ராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இதிகாசமும் தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணமும் யுத்த காண்டம் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. ராமர் பல்லாண்டு நெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தை வால்மீகியும் கம்பரும் நிறைவு செய்து விட்டார்கள். உத்தர காண்டம் பகுதி வால்மீகி மற்றும் கம்பரின் காலத்திற்குப் பின்னால் வந்தவர்களே எழுதினார்கள். உத்தர என்ற சொல்லுக்கு பின்னால் என்றும் கடைசி என்றும் பொருள். உத்தர காண்ட வரலாற்றை உத்தர ராமசரிதம் என்ற பெயரில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பவபூதி என்ற வடமொழி அறிஞர் நாடகமாக இயற்றினார். தமிழில் கம்பரின் சீடரான ஒட்டக் கூத்தர் உத்தர காண்ட வரலாற்றை இயற்றினார். ஒட்டக் கூத்தருக்கு வாணிதாசன் என்ற பெயரும் உண்டு என்று சோழ மண்டலச் சதகத்தில் சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அரசவைப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.
ராமர் தான் ஆட்சி செய்யும் அயோத்தியில் இருக்கும் ஒரு சலவைத் தொழிலாளி அவரது மனைவியிடம் சீதையைப் பற்றித் தவறாக பேசிய பேச்சினால் வருத்தமுற்று கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன் குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், இரு குழந்தைகளுக்கும் வால்மீகி முனிவர் கல்வியும் போர்க்கலைகளையும் கற்பித்தலும், சீதையின் உருவ பொம்மையைத் தனதருகில் வைத்துக் கொண்டு ராமர் அயோத்தியில் அசுவமேத யாகம் செய்ததும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட அசுவமேத யாகக் குதிரைகளை லவ குசர்கள் கட்டி வைத்தலும், யாகக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன் பரதன் லட்சுமணன் ஆகிய மூவரையும் லவ குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் ராமரே நேரில் வந்து லவ குசர்களை சந்தித்து அவர்கள் தனது குழந்தைகள் என்பதைத் தெரிந்து கொண்டு யாகக் குதிரைகளுடன் லவ குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், ராமருடன் திரும்பி செல்வதை விரும்பாத சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி உடலை விடுவதும், ராமர் பல ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர் தனது நாட்டின் பகுதிகளை லவ குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தலும், ராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து பூமியை விட்டு வைகுந்தம் செல்லுவதும் ஆகிய இவை அனைத்தும் உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.
ராமாயணத்தை பல இடங்களில் உபன்யாசங்கள் செய்யும் போது யுத்த காண்டத்துடன் முடித்து விடுவார்கள். உத்திர காண்டம் உபன்யாசத்தில் யாரும் செய்வதில்லை. இதற்கான காரணத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கேட்ட பொழுது அதற்கு அவர் உத்தர காண்டத்தில் ராமர் வைகுண்டம் சென்றார் என்று இருக்கிறது. ராமர் எப்போதும் நம்முடனே இருக்க வேண்டும் வைகுண்டம் செல்லக் கூடாது என்பதால் யாரும் உத்தர காண்டத்தை உபன்யாசமோ பாராயணமோ செய்வதில்லை என்று பதில் அளித்துள்ளார். உத்தர காண்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய பல அபூர்வமான செய்திகள் நிறைய இருக்கிறது அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக அயோத்தியில் ஒரு குடிமகன் சீதையை சந்தேகமாக பேசிய காரணத்திற்காக சீதையை காட்டிற்கு ராமர் அனுப்பி விடுவதிலிருந்து ஒரு நாட்டின் அரசனாக இருப்பவன் 100% மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு மக்களுக்கு ஒரு நாட்டின் அரசியின் மேல் சந்தேகம் இருக்கும் வரை அவள் அந்த நாட்டின் அரசியாக இருக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.