சுலோகம் -97

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-50

சமமான மனநிலையில் இருப்பவன் பாவம் மற்றும் புண்ணியத்தை இந்த உலகத்திலேயே விட்டு விடுகிறான். அதிலிருந்து விடுபடுகின்றான். ஆகையால் சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்கள் திறம்பட செய்யப்படுவது ஆகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பலனை எதிர்பார்க்காமல் சமமான மனநிலையில் செயல்களை செய்பவனை அச்செயலினால் வரும் பலனான பாவம் புண்ணியம் இரண்டும் அவனை பாதிக்காது. பாவ புண்ணியம் இரண்டும் அவனை நெருங்குவதில்லை. அர்ஜூனா இந்த சமமான மனநிலை என்ற யோகத்தைப் பெற நீ முயற்சிக்க வேண்டும். இந்த யோகம் என்பது செயல்களை திறமையுடன் செய்யப்படுவது ஆகும். இந்த திறமை என்பது என்னவென்றால் செயலை செய்யும் போது இந்த செயலின் பலனான வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரத்தில் மனதை வைக்காமல் வெற்றி தோல்விகளையும் மகிழ்ச்சி துயரத்தையும் இறைவனிடத்தில் அர்ப்பணிப்பதும் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 170

கேள்வி: உங்களுக்கு சிஷ்யன் யார்?

எம்மை பொருத்தவரை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறத யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறதோ அவனெல்லாம் எமது சிஷ்யர்களே அதனையும் தாண்டி எமது சேய்களே.

கேள்வி: சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தில் சொல் அக விளக்கது என்பதன் பொருள் என்ன?

அதிலேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா. சொல் அக விளக்கது சோதி உள்ளது. அகத்திலே ஜோதியை பார்க்க வேண்டும். சிவாய நம நம சிவாய நமோ நாராயணா எனப்படும் அந்த மந்திர சொற்கள் அகத்திலே இருந்து சொல்ல சொல்ல சொல்ல அகமே ஜோதி அகம் ஆகி ஜோதி விளக்கமாக எரியுமப்பா.

கேள்வி: கோவில்களில் சில சிலைகள் பின்னமாகி இருப்பது ஏன்?

திதாக சிலா ரூபங்கள் வந்தாலும் முந்தைய சிலா ரூபங்களை அகற்றாமல் அதுவும் ஆலயத்தின் ஒரு புறத்தே வைக்கப்பட வேண்டும். முற்காலத்தில் ஆலயத்தின் மூலஸ்தானத்திலே குறிப்பாக அத்தனை மாடக் கோவில்களின் அடியினில் ரகசிய நிலவரை அமைக்கப்பட்டிருக்கும். புதிய சிலா ரூபங்களும் பின்னமான சிலா ரூபங்களும் வைக்கப்பட்டிருக்கும் என்றாலும் பின்னமான சிலா ரூபங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

கேள்வி: இருப்பதில் கொடு கொடுப்பதில் எடு விளக்கம் என்ன?

இருப்பதில் கொடு இது சாதாரண நிலை. இருப்பதையே கொடு இது உயர்வு நிலை. கொடுப்பதில் எடு என்றால் என்ன பொருள்? ஒரு மனிதன் கொடுத்துக் கொண்டே இருந்தால் அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை அவனுக்கு ஆகாத விதி காலம் வரும் போது அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவோம் இதுதான் எங்கள் அர்த்தம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 168

கேள்வி: சோற்றுக் கற்றாழை பற்றி:

அதிக குளிர்ச்சியான பொருள் என்றால் அது சீதளம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதற்கு சரியான மருத்துவ ஆதாரம் இல்லையப்பா. இந்த சோற்றுக் கற்றாழை வயிற்றுப் புண் தொண்டைப் புண் ஆற்றும். இது ஒரு அற்புதமான மூலிகை. இதன் சாற்றை பருகுவதால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. எல்லா வயதினரும் குறைந்த அளவு இதைப் பருகலாம்.

கேள்வி: ஐயனே உங்களை தரிசிக்கும் ஆவல் அதிகமாக உள்ளது. விரைவில் தரிசனம் தர வேண்டும்?

இறைவனை உள்ளத்தில் தரி. யாம் ஒரு வேளை உனக்கு சிக்கலாம்.

கேள்வி: நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை?

இறைவன் சிந்தனையை உள்ளத்தில் வைத்துக் கொள். தரி என்றால் என்ன? விபூதியை தரி என்றால் விபூதியை தரித்து கொள் என்று பொருள். ஆடையை தரி என்றால் ஆடையை அணிந்து கொள் என்று பொருள். இறையை தரி என்றால் இறை சிந்தனை மற்றும் இறைவனுக்கு பிடித்த செயல்களை செய் என்று பொருள். அதனால் இறைவனை உள்ளத்தில் தரி. அப்போது யாம் சிக்கலாம் தரி யாம் சிக்கலாம் தரிசிக்கலாம்.

கேள்வி: அருணகிரிநாதரின் அக்கா ஆதியை பற்றி:

உத்தமமான பெண்மணி. அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது. வெளியில் தெரிந்த புண்ணியவதிகளும் புண்ணியவான்களும் குறைவு. வெளியில் தெரியாத மகான்களும் ஞானிகளும் அதிகம்.

ஆப்பூர் மலை

ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் உயர்ந்த மலைப் பகுதியில் தான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறார். பெருமாள் சுமார் ஐந்தடி உயரத்தில் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். பெருமாளை பக்தர்கள் ஆப்பூரார் என்றும் அழைக்கின்றனர். இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று பெருமாளுக்கான திருமஞ்சனத்துக்கு தங்கு தடையின்றி மூலிகை கலந்த தனிச்சுவையுடன் சுரந்து கொண்டிருக்கிறது. ஒரு பிராகரம் மற்றும் முன் மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சந்நிதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பெரிய திருவடியான கருடாழ்வார் கருவறைக்கு முன்னால் பெருமாளை நோக்கி கும்பிட்டப்படி மேற்கு நோக்கி காணப்படுகிறார். மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள் மற்றும் அஷ்ட ல‌ட்சுமிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம் காணப்படுகின்றன. இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நிதி கிடையாது. இங்கு பெருமாளும் லட்சுமியும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதாலும் பெருமாள் லட்சுமியின் சொருபமாகவே இருந்து மகா லட்சுமியை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெருமாளுக்கு புடவையை தவிர வேறு எந்த வஸ்திரங்களும் சாற்றப்படுவதில்லை. அதனால் தான் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற பெயர் வந்தது. அகத்திய முனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வலப்புறம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆப்பூர் கிராமம். இங்குதான் மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி அமைந்திருக்கிறது இந்தப் பெருமாள் கோயில். பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை ஔஷதகிரி எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பியுள்ளன. சுமார் எண்ணூறு வருடத்தில் இருந்து ஆயிரம் வரை பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒளஷதகிரி அதாவது மூலிகை மலை இதன் அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவனுக்கு ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற பெயரும் உண்டு. இந்த இருமலைகளும் ஒன்றோடொன்று வரலாற்று தொடர்புடையதாக விளங்குகிறது.

ராமாயணத்தில் இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன் கண் கலங்கினார். ராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால் குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஔஷதகிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால் இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணம்.

மலைப் பாதை துவங்கும் இடத்தில் இருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல் விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 508 படிகள் இம்மலையில் உள்ளது. ஔஷதகிரியின் உச்சியில் ஸ்ரீநித்ய கல்யாண பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் மூலிகைக் காற்றின் வாசம் பரவசமூட்டும். பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெருமாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட மகரிஷிகளும் இந்த மலையில் தங்கி இருந்து தவம் செய்து பேறு பெற்றுள்ளார்கள். பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம் ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 169

கேள்வி: அஷ்டமா சித்து விளையாட்டுகள் பற்றி:

மெய்ஞானத்தை நோக்கி செல்கின்ற மனிதனுக்கு நீ கூறுகின்ற அஷ்டமா சித்துக்கள் சர்வ சாதாரணமாக கிட்டும். ஆனால் சித்துக்கள் கிட்டிய பிறகு அதிலே லயித்து மனிதன் ஞானத்தை விட்டு விடுகிறான். எனவே நீ ஞானத்தை நோக்கி செல். வேறு எண்ணங்கள் தேவையில்லை.

கானகம் (காடு) செல். நீரில் இரு. நெருப்பில் இரு. ஒற்றை பாதத்தில் நில். ஆகாயத்தில் தவம் செய் என்றா நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்? மனம் தளராத பிரார்த்தனையைத் தான் செய்யச் சொல்கிறோம். என்றாலும் இவை எல்லாவற்றையும் விட மிகக்கடினம் ஒன்று இருக்கிறது. மிகப்பெரிய நீரோட்டத்தின் உள்ளே சென்று மூச்சை விடாமல் தவம் செய்யும் முறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்தால்தான் முக்தி என்றால் யாராவது செய்வார்களா? இந்த கஷ்டங்கள் எல்லாம் லோகாய வாழ்க்கையிலேயே மனிதனுக்கு கழிந்து விடுகிறது என்பதை புரிந்து கொள்.

கேள்வி: காரைக்கால் அம்மையார் பற்றி:

எல்லா உயிரினங்களுக்கும் தாய் தந்தை என்றால் முக்கண்ணனை (சிவபெருமான்) காட்டுவார்கள். ஆனால் பாதத்தை வைக்க அஞ்சி சிரத்தை (தலையை) வைத்து நடந்து வந்த அவளைப் பார்த்து என் அம்மையே என்று பகர்ந்தார் இறைவன் என்றால் அவரின் பெருமையை யாம் என்னடா பகர்வது?

கேள்வி: திருநாவுக்கரசரின் அக்கா திலகவதியைப் பற்றி:

முன்னர் உரைத்த பெண்மணியையும் (அருணகிரிநாதரின் அக்கா ஆதியை உத்தமமான பெண்மணி என்றும் அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது என்றும் குருநாதர் கூறியிருந்தார்). இவளையும் நிலுவையில் (தராசில்) நிறுத்தினால் எடை ஒன்றாகவே இருக்கும்.

சுலோகம் -96

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-49

சம நிலையில் உள்ள மனதுடன் கூடிய யோகம் என்பதை விடப் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்தது. ஆகவே அர்ஜூனா சமமான புத்தியில் தஞ்சம் அடைவாய். பலன் மூலம் உந்தப்பட்டு கர்மம் செய்பவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரம் என்று எதுவும் இல்லாமல் சமமான மனநிலையில் செய்யப்படும் செயலானது மிகவும் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மிகவும் தாழ்வானது. ஆகவே அர்ஜூனா சமமான மனநிலையில் எப்போதும் இருந்து செயல்களைச் செய். பலனை எதிர்பார்த்து செயல்களை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பலனை அனுபவிக்க வேண்டி பிறப்பெடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சீரணி நாகபூசணி அம்மன்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள சீரணியில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகம் ஒன்றைத் தன்னுடைய திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள்.

சீரணி நாகபூசணி கோவில் உள்ள இந்த இடத்தில் அக்காலத்தில் சாத்திரம் தெரிந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் நாகபூஷணியம்மை இயந்திரம் வைத்துப் பூசை செய்து சாத்திரம் சொல்லி வந்தார். அவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம் இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை இராமுத்தர்க்கு பிடிக்காத காரணத்தினாலும் இயந்திரம் இரவில் கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார் இராமுத்தர். ஒருநாள் இராமுத்தர் நன்றாய் மதுபானம் அருந்தி விட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் போட்டுச் சென்று விட்டார். நாகபூஷணி அம்மன் இங்குள்ள அன்பர்கள் பலரின் கனவிற் தோன்றி நான் நயினை நாகபூஷணி எனக்கு கோவில் கட்டுங்கள் என்று காட்சியளித்தாள். பலர் நாங்கள் வறியவர்கள் தாயே எங்களால் எவ்வாறு இயலும் என அன்பர்கள் கூறி வருந்தினார்கள்.

சீரணி நாகபூசணி அம்மன் பக்தனாகிய முருகேசபிள்ளை என்பவரின் கனவிலே பல முறை வெளிப்பட்டு தன் திருவருள் தன்மைகளைக் காட்டியருளினாள். ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு இவ்விடத்திலே எம்மை வைத்து வழிபட்டு வருவாயாக என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி தன் கனவில் வருவதை பிறருக்குச் சொல்லாமல் தம்முள்ளே வழிபட்டு வந்தார். 1896 ம் ஆண்டு விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்று இரவு தேவி கனவிலே வெளிப்பட்டு உனக்குச் சொன்னவைகளை நீ உண்மை என்று நம்பினாய். அதன் உண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா என்று கூறியருளினாள். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த வறண்ட பட்டு போன மரமாகத் தோன்றியது. அதையுணர்ந்த அவர் அதில் இளநீர் குரும்பைகள் இல்லையே தாயே. இல்லாத இளநீரை நான் எப்படி தருவது என்றார். அதற்கு அன்னை நீ மரத்தின் அருகிலே சென்று பார். தேவையானது தோன்றும் என அருளினாள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார். தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில இளநீரைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மனும் அதிக தாகமுடையார் போலப் பருகினாள். பின்னர் அவரை நோக்கி அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார் இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்திற்கு பிறகு பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு விரும்பிய சித்திகளை எல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களை எல்லாம் காணிக்கையாக கொடுத்து வழிபடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கு. கோவில் பூர்த்தியாகுவதற்கு யாம் அருள் செய்வோம் வேலையை தொடங்கு தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும் நாடு நலம்பெறும் வாழ்வு வளம் பெறும் என்றாள். மேலும் உனது மனம் புனிதமாகும் வகையில் ஒரு மந்திரமும் உபதேசம் செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தாள்.

சீரணி நாகபூசணி அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்தை மறுநாள் காலையில் தொண்டிப் பார்த்தார். அங்கு ஒரு சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். 1896ம் ஆண்டு ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே பூஜையை தொடங்கி காலம் தவறாமல் பூஜித்து செய்து வந்தார். நான்கு திசைகளிள் இருந்தும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து நாகபூஷணியம்மையை வழிபட்டார்கள். இவ்வரலாறு குறித்தும் குட்டம் காசம் ஈளை முதலான கன்ம நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டு தங்களது நோய்கள் தீர்த்துக் கொண்டார்கள். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் செய்து பிள்ளைச் செல்வம் பெற்றார்கள். மேலும் அம்பாளின் அருட்செயல்கள் பற்றிப் பல கர்ண பரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன. சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962 அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

சீரணி நாகபூசணி அம்மன் கோவில் கோபுரம் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. 1951 1965 1983 ஆம் ஆண்டுகளில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவது நயினை நாகபூஷணியம்மை மற்றும் சீரணி நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

கச்சாலீஸ்வரர் கோயில்

மூலவர் கச்சாலீஸ்வரர் கச்சபேஸ்வரர். அம்பாள் அழகம்மை சௌந்தராம்பிகை. தலவிருட்சம் கல்யாண முருங்கை. தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இடம் சென்னை பாரிமுனை. அம்பாள் அழகம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும் புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு 63 நாயன்மார்களுக்கும் தனி மண்டபம் உள்ளது. தத்தாத்ரேயர் துர்க்கை ஆதிசங்கரர் மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளனர். கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன் தனது மனைவியர்களான உஷா பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள் 28 நட்சத்திரங்கள் 60 வருடங்கள் நான்கு யுகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால் கச்சபேஸ்வரர் என்றும் கச்சாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கச்சபம் என்றால் ஆமை என பொருள். மூலவர் கச்சாலீஸ்வரர் 1. கூர்மாசனம் 2. அஷ்ட நாகாசனம் 3. சிம்மாசனம் 4. யுகாசனம் 5. கமலவிமல ஆசனம் என்ற ஐந்து ஆசனங்களின் மீது அமர்ந்துள்ளார். இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் ஐந்து முகங்களுடன் சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாக மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும் அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். கோவிந்தராஜ பெருமாள் தனி சன்னதியில் இருக்கிறார்.

ஆங்கிலேயர்களிடம் மொழி பெயர்ப்பாளராக இருந்த துபாஷி தலவாய் செட்டியார் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. என்ன செய்வேன் இறைவா என தவித்து நின்றார். ஆனால் மழையோ ஒரு வாரம் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய மேலும் ஒரு வாரம் பிடித்தது. துபாஷி தலவாய் செட்டியார் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். அதிசயமாக அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப் பட்டிருந்தன தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். இதனை அறிந்த துபாஷி தலவாய் செட்டியார் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பித்தார். பின் தன் துணைவியார் உதவியுடன் இங்கு 1725 இல் கோவில் கட்ட ஆரம்பித்து 3 ஆண்டுகளில் கட்டி முடித்தார் துபாஷி தலவாய் செட்டியார்.

சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயில் 1950ம் வருடம் தீக்கிரையான போது புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்ட போது இப்போது சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைக்கு இக்கோவிலுக்குள் இந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் புதிய ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை நகரில் அமைந்த முதல் ஐயப்பன் சன்னதி இதுவே. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின் போது இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 167

கேள்வி: இறைவனின் கருவறையை புகைப்படம் எடுப்பது குற்றமா?

முழுக்க முழக்க தவறு என்று கூற முடியாது. புற செயல்கள் இறையை எதுவும் செய்ய முடியாது. ஆனால் சில வகையான கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சில ஒழுங்குகள் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. பல்வேறு ஆலய நிர்வாகங்களே இவ்வாறு நிழற்படத்தை எடுத்து வியாபாரம் செய்கிறது. என்றாலும் நீதி மாறும் போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த சூழலைப் பொறுத்து இதனை பின்பற்றிக் கொள்ளலாம். சித்தர்களைப் பொறுத்தவரை மனிதனின் கேவலமான எண்ணங்கள் குறுக்கு புத்தி சுயநலம் இவைதான் தோஷத்தையும் பாவத்தையும் உண்டாக்கக் கூடியவை. எனவே உள்நோக்கமும் தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சுலோகம் -95

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-48

அர்ஜூனா பற்றினை நீக்கி வெற்றி தோல்விகளை சரிசமமாக எண்ணி தொழில்களை செய். நடுநிலையான எண்ணத்துடன் தொழில்களை செய்வதே யோகம் எனப்படும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு செயல் செய்தாலும் அதன் விளைவாக வரும் பலனான வெற்றியையும் தோல்விகயையும் சரிசமமாக எண்ணி தொடர்ந்து செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி வந்தால் மகிழ்வதும் தோல்வி வந்தால் துயரப்படாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது யோகம் எனப்படும் இந்த யோகத்தில் இருந்து நீ உன் கடமையை செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.