ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 8

ராமர் ஒரு மரத்திற்கு பின்பு மறைந்து நின்று கொண்டார். சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கர்ஜனை செய்தான். அதைக் கேட்ட வாலி பெரும் கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். இருவருக்குமிடையே பயங்கரமான சண்டை நடந்தது. சண்டை ஆரம்பித்ததும் இருவரில் யார் சுக்ரீவன் யார் வாலி என்று ராமரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் ஒரே வானர வடிவத்தில் ஒரே விதமான உடைகளையும் ஆபரணங்களை அணிந்து ஒரே விதமாக தங்களது பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் வகையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரில் யார் வாலி என்று தெரியாமல் ராமரால் கொல்ல இயலவில்லை. ராமர் திகைத்து நின்றார். சுக்ரீவன் அடிபட்டு தன் உயிர் போகும் தருவாயில் ராமர் ஒன்றும் செய்யவில்லையே என்று ஏமாற்றமடைந்தான். மதங்க முனிவர் வாலி நுழைந்தால் இறந்து விடுவான் என்று சாபமிட்ட ரிச்யமுக காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடினான் சுக்ரீவன். அதனை கண்ட வாலி சுக்கிரனை விட்டுவிட்டு தன் கோட்டைக்கு திரும்ப சென்றான்.

ராமர் லட்சுமணன் இருவரும் மிகவும் அடிபட்டு துக்கத்திலிருந்த சுக்ரீவனிடம் சென்றார்கள். ராமர் வாலியை கொல்வேன் என்ற சொல்லை தவற விட்டார் என்று ராமரின் மீது கோபத்தில் தரையை பார்த்துக் கொண்டே ராமரிடம் பேசினான். தங்களால் வாலியை கொல்ல முடியாது என்றால் என்னிடம் முன்பே நீங்கள் சொல்லியிருக்கலாம். நான் வாலியுடன் சண்டைக்கு சென்றிருக்க மாட்டேன். உங்களை நம்பி சென்ற நான் இப்போது எனது உடல் முழுக்க காயங்களுடன் உயிர் தப்பி வந்திருக்கின்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான். ராமர் சுக்ரீவனிடம் என்னை கோபிக்க வேண்டாம் நான் சொல்வதை சிறிது அமைதியாக கேளுங்கள். நான் அம்பை வாலியின் மீது விடாததற்கு காரணம் சொல்கிறேன். நீங்களும் வாலியும் உயரம் உடல் பருமன் ஆடைகள் அணிகலன்கள் நடை உடை அனைத்திலும் ஒரே மாதிரி இருந்தீர்கள். சண்டை ஆரம்பித்து விட்ட பிறகு யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை நான் திகைத்து நின்றேன். சிறிதும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றேன். வாலி இவன் தான் என்று எனக்கு உறுதியாக தெரியாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அம்பெய்து அது உங்களை கொன்று விட்டால் என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டேன். மீண்டும் வாலியை சண்டைக்கு அழையுங்கள். உங்கள் இருவரில் யார் வாலி என்று நான் தெரிந்து கொள்ள இப்போது மாற்று ஏற்பாடு செய்து விடுவோம். எளிதில் வாலியை கண்டு பிடித்து நிச்சயமாக கொல்வேன் என்றார் ராமர்.

ராமர் லட்சுமணனிடம் அழகிய பூக்கள் நிறைந்த கொடியை கொண்டு வந்து சுக்ரீவனிடம் கொடுத்துவிடு. சுக்ரீவன் அதை அணிந்து கொண்டு சண்டை போடட்டும். அதை வைத்து யார் வாலி என்று எளிதில் கண்டு பிடித்து கொல்வேன். இன்று வாலி மரணித்து பூமியில் விழுவதை நீ பார்ப்பாய் சுக்ரீவா என்றார். சுக்ரீவன் சமாதானம் அடைந்து மறுபடியும் உற்சாகம் அடைந்தான். லட்சுமணன் பூங்கொடியை சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான். கிஷ்கிந்தைக்கு மீண்டும் சென்றான் சுக்ரீவன். ராம லட்சுமணன் பின்னாலேயே சென்றார்கள். வாலியை மீண்டும் அறை கூவி அழைத்தான் சுக்ரீவன். ராமரும் லட்சுமணனும் ஒரு மரத்திற்கு பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் போல் தெரியவில்லை. தனது அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால் அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போல் இருக்கிறது என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.