ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 9

ராமர் லட்சுமணனிடம் தம்பியர்கள் அனைவரும் பரதன் ஆக முடியாது. சுக்ரீவனிடம் ஒரு சில குறைகளை அவனிடம் தேடினால் இருக்கலாம். அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சி நமக்கு முக்கியம் இல்லை. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். வாலி சுக்கிரீவனிடமிருந்து அவனுக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான் அதில் தவறு இல்லை. சுக்ரீவன் மனைவியை வாலி ஏன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை சரிவர விசாரிக்காமல் உண்மை என்ன என்று அறியாமல் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு செய்திருக்கிறான். அவனை அழிப்பது அறம் தான் என்று கூறித் தெளிவு படுத்தினார் ராமர்.

ராமர் மரத்திற்கு பின்பு நிற்பதை பார்த்துக்கொண்ட சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கத்த ஆரம்பித்தான். சுக்கிரீவனின் அறை கூவலைக் கேட்ட வாலி வியந்தான். சண்டைக்கு பயந்து ஓடியவன் இப்போது திரும்பவும் வலிய வந்து அழைக்கின்றானே என்று வாலிக்கு வியப்பை அளித்தது. இன்று சுக்ரீவனை அழித்தே விடவேண்டும் என்ற கோபத்தில் கிளம்பினான். வாலியின் மனைவி தாரை அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். எனக்கு எதோ அபசகுனமாக தெரிகிறது. தாங்கள் சண்டைக்கு செல்வது எனக்கு பயமாக இருக்கிறது. அடிபட்டு அவமானப்பட்டு உயிருக்கு பயந்து ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் தைரியத்துடன் தங்களுடன் சண்டையிட வந்திருக்கிறான். அவரது பேச்சையும் கர்ஜனையும் பார்த்தால் ஏதோ அபாயமுயும் சூழ்ச்சியும் இருப்பது போல் எனக்கு தெரிகிறது. அவருக்கு துணையாக யாரையாவது அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று போக வேண்டாம். நாளை காலை ஆலோசனை செய்து யோசித்து முடிவு செய்யலாம். அதன் பிறகு எதிரியுடன் சண்டை போடலாம் என்று கூறி தடுத்தாள். தாரையின் பேச்சு வாலிக்கு பிடிக்கவில்லை. சண்டைக்கு கிளம்புவதிலேயே மும்முரமாய் இருந்தான். தாரை கண்ணிர் வடித்தாள். நமது ஒற்றர்கள் நமது மகன் அங்கதனிடம் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவன் எனக்கு சொன்னான். அவர்கள் சொன்னதை அப்படியே தங்களிடம் சொல்கிறேன் தயவு செய்து கேளுங்கள் என்றாள்.

ராமர் என்பவரும் அவரது தம்பி லட்சுமணனும் அயோத்தியிலிருந்து வந்திருக்கின்றார்கள். மகாவீரனான அந்த மூத்த ராஜகுமாரனை சத்தியவானாகவும் தர்மவானாகவும் அனைவரும் மதிக்கின்றார்கள். அவருடைய நட்பை சுக்ரீவன் இப்போது பெற்றிருக்கிறான். இதனால் அவனது தைரியமும் பலமும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்யக்கூடும். நான் பிதற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது மகன் அங்கதன் இருக்கின்றான். அவனுடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். அவனுக்காகவும் எனக்காகவும் நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து செல்லாதீர்கள் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள். மேலும் உங்கள் தம்பியும் நல்லவன் தானே. அவனை ஏன் விரோதிக்க வேண்டும். உங்களிடம் பக்தியுடன் தானே இருந்தார். அவரை விட நெருக்கமான உறவினர் என்று சொல்ல நமக்கு யாரும் இல்லை. அவரிடம் உள்ள விரோதத்தை மறந்து விட்டு பாசத்தை காட்டுங்கள். அவரிடம் ஒன்றாக இருப்பதே நமக்கு நலம். அவரை அழைத்து பயைழபடி இளவரசு பட்டம் கட்டிவிடுங்கள். எனக்கு விருப்பமான காரியத்தை தாங்கள் செய்ய விரும்பினால் என் பேச்சை கேளுங்கள் புறக்கணிக்காதீர்கள் என்று வாலியை தடுத்தாள் தாரை. வாலி தாரையிடம் பேச ஆரம்பித்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.