்ட லோகத்தை ஜெயிக்கும் எண்ணம் வந்தது. படைகளை வைகுண்டம் நோக்கித் திருப்பினான். தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் படையைப் பார்த்து ஸ்ரீதேவியும் மகாலட்சுமியும் பாருங்கள். அசுரப்படைகள் நம்மை நோக்கி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க முற்படாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு இந்த ஆதிசேஷன் மீது படுத்து விடடால் வீடு வாசல் பற்றி கவலையே கிடையாது. எழுந்திருங்கள் என்றனர் மகாவிஷ்ணு சிரித்தார். தேவியே என்ன கலக்கம். நான் கண்மூடி இருந்தாலும் உலகத்தில் நடப்பதைக் கவனிக்கத் தவறவில்லை. என்ன செய்வது சில சமயங்களில் நாம் பக்தர்களைச் சோதிக்கிறோம். சில சமயம் பக்தன் நம்மைச் சோதிக்கிறான். இந்த அசுரர்கள் பெரும் தவம் செய்து முக்கண்ணனான என் மைத்துனரிடமே வரம் பெற்றவர்கள். அவர்களை என்னால் ஏதும் செய்ய முடியாது. வேண்டுமானால் நானும் அவர்களுக்கு ஏதாவது பரிசு வேண்டுமானால் கொடுக்கலாம். அவர்கள் இங்கு வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்றவராய் கண்களை மீண்டும் மூடிவிட்டார்.

கந்தபுராணம் பகுதி -4

உமையவளும் அங்கே வந்து சேர இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர். அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன் என்றார் சிவன். அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம் கருணைக்கடவுளே தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால் ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும் என்றான்.

சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும் சகல அண்டங்களுக்கும் சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் திருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய் என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும் தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி ஈசனே தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம் என்றான் சூரபத்மன். அசுரத்தலைவனே என்னாலோ என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார்.

அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது. தந்தையே நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள். இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே பாவ புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும் நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும். கொலை செய்யுங்கள் தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள் போரிடுங்கள் இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது? இவற்றைச் செய்யத் தயங்கினால் உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே என்றார்.

சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது. சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள் பத்துலட்சம் குதிரைகள் பல பூதங்கள் இழுத்துச் சென்றன. அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்தது. (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை.

கந்தபுராணம் பகுதி -3

அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர். அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார். காஷ்யபா இதென்ன கோலம் மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காம வயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக அவரைக் குறித்து கடும் தவம் செய் புறப்படு என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார்.

அன்னை மாயையால் தூண்டி விடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாக இருந்தாலும் இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது பத்மாசுரன் அவரிடம் நீங்கள் யார்? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நிற்கின்றீர்கள்? என்று உறுமல் குரலுடன் கேட்டான். சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே அடேய் நீங்கள் யார்? அசுர சிங்கங்களா? என்றார். ஆம் நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரிக்கின்றீர்கள்? என்ற சூரபத்மனிடம் அடேய் சீடர்களே நான் தான் உங்கள் குலத்திற்கே குரு. அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள்? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர்.

பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர் அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார். புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகமாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பத்தாயிரம் யோஜனை பரப்பில் யாகசாலை அமைக்கப்பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பில் இதை அமைத்தான். யாகமாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார். இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு இருந்தது. இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் செய்ய ஆரம்பித்தனர். உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள் சிங்கமுகன் 108 குண்டங்களிலும் தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும் சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான். தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று.

ஆனால் புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன் சிவபெருமானே என் பக்தி நிஜமானதென்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர் விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர். சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார். மக்களே நீங்களெல்லாம் யார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார் சிங்கமுகன் அவரை வணங்கி தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள் அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன் என்றான். அதற்கு முதியவர் கவலை வேண்டாம் மகனே நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது என்றார். சற்றே தலை குனிந்து முதியவராய் வந்தவர் வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. முதியவராக வந்து கங்கையைச் சிந்தி யாக குண்டத்தை அணைத்தார் சிவபெருமான்.

கந்தபுராணம் பகுதி -2

தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா. முனிவரே தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால் உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே உங்கள் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறிவிடுங்கள். நானும் பல உருவங்கைள எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும் என்றாள். காஷ்யபர் அதற்கும் சம்மதித்து பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால் பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது ஆயிரம் முகம் கொண்டவனும் இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது யானை முகம் கொண்ட தாரகாசுரனும் அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர். மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி மொத்தத்தில் இரண்டு லட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர்.

இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன் பெற்றோர் முன்வந்து வணங்கினான். தாயே தந்தையாரே லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம்? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன? சொல்லுங்கள் தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம் என்றான். காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார். மக்களே இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார். இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார்.

தன் மக்களை தாய் மாயா அழைத்தாள். என் அன்புக் குழந்தைகளே பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை இன்பமும் இல்லை சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன். அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும் யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும். எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால் அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் வீரத்தையும் தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில் நானே கொண்டு வந்து தருவேன் என்றாள். தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர். கண் விழித்த காஷ்யபர் அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார். தவசீலரே அவர்கள் மட்டுமல்ல நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர்கள். என் பணி முடிந்தது நானும் செல்கிறேன் என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல அவள் எழுப்பிய மாட மாளிகை கூட கோபுரங்களும் மறைந்தன. காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து காஷ்யபா என் அன்பு மகனே என அழைத்தது ஒரு குரல்.

கந்தபுராணம் பகுதி -1

இந்து சமயத்தில் வேத வியாசர் தொகுத்த புராணங்கள் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும் தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால் இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில் சிவன் பங்கேற்காத போது அவரது அனுமதியின்றி யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில் அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும் சிவனின் பத்தினியுமான தாட்சாயணி தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சணை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால் இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார்.

பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும் அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66 கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் மங்களகேசினியின் தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து பெயரையும் மாயா என மாற்றிவிட்டார். அவளிடம் மாயா நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம் தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல அவனும் அகமகிழ்ந்து மகளை வாழ்த்தி அனுப்பினான்.

சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால் புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா. அவள் எதிர்பார்த்தபடியே காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ? என்று மனதில் கேள்விகள் எழ ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகு சுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி விளையாடுவதைக் கண்ட காஷ்யபர் ஆஹா உலகில் இப்படி ஒரு அழகியா? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால் இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றார்.