அம்மணி அம்மாள்

திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் கோபால்பிள்ளை ஆயிஅம்மாள் தம்பதிக்கு 1735 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர் அருள்மொழி. இவருக்கு தாண்டவம்பிள்ளை என்ற அண்ணன் ஒருவரும் இருந்தார். அருள்மொழி சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். தினமும் ஊதுவத்தி ஏற்றி வைத்து சாம்பிராணி வைத்து ஓம் நமச்சிவாய என்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே தினமும் தியானம் செய்வார். வீட்டிற்கு வெளியே சென்றாலும் யாரும் இல்லாத இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடியே இருப்பார். பழங்கள் காய்கள் என்று இயற்கை உணவை மட்டுமே சாப்பிட்டார். தான் அமருகின்ற இடம் எந்த இடமாக இருந்தாலும் அங்கு தண்ணீர் தெளித்து தூய்மை செய்த பின்னரே அமர்வார். இதனைக் கண்ட பெற்றோர் இவள் வயது பெண்கள் எல்லாம் தோழிப் பெண்களோடு விளையாடிக் கொண்டும் காட்டில் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவள் மட்டும் அமைதியுடன் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாளே எங்கிருந்து வந்தது இந்தப் பெண்ணிற்கு இவ்வளவு பக்தி என்று குழப்பத்துடனே இருந்தார்கள். இவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அனைத்தும் சரியாகும் என்ற எண்ணத்தில் வரன் பார்க்க ஆரம்பித்து சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தார்கள் தாய் தந்தை மற்றும் உறவினர்கள். ஒரு நாள் அருள்மொழியை பெண் பார்க்க வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் தாய் கூறினார். துடித்துப் போனாள் அருள்மொழி என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தாள். நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை என்று எவ்வளவோ பேசிப் பார்த்தாள் பயனில்லை. பரிசம் போட்டுவிட்டால் எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்தாள்.

ஓம் நமச்சிவாய மந்திரத்தை சொல்லியபடி திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற தெளிவான மனதோடு கால் போன போக்கில் வேகமாக நடக்கத் துவங்கினாள். வீட்டிலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள கோமுட்டிக் குளத்தின் முன் சென்று நின்றாள். எல்லாம் உன் செயல் என்று இறைவனை நினைத்து மந்திரத்தை உச்சரித்தபடி அந்தக் குளத்தில் குதித்து விட்டாள் அருள்மொழி. குளத்தைச் சுற்றி இருந்த வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவள் விழுந்ததைப் பார்த்து ஓடி வந்தார்கள். குளத்தில் குதித்துத் தேடிப் பார்த்தார்கள். அவளது தாய் தந்தை அழுதபடியே குளத்தின் அருகில் அமர்ந்து விட்டார்கள். குளத்திற்குள் அவள் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அனைவரும் எவ்வளவோ சொல்லியும் அவளது தாய் தந்தை குளக்கரையை விட்டு நகர மாட்டேன் என்று குளத்தைப் பார்த்தபடி அங்கேயே இருந்தார்கள். மூன்று நாள் சென்றது. மூன்றாவது நாள் குளம் திடீரென சல சலத்தது. தாயும் தந்தையும் ஆர்வத்தோடு அருகே சென்று பார்த்தார்கள். அங்கே தேஜசான முகத்துடன் உயிருடன் வெளிவந்தாள் அருள்மொழி. செய்தியே கேள்விப்பட்டு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கூடிவிட்டார்கள். அனைவருக்கும் அங்கிருந்த குளக்கரை மணலை எடுத்து கொடுத்தாள் அருள்மொழி. அது அவல் பொரியாக பிரசாதமாக மாறி அனைவரின் கையில் இருந்தது. தனக்கு சிவபெருமானே குருவாக இருந்து யோக நிலையைக் கற்றுத் தந்ததாகவும் தான் ஒரு பெண் சித்தராக மாறி விட்டதாகவும் கூறிய அருள்மொழி தன் பெயர் அம்மணி அம்மாள் என்றும் கூறினாள். திருமணப் பேச்சை அதோடு விட்டார்கள் தாய் தந்தையர். சில நாட்கள் தியானம் பூஜைகள் என்று அமைதியாக சென்றது.

அம்மணி அம்மாளின் இல்லத்தில் உள்ள அனைவரும் ஒரு நாள் அண்ணாமலையாரை தரிசிக்க நடை பயணமாக திருவண்ணாமலை புறப்பட்டார்கள். பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தெரிந்த அண்ணாமலையின் கம்பீரம் அம்மணி அம்மாளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. அனைவரும் கோயிலை வந்தடைந்து பிராகாரங்களை வலம் வந்து அண்ணாமலையார் சந்நிதி முன்பு போய் நின்றார்கள். அங்கே இறைவனின் திருமேனியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட அம்மணி அம்மாள் அர்ச்சகர் தந்த விபூதியை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார். உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களின் திருச்சந்நிதி தரிசனமும் முடிந்தாயிற்று. எல்லோரும் வெளியே வந்தார்கள். ஊருக்குப் புறப்படத் தயாராகி அருள்மொழி வா புறப்படலாம் என்று தாயார் அழைத்தார். அம்மா நான் ஊருக்கு வரவில்லை எனக்கு திருவண்ணாமலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்றார் அம்மணி அம்மாள். வயதுக்கு வந்த பெண்ணை எப்படியம்மா தனியாக விட்டுப்போக முடியும்? உன் விருப்பப்படி உன்னை விட்டுச் சென்றால் ஊரார் நமது குடும்பத்தை கேலி பேசுவார்களே யாத்திரை சென்ற இடத்தில் பெண்ணை விட்டுவிட்டு வந்துவிட்டாள் என்றல்லவா புரளி பேசுவார்கள்? அப்படி ஒரு கெட்டப் பெயர் உன்னால் எனக்கு ஏற்பட வேண்டுமா என்று அழுதார் அம்மணி அம்மாளின் தாயார். எதைப்பற்றியும் கவலைப்படாத அம்மணி அம்மாள் அண்ணாமலையாரின் பரவசத்திலேயே லயித்து வரவில்லை என்று முடிவோடு இருந்தார். அவரது தாயும் தந்தையும் பிறகு சமாதானமாகி தனது உறவினர் வீட்டில் அவரைச் சிறிது காலத்துக்குப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு சென்னசமுத்திரம் புறப்பட்டுச் சென்றார்கள்.

அம்மணி அம்மாள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியே அண்ணாமலையாரை தரிசிக்க தினமும் கோயிலுக்கு வந்து விடுவார். பெரும்பாலான நேரங்கள் அண்ணாமலையார் சந்நிதியிலேயே கழித்தார் நாட்கள் வேகமாக நகர்ந்தன. திருவண்ணாமலையிலேயே நிரந்தரமாகத் தங்கி துறவியாக மாறிவிட்டார் அம்மணி அம்மாள். தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும் கிரிவலம் செல்வதுமாக இருந்தார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் முற்றுப் பெறாமல் அடித்தளத்துடன் இருப்பதை எண்ணிக் கொண்டே இருந்தார் அம்மணி அம்மாள்.

திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர் மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. தற்போது திருவண்ணாமலை கோவிலுக்கு இருக்கும் வல்லாள மகாராஜா என்ற பெயருடைய கோபுரத்தை நிர்மாணித்தவர். இவர் கோவிலின் வடக்கு கோபுரம் கட்ட வேண்டும் என்று அடித்தளம் அமைத்தார். அதன் பின்பு அவர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த கோபுரத்தை அவரால் தொடர்ந்து கட்ட முடியவில்லை. பல வகையில் தடைகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் வருத்தமடைந்த வல்லாள மகாராஜா திருவண்ணாமலையில் இருந்த ஒரு சித்தரிடம் இதுபற்றிக் கேட்டார். அதற்கு அவர் இந்த கோபுரத்தை உன்னால் கட்ட முடியாது. சரியான நேரம் வரும் போது இதனைக் கட்ட இறைவன் அருளால் ஒரு பெண் வருவாள் அவளாளே இந்த கோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பின் வடக்கு கோபுரம் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டார். அதன் பிறகு வந்த எத்தனையோ பேர் அந்த கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்தார்கள் அனைத்தும் முயற்சியுடனே நின்றது.

அம்மணி அம்மாளிடம் வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு என்று ஈசன் ஒருநாள் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் இறைவனின் ஆணையை நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான பணியை ஆரம்பித்தார். அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும் பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தார்கள். சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் ஆரம்பித்தார். ஒரு நாள் அந்த ஊரில் இருந்த ஒரு வியாபாரியின் வீட்டிற்கு சென்ற அம்மணி அம்மாள் கோபுரம் கட்டும் பணிக்கு தங்களால் இயன்றதை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அம்மணி அம்மாளைப் பற்றி தெரியாத அந்த வியாபாரி அவரின் எளிமையான துறவித் தோற்றத்தைக் கண்டு இவர் ஏமாற்றுகிறாறோ என்ற எண்ணத்தில் பணம் கொடுக்க விரும்பாமல் பணம் ஏதும் தற்போது என்னிடம் இல்லை என்றார். இதனைக் கேட்ட அம்மணி அம்மாள் குறிப்பிட்ட பணத்தை அளவாக சொல்லி இந்த பணம் தற்போது உன்னுடைய பணப் பெட்டியில் உள்ளது. சரியாக இருக்கிறதா பார்த்துச் சொல் என்றார். அம்மணி அம்மாள் சரியாக சொன்னதைக் கேட்டு திகைத்த வியாபாரி இவர் ஏமாற்றுக்காரர் இல்லை மிகப்பெரிய ஞானி என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் தன்னால் இயன்றவரை கோபுரம் கட்டும் பணிக்கு பணத்தை கொடுத்தார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது. பொது மக்களிடமும் வணிகர்களிடமும் திரும்ப திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும் பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார் மறுநாளே மைசூருக்கு பயணமானார்.

அம்மணி அம்மாள் மைசூர் அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரின் எளிமையான கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே விட மறுத்தான். அம்மணி அம்மாள் அரண்மனை வாயிலின் ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்தார் காலையில் வந்தவர் மதியம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்திற்கு லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். ஆக ஒரே நேரத்தில் தனது சக்தியால் இரண்டு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் காட்டினார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும் திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும் பொருளும் கேட்க வந்தோம். வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால் ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன் சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து நான் உங்களை உள்ளே விடவில்லையே வெளியில் தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்? என்றான். உடனே மகாராஜா நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார். அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது சபைக்குள் இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார்.

அம்மணி அம்மாள் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார் நன்கு உபசரித்தார். பட்டுப்புடவை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது குதிரைகள் மற்றும் ஓட்டகங்கள் நிறைய பொன்னும் பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா கேட்டுக் கொண்டார். மகாராஜா கொடுத்த அனைத்து பொன் பொருளுடன் மஞ்சவாடிக் கணவாய் என்ற இடத்தை கடந்த பொழுது ஒரு கொள்ளையர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அம்மணி அம்மாள் அவர்களிடம் இந்த பொன் பொருள் அனைத்தும் சிவனுடையது ஆகவே தொடதீர்கள் என்று எச்சரித்தார். இதனை காதில் வாங்காத கொள்ளையர்கள் குதிரைகள் ஒட்டகம் மேல் இருந்த பொன் பொருளை கொள்ளை அடிக்கும் நோக்கில் தொட்டதும் அனைவரின் கண்களும் தெரியாமல் போனது. பயந்து திருந்திய கொள்ளையர்கள் அம்மணி அம்மாளை சரணடைந்து மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அம்மணி அம்மாளும் அவர்களை மன்னித்து தன்னிடம் இருந்த விபூதியை கொள்ளையர்களிடம் கொடுத்தார். விபூதியை பெற்ற கொள்ளையர்கள் தங்களின் நெற்றியில் பூசிக் கொண்டதும் அனைவரின் பார்வையும் மீண்டும் திரும்பி அண்ணாமலையாரின் பெருமையை தெரிந்து கொண்டார்கள். அதன்பின் அனைவரும் அம்மணி அம்மாளுடன் திருவண்ணாமலை வந்து கோவில் கோபுரத்தை கட்ட உதவி செய்ய வேண்டும் என்று அவருடனேயே புறப்பட்டார்கள்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலை அருகை உள்ள மசார் என்ற கிராமத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது ஒட்டகங்கள் தண்ணீர் தாகத்தில் அங்கு இருந்த நீரை குடித்துக் கொண்டிருந்தது. இதனை அங்கு பார்த்த ஒருவர் ஒரு ஒட்டகத்தின் மீது உள்ள மூட்டையை பிரித்துப் பார்த்தார். மூட்டை நிறைய வெள்ளிப் பணத்தைக் கண்டதும் மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு தனது வீட்டில் பூமிக்கு அடியில் பதுக்கி வைத்தார். வெள்ளிப் பணம் இருந்த மூட்டை இல்லாமல் ஒட்டகம் மட்டும் மற்ற ஒட்டகத்துடன் திருவண்ணாமலை சென்று சேர்ந்தது. அம்மணி அம்மாள் திருவண்ணாமலை வந்து சேர்ந்ததும் கொண்டு வந்த பொன் பொருளை சரி பார்த்தார். ஒரு ஒட்டகத்தில் இருந்த மூட்டை மட்டும் காணாமல் இருந்ததைக் கண்டதும் தனது தியானத்தின் வழியாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டார். அடுத்த நாள் அம்மணி அம்மாள் மசார் கிராமத்திற்கு சென்று வெள்ளிப் பணம் பதுக்கி வைக்கப்படிருந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்தவரிடம் நடந்தவற்றை அப்படியே கூறி அனைத்தும் சிவன் சொத்து ஆகவே பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருக்கும் மூட்டையை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். வெள்ளிப்பணத்தை பதுக்கி வைத்தவர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியவே தெரியாது என்று சாதித்துக் கூறினார். அதனைக் கேட்ட அம்மணி அம்மாள் நீ பதுக்கி வைத்திருக்கும் பொருள் அனைத்தும் சிவனுடையது. அது உனக்கு பயன்படாது என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அம்மணி அம்மாள் சென்றதும் தான் பதுக்கி வைத்திருந்த மூட்டையை வெளியே எடுக்க அந்த மனிதர் பூமியை தோண்டினார். அங்கு மூட்டை இருந்த இடத்தில் சாம்பல் மட்டுமே இருந்தது. அந்த வெள்ளிப்பணம் என்ன ஆனது என்று அம்மணி அம்மாள் யாரிடமும் சொல்லவில்லை.

அம்மணி அம்மாள் மைசூர் மகாராஜா கொடுத்த பொன் பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார் அவர் கனவில் தோன்றி கோபுர வேலையைத் தொடர்ந்து செய் தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு என்றார். அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில் அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுத்தார். விபூதி அவரவர்கள் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக பணமாக மாறியது. வேலை செய்யாமல் இருப்பவர்களின் கையில் கொடுக்கப்பட்ட விபூதி விபூதியாகவே இருந்தது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும் இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் செய்து காட்டினார்.

அம்மணி அம்மாளின் விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர். 171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம் கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பேய் கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும். (மேற்கு கோபுரம் என்று அழைக்கப்பட்டது பின்நாளில் பேச்சு வழக்கில் மருவி மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.) திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை அனைவரும் அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த பெயரே நிலைத்து நின்றது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும் கோபுரத்துக்கும் ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரம் பக்கத்தில் வளையம்பட்டு கிராமத்தில் உள்ளவர்களை ஒரு விதமான வியாதி தாக்கியது. மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த விதமான மருந்துகளுக்கும் அந்த வியாதி சரியாகவில்லை. அங்குள்ளவர்கள் அம்மணி அம்மாளிடம் வந்து இந்த வியாதி போவதற்கு ஏதேனும் ஒரு வழி சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். தியானத்தில் சிறிது நேரம் அமர்ந்த அம்மணி அம்மாள் அந்த ஊருக்கு சென்று அந்ந ஊரின் அமைப்பையே மாற்றி அமைத்தார். ஊருக்கு வெளியே சுடுகாடு அமையுமாறு மாற்றி ஊரின் நுழைவுப் பகுதியையும் மாற்றி அமைத்தார். ஊருக்குள் இருந்த ஒரு புராண காலத்து வினாயகர் கோவிலில் ஒரு பலா மரத்தையும் நட்டு வைத்தார். அதன் பின் அந்த ஊரில் இருந்த வியாதி மறைந்து போனது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இன்றும் அந்த வினாயகர் கோவில் உள்ளது.

அம்மணி அம்மாள் பிறந்த சென்ன சமுத்திரத்தில் அம்மணி அம்மாள் கட்டிய குளம் ஒன்று இன்றும் உள்ளது. அந்த குளத்தை சுற்றி அவர் நட்டு வைத்த மரங்கள் இன்றும் உள்ளது. குளத்தின் அருகில் அவருக்கு தனியாக கோவில் கட்டி இன்றும் வழிபட்டு வருகிறார்கள். அம்மணி அம்மாள் விபூதி வைத்திருந்த சிறிய டப்பா மற்றும் அவரது மோதிரம் மைசூர் ராஜா அவருக்கு கொடுத்த புடவை மற்றும் அவர் உபயோகப்படுத்திய சில பொருட்கள் இன்றும் அங்கு உள்ளது. அம்மணி அம்மாள் துறவி போல் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தினார். அம்மணி அம்மாள் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50 வது வயதில் 1785 ஆம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8 வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் சூட்சுமமாக திருவண்ணாமலையில் இருந்து அருளிக் கொண்டிருக்கிறார்.

அம்மணி அம்மாள் திருவண்ணாமலையில் வாழ்ந்த இடம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.