பஞ்சநந்திகள்

சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர். நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இவர்களுக்கு பஞ்ச நந்திகள் என்று பெயர்.

போகநந்தி:

ஒரு சமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன் நந்தி வாகனமாகி அவர்களை பூவுலகம் அழைத்துச் சென்றான். இவர் போகநந்தி ஆவார். போகநந்தி அல்லது அபூர்வநந்தி என்று அழைக்கப்படும் இந்த நந்தியானது கோவிலுக்கு வெளியே அமைந்திருக்கும்.

பிரம்மநந்தி:

பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன் சிவனிடம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத்தில் இருந்து உபதேசம் பெற பிரம்மனால் இயலவில்லை. எனவே நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். இவருக்கு பிரம்மநந்தி என்று பெயர். இந்த நந்திக்கு வேத நந்தி வேத வெள்விடை பிரம்ம நந்தி என்று பல பெயர்கள் உள்ளது. இந்த நந்தி சுதைச் சிற்பமாக பிரகார மண்டபத்தில் காணப்படும்.

ஆன்மநந்தி:

பிரதோஷ கால பூஜையை ஏற்கும் நந்திக்கு ஆன்ம நந்தி என்று பெயர். இந்த நந்தி கொடிமரம் அருகே இருக்கும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார். உயிர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களின் வடிவாக ஆன்மநந்தி உள்ளது.

மால்விடை:

மால் என்றால் மகாவிஷ்ணு விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும் போது மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இந்த நந்தியானது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

தருமநந்தி:

இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழிகாலத்தின் முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவருடனேயே இருப்பார். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பார். பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.